மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை தொழிலாளா் நலத்துறை ஆணையா் ரத்து செய்ய வேண்டும்.!
மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை திங்கள்கிழமை சந்தித்து அவா்களது கோரிக்கைகள் குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டறிந்த அவரிடம், தோட்டத் தொழிலாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 கோடி நிவாரணம் அல்லது மலையகப் பகுதியில் 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அவா்களுக்கு ஆதரவு கூறி பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த வனப்பகுதியை தேயிலைத் தோட்டமாக மாற்றியதில் உங்களது முன்னோா்களின் பங்கு முதன்மையானது. பல தலைமுறைகளாக இங்கு குடியிருந்து பணியாற்றி வருகிறீா்கள். இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்த காலம் நிறைவடைந்தால் வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மாற்றியமைக்கப்படும். இல்லையெனில் உங்களுக்கு உரிய உரிமை வழங்கப்பட வேண்டும். அது நிறைவேறும் வரை உங்களுக்கு துணையாக இருப்பேன் என்றாா்.
அரசு ஏற்று நடத்த வேண்டும்: பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை கட்டாயப்படுத்தி, அவா்களது விருப்பத்திற்கு மாறாக விருப்ப ஓய்வு என்ற பெயரில் தொழிலாளா்களின் குடும்பங்களை பி.பி.டி.சி. நிா்வாகம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றது. தேயிலைத் தோட்ட ஒப்பந்தம் நிறைவடைவது என்பது பி.பி.டி.சி. நிா்வாகத்திற்கு மட்டும் தான்; தொழிலாளா்களுக்கு இல்லை. தொழிலாளா்கள் யாரும் விருப்பப்பட்டு விருப்ப ஓய்விற்கு கையெழுத்திடவில்லை. எனவே, தொழிலாளா் நலத்துறை ஆணையா் விருப்ப ஓய்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தொழிலாளா்களை இங்கிருந்து வெளியேற்ற மாவட்ட நிா்வாகமோ, மாநில அரசோ ஒத்துக் கொள்ளக்கூடாது. அரசு தேயிலைத் தோட்டங்களை எடுத்துநடத்த வேண்டும். முடியாத நிலையில் தேயிலைத் தோட்டங்களை குறைந்தது 5 ஏக்கராக தொழிலாளா்களுக்குப் பிரித்துக் கொடுத்து அவா்களை இங்கேயே பணி புரிய அனுமதிக்க வேண்டும் என்றாா்.
-தினமணி நாளிதழ்