மானாமதுரை – மேலப்பிடாவூர் சம்பவம்.! காவல் துறை அறிக்கை.! குற்றவாளிகளுக்குச் சாதகமாகி விடக்கூடாது..!
364 Views
![]()
புதிய தமிழகம் கட்சி பத்திரிகை / ஊடக செய்தி.!!
மானாமதுரை – மேலப்பிடாவூர் சம்பவம்.!
காவல் துறை அறிக்கை.!
குற்றவாளிகளுக்குச் சாதகமாகி விடக்கூடாது..!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடாவூர் மாணவன் அய்யாசாமி தனது சொந்த கிராமத்தில் பொது வீதியில் இரு சக்கர வாகனத்தில் பயணித்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சாதிய வன்மத்தோடு தாக்கியதைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சம்பவத்தின் உண்மைத் தன்மையைப் பூசி மெழுகி அறிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார். காவல் துறை உயர் அதிகாரிகளே இது போன்ற குற்றப் பின்னணியில் ஒளிந்திருக்கக்கூடிய மேலாதிக்க சாதிய உணர்வுகளை வெளிக்கொணராமல் ‘தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் அல்லது நகரங்களில் சாதிய வேறுபாடுகளே இல்லை; தமிழ்நாடே; சமத்துவ பூங்காவாக விளங்குகிறது’ என்பதைப் போன்று சித்தரித்துக் கொடுக்கும் தவறான அறிக்கைகளே சாதிய அடாவடித்தனம் அதிகரிப்பதற்கும், அரிவாள் கலாச்சாரம் ஓங்குவதற்கும், ஏழை எளிய மக்களின் அரசியல் – அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
மேலப்பிடாவூர் சம்பவத்துக்கு வாய் தகராறுதான் காரணம் எனில் எதிரியின் கைக்கு அவ்வளவு பெரிய ஆயுதம் எங்கிருந்து வந்தது? பட்டப்பகலில் ஒரு வீச்சரிவாளைக் கையிலே வைத்துக் கொண்டு நடமாட எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? வாய் தகராற்றுக்குக் கொலை செய்யத் துணியும் தைரியத்தை யார் கொடுக்கிறார்கள்? காயம்பட்ட மாணவனைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின்பு அவர்கள் குடும்பமே உழைத்துக் கட்டிய வீட்டை அடித்து நொறுக்குவதற்குக் காரணம் என்ன ? அதற்கும் போதை தான் காரணமா? காயம்பட்ட மாணவனும் பறையர் சமுதாயத்தைச் சார்ந்த இந்து தான். எதிரிகளின் சாதியைக் குறிப்பிடாமல் அவர்கள் சாதி இந்து என்று குறிப்பிட்டு ஏன் ஒட்டுமொத்த இந்துக்களையும் குற்றவாளிகளாக நினைக்கின்றீர்கள்?
ஒரு வழக்கு சம்பந்தமான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே காவல் துறை அதிகாரிகளே அது வாய் தகராறு, குடிபோதை தகராறு என்று ஊடகங்களில் வெளிப்படுத்துவது என்ன நியாயம்?தீண்டாமைகள் சார்ந்த வன்கொடுமைகள் வெளிப்பார்வைக்கு தெரியாது. அதன் பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடியவர்களுக்கு மட்டுமே தெரியும் ?
எனவே, மேலப்பிடாவூர் சம்பவத்தில் 1989-ம் ஆண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும்; குற்றவாளிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையின் அறிக்கையும், நடவடிக்கையும் குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.02.2025






