40% ஊழல் – கர்நாடக தேர்தல் முடிவு – இந்தியாவிற்கே ஒரு பாடம்!

செய்திகள்
s2 32 Views
  • டாக்டர் கிருஷ்ணசாமி

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • டாக்டர் கிருஷ்ணசாமி
Published: 14 May 2023

கோவையில் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் பற்றி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் திருமதி சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத் தலைவர்கள் சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கர்நாடகத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. எப்பொழுதுமே ஒரு கட்சி ஆட்சியில் இருக்கிறது என்றால் ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏற்படும். அந்த வகையில் ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிய அளவுக்கு செயல்பட்டு பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இருந்தாலும் கூட இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த கட்சியின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். அதாவது 40% ஊழல் என்ற குற்றச்சாட்டு வைத்து தான் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரமே நடைபெற்று உள்ளது. எனவே மாநில கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் ஊழல் தான் என்பது இதிலிருந்து தெரிகிறது.

எவ்வளவுதான் வளர்ச்சி பணிகளை செய்தாலும் கூட ஒரு கட்சி மாநில அளவில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுகின்ற பொழுது அந்த கட்சியால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. இது கர்நாடகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஒரு பாடம். ஏன் தமிழகத்திற்கு கூட என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களே எஜமானர்கள், மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதில் கர்நாடக தேர்தலும் ஒன்று. தற்போது வெற்றி பெற்றவர்களும் நாளை ஊழலில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பதே இது ஒரு பாடம்” என அவர் தெரிவித்துள்ளார்.