நான்கு சுவருக்குள் சுற்றி வருபவர் அல்ல கவர்னர்!

”கவர்னர் மாளிகையில் நான்கு சுவருக்குள் சுற்றி வருகிற கவர்னர் அல்ல; மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கவர்னராக ரவி இருக்கிறார்” என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைமையில் நடந்த பேரணிக்கு தி.மு.க. தவிர அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன். சென்னையில் நடந்த பேரணியில் அ.ம.மு.க. – ஐ.ஜே.கே. பார்வர்டு பிளாக் என நான்கைந்து கட்சிகள் தான் பங்கேற்றன. பேரணி முடிந்ததும் கவர்னர் ரவியை சந்தித்தேன்.
தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் கனிம வளம் என துறை வாரியாக நடந்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் பட்டியலை அவரிடம் வழங்கினேன். மக்களின் வரி பணம் வீணாவதை கவர்னரிடம் எடுத்து கூறினேன். முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டேன்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர சுப்பிரமணிய சாமிக்கு அன்றைய கவர்னர் சென்னா ரெட்டி அனுமதி அளித்ததை உதாரணமாக மேற்கோள் காட்டினேன். என் கடமையை நான் செய்து விட்டேன்; கவர்னர் தன் கடமையை செய்வார் என நம்புகிறேன்.
கவர்னர் மீது தமிழக மக்கள் நல்ல மதிப்பு வைத்துள்ளனர். என் மீது நல்லெண்ணம் கொண்டவர். கோவையில் நான் நடத்தும் ‘லோட்டஸ் வேர்ல்டு’ பள்ளி ஆண்டு விழாவில் கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கவர்னர் மாளிகையில் நான்கு சுவருக்குள் சுற்றி வருகிற கவர்னர் அல்ல அவர். மக்களோடு மக்களாக பயணித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கவர்னராக உள்ளார். மதம் ஜாதிக்கு அப்பாற்றப்பட்டவர். மாநிலங்கள் ஒற்றுமை சமூக ஒற்றுமையை விரும்புகிறார்.
‘திராவிடம் காலாவதியாகி விட்டது’ என கவர்னர் கூறியதை வரவேற்கிறேன். திராவிடம் என்பது மாயை; அது தோன்றவும் இல்லை முடியவும் இல்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றது. அதே கூட்டணி மீண்டும் உருவாகும். மக்கள் நீதி மய்யம் கட்சி பா.ம.க. – தே.மு.தி.க. என எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணியில் இடம்பெறலாம்.
எந்த கூட்டணியிலும் இல்லாமல் நடுநிலையாக உள்ள கட்சிகளும் வேறு கூட்டணியில் இருக்கிற கட்சிகளும் அ.தி.மு.க. – பா.ஜ. கூட்டணியில் சேரலாம்.
தென் மண்டலம் கொங்கு மண்டலத்தில் 20 முதல் 25 லோக்சபா தொகுதிகளை தேர்வு செய்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை மேற்கொள்கிறோம்.
தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுவேனா அல்லது என் மகன் ஷியாம் போட்டியிடுவாரா என்பதை கட்சி செயற்குழு தான் விடை சொல்லும். ஷியாமை அரசியலில் நான் வளர்க்கவில்லை; அவராக வளர்கிறார்.
வரும் ஜூன் 15 முதல் 3 மாதங்கள் தொடர்ச்சியாக 1000 பொதுக்கூட்டங்களை நடத்துகிறேன். முதல் பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் துவங்குகிறது.
சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவது என்பது அவர்களின் சொந்த முடிவு. பழனிசாமியுடன் நான் நெருக்கமாக இருக்கிறேன். அதனால் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
அமைச்சரவை மாற்றம் செய்வது முதல்வரின் கடமை உரிமையாக இருக்கலாம். அதை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தியாகராஜனுக்கு எந்த தகுதி அதிகமாக இருக்கிறது என நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது; நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்க எந்த தகுதி குறைந்து விட்டது என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
சமூக நீதி ஆட்சி நடக்கிறது என பெருமையாக சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அமைச்சர் பதவியிலிருந்து நாசர் நீக்கப்பட்டதும் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் தராமல் எங்கயோ இருந்தவரை அமைச்சராக்கி உள்ளார்; சமூக நீதி எங்கே இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி -தினமலர்