மது ஒழிப்பு வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

சென்னை: ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது கொள்முதல் முதல் சில்லரை விற்பனை வரை, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கவர்னரிடம், புதிய தமிழகம் கட்சியினர் மனு கொடுத்தனர்.
‘தமிழகத்தில், சட்ட விரோதமாக, 24 மணி நேரமும் செயல்படும், 5,000த்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும்; பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன் நேற்று முன்தினம் கூடினர்.
கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில், கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியை துவக்கினர். பேரணியில், அ.ம.மு.க., மாநில நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் செந்தமிழன், முன்னாள் வாரியத் தலைவர் சி.ஆர்.சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். புறப்பட்ட வழியிலேயே, போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.
கவர்னரிடம் கிருஷ்ணசாமி அளித்த மனு: தமிழகத்தில், 1937ம் ஆண்டு பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது. 1971ல், குறுகிய நோக்கத்தில், மதுவிலக்கு தளர்வு செய்யப்பட்டது. இதன் விளைவாக, 70, 80 சதவீதம் வரை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களையும், மதுப் பழக்கம் தொற்றி விட்டது.
இதனால், தமிழ் சமுதாயம் பல்வேறு பண்பாடு, கலாசார சீரழிவுக்கு ஆளாகிறது. மது கொள்முதல் முதல் சில்லரை விற்பனை வரை, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் ஊழல் குறித்து, சட்டத்திற்குட்பட்டு, கவர்னர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி – தினமலர்