அந்தர் பல்டி கட்சியும்.! அரைவேக்காடு ஆட்சியும்.!

அறிக்கைகள்
s2 495 Views
  • இந்து அறநிலையத் துறை

    சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்

  • இந்து அறநிலையத் துறை
Published: 13 Jun 2022

Loading

சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் 3000 முதல் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும் கி.பி10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடைய காலத்தில்தான் அக்கோவில் முழு வடிவம் பெற்றதாகத் தெரிகிறது. இப்பெரும் கட்டமைப்புகளை பல்லாயிரக்கணக்கானவர்களுடைய உடல் உழைப்பிலும் பொருட் செலவிலும் ஆட்சியாளர்களால் தான் நிறைவேற்றி இருக்க முடியும். எனினும் அக்கோவிலின் நிர்வாகம் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கோவிலில் வரும் உண்டியல் உட்பட இதர வருமானங்கள் ஆகியன குறித்து முறையான கணக்கு வழக்குகள் இல்லை. எனவே கோவிலை மாநில அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டு 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களுடைய ஆட்சியின் போதே அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் வரை சென்ற அந்த வழக்கு இறுதியாக கோவில் நிர்வாகம் தீட்சிதர்களின் கீழ் தான் இருக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அதுபோன்ற தீர்ப்பை அளித்தாலும் இன்று வரையிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த மாநில அரசுகள் அக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சிகளை மட்டும் விட்டுவிடவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவில் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டது. அந்தக் கோவிலின் வடிவமும் தோற்றமும் அண்டத்தின் செயல்பாட்டையும், மனித உடல் மற்றும் பாகங்களின் இயக்கத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்பதே அதன் முக்கிய அம்சம். சிதம்பர ரகசியம் என்பது எவ்வாறு அந்த கோவிலின் சிறப்போ,அதேபோல அக்கோவிலின் தெற்கு வாயில் மூடப்பட்டது முதல் சிற்றம்பல மேடை வரையிலும் பல்வேறு சர்ச்சைகளும் உண்டு. இறைவழிபாடு ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப் படுவது. பன்னெடுங்காலம் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் மீது உருவானது. எனவே எந்த ஆலயமும் எவ்வித ரகசியத்திற்கோ எவ்வித புகாருக்கோ அப்பாற்பட்டதாக இருந்திட வேண்டும்.இதுபோன்ற ஆலயங்கள் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய விவசாயிகளின் நிலங்களிலிருந்தும்; அவர்களின் உழைப்பிலிருந்தும் உருவாக்கப்பட்டவை. இந்த ஆலயங்களை எழுப்புவதற்கு எவ்வளவோ பேர் தங்களுடைய உழைப்பைக் கொடுத்திருப்பார்கள்; வியர்வை சிந்தி இருப்பார்கள்; உயிரையும் உடைமையையும் அர்ப்பணித்து இருப்பார்கள். எனவே கோடான கோடி மக்களின் நம்பிக்கையும், அடையாளச் சின்னமுமாக இருக்கக்கூடிய கோவில்கள் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் அல்லது நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அங்கு முறைகேடுகள் அறவே இருக்கக் கூடாது. அரசின் கீழ் இருக்க வேண்டும் என்பது அரசின் வாதம். தீட்சிதர்களே நிர்வகிக்க உரிமை பெற்றவர்கள் என்பது தீட்சிதர்களின் வாதம். கோவிலை யார் வேண்டுமென்றாலும் இப்போது நிர்வகிக்கட்டும். ஆனால் அங்கு முறைகேடுகள் இருக்கின்றன என்று பல வருடங்களாக புகார்கள் தொடர்ந்து எழுகின்ற பொழுது, அது ரகசியம் என்றோ; அதை வெளிப்படுத்த முடியாது என்றோ தீட்சிதர்கள் சொல்வது நியாயமாகாது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கோவில் நிர்வாகம் செய்திடும் உரிமை தீட்சிதர்களுக்கு உண்டு என்று தீர்ப்புக் கூறினாலும், முறைகேடு நடக்கிறது என்று புகார் வந்தால் உரிய ஆவணங்களைப் பார்வையிடும் உரிமை அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உண்டு என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

2021-ம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி பதவியேற்ற திமுக அரசு வேண்டா வெறுப்பாக சில காரியங்களைச் செய்கின்றது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களின் பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் பலரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அவற்றை மீட்க வேண்டும் என்று நாம் உட்பட பலரும் தொடர்ந்து வலியுறுத்திய பிறகு ஆங்காங்கே சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். அந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தாலே இந்த அரசு 5 லட்சத்துக்கு மேற்பட்ட கோவில் நிலங்களை மீட்டெடுக்க முடியும்; அசையும், அசையா சொத்துக்களையும் மீட்டெடுக்க முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு வேறு வேறு விதங்களில் இவர்கள் தலையிடுகிறார்கள். எல்லாமே அரைகுறையும் அரைக் கிணறு தாண்டுவது போலவும் தான் இருக்கின்றன.

’வெளியிலே புலி வீட்டிலே எலி’ என்பதற்கு இணங்க வெளியில் பிரதமரையும், பாஜகவையும் சாடுகிறார்கள்; இந்து மதத்திற்கு சனாதன முத்திரை குத்தி அதையும் சாடுகிறார்கள்; அதே சமயத்தில் ’பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன்’ என்பதற்கு இணங்கவும் நடக்க முயற்சி செய்கிறார்கள். அதனுடைய விளைவு தான் அண்மைக்காலத்தில் திமுக – திராவிட மாதிரி அரசு அடித்த அந்தர் பல்டிகள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தில் சிலைகளும் வைக்கப்பட்டு இருப்பதாகக் காரணம் காட்டி அதை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர முயற்சி எடுத்து, பின் நீதிமன்றத்தின் மூலம் அடி வாங்கி மீண்டும் அது அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. ’கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதற்கு இணங்க அந்த விவகாரத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல திமுக அரசு கடந்து சென்றது.

அதேபோல மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு நகர்ப்புற வலம் வருவது பன்னெடுங்காலமாக இருந்து வரும் வழக்கம். அதை மனித உரிமை மீறல் என்று சில அமைப்புக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்குத் திருவாரூர் கோட்ட ஆட்சியர் தடைவிதித்து ஆணை பிறப்பித்தார். அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்பதற்கிணங்க மாநில அரசே ரத்து செய்தது. இதன் விளைவாக யார் கண்ணிலும் தெரியாமல் நடைபெற்ற நிகழ்ச்சி இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வகையில் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தில் ஏற்பட்ட பின்னடைவை மூடி மறைப்பதற்காக இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனையைத் தொட்டு இருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுமேயானால் அதை வெளிப்படையாக அறிவித்து அதைக் களைய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. நந்தனார் நுழைந்த வாசல் என்பதற்காக தெற்குவாசல் மூடப்பட்டு இருந்தால் அது கண்டிப்பாகத் திறக்கப்பட வேண்டும். திருச்சிற்றம்பல மேடை ஏறி தரிசனம் செய்வதில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றால் அதையும் நீக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது.

கோவில் நிர்வாகம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இந்த மண்ணில் மக்களால் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு தலைசிறந்த சைவ ஆலயத்தில் சடங்கு சம்பிரதாயங்களைக் கூறி எந்த மாந்தரையும் ஒதுக்குவதற்கோ, பாகு படுத்துவதற்கோ தீட்சிதர்களுக்கும் உரிமையில்லை. சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னென்ன பொருளாதார முறைகேடுகள் அல்லது வழிபாட்டில் தடை என்பவற்றை வெளியே சொல்லாமல் எப்படியாவது தீட்சிதர்களை மட்டும் அங்கிருந்து வெளியேற்றி விட்டால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இந்த அரசு செயல்படுமேயாயின் அதுவும் எவ்விதத்திலும் நியாயமில்லை.

ஏற்கனவே கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு விஷயங்களில் அரைகுறையாகவும் அரைக் கிணறு மட்டுமே தாண்டி வரக்கூடிய இந்த அரசு சிதம்பரம் நடராஜர் கோவில் கணக்கு வழக்கு ஏடுகளைப் பார்வையிடுவதிலும் அரைகுறையாகவே செயல்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. 1967 ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கடந்த 55 ஆண்டுகள் திமுக அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மிகவும் நுணுக்கமாக நடக்கக் கூடிய சில பிரச்சனைகள் வேண்டுமென்றால் பார்வைக்கு வராமல் போய் விடலாம். ஆனால், பெரும் முறைகேடுகள் எப்படித் தெரியாமல் போய்விடும்? ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அங்கு முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் அறநிலையத் துறை அதிகாரிகளே தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். அவர்கள் கணக்கு வழக்குகளைக் காண்பிக்கத் தவறும்பட்சத்தில் சட்ட ஆலோசகர்களை கொண்டே உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் பார்வையிட மாநில அரசு சார்பாக வலியுறுத்தலாம். அதை விட்டுவிட்டு ஐந்தாறு அறநிலையத் துறை அதிகாரிகளைக் கோவிலுக்குள் அனுப்பி அவர்களை தீட்சிதர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காததால் ’போன மச்சான் வெறுங்கையோடு திரும்பி வந்தான்’ என்பதைப்போல அதிகாரிகள் ஒரு நாள் எல்லாம் காத்திருந்து அவமானப்பட்டு வெறுமனே திரும்பி வந்து உள்ளார்கள். தமிழ்நாடு அரசின் இது போன்ற அண்மைக்கால நடவடிக்கைகள் இந்த அரசின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஏதோ ஒன்றைச் செய்ய நினைக்கிறார்கள்; ஆனால் ஆழ்மனதில் இவர்களை பயம் தொற்றிக்கொள்கிறது; டெல்லியிலிருந்து நடவடிக்கை வந்துவிடுமோ என்ற அச்சம் ஆட்டிப்படைக்கிறது.

இந்து மதத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம் என்று காட்டிக் கொள்வதன் மூலமாக ஒரு தரப்பினரைத் திருப்திப்படுத்தி ஏமாற்றித் தொடர்ந்து வாக்குகளை வாங்கிக் கொள்ளலாம் என்பது ஒரு மனம். இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக அல்லது இந்து ஆன்மீக வாதிகளுக்கு எதிராக, நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தால் ஆட்சி கலைப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இன்னொரு பக்கம். அதனால்தான் ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். தருமபுரத்தில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து பல்லக்கு தூக்கத் தடை விதித்து விட்டு, ஆதினத்தோடு பேசி வருகிறோம் சுமுகமாக முடியும் என்றும் பேசுவது. சிதம்பரம் கோவிலில் முறைகேடு நடக்கிறது எனவே அதை ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளை அனுப்பி விட்டு, தீட்சிதர்களிடம் மோதல் போக்கைக் கையாள மாட்டோம் என்றும் சொல்கிறார்கள். போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படும் என்று ஒரு நாள் சொல்வது; உயர்த்தும் எண்ணம் இல்லை என்று மறுநாள் சொல்வது. வீட்டு வரி உயர்வு இருக்காது என்று ஒரு நாள் சொல்வது; உயர்வு தேவை என்று இன்னொரு நாள் சொல்வது. புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்வோம் என்று ஒருநாள் சொல்வது; மறுநாள் இல்லை! இல்லை!! நாங்கள் தனி பாடத்திட்டத்தை வகுப்போம் என்று சொல்வது. இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என்று ஒருநாள் சொல்வது; விரும்பினால் படித்துக்கொள்ளலாம் என்று மாற்றி மாற்றி இன்னொரு நாள் பேசுவது. இப்படித்தான் காலையில் ஒரு பல்டி, மாலையில் ஒரு பல்டி எனத் தொடர்ந்து பல்டி மேல் படி அடித்துக் கொண்டிருக்கிறது இந்த மாடல் அரசு. இதனுடைய ஒட்டுமொத்த வெளிப்பாடு மோடியையும் பாஜகவையும் அரசியலுக்காக வெளியே தான் எதிர்க்கிறார்கள்; உள்ளே குலை நடுக்கத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுதான் ’வெளியிலே புலி வீட்டிலே எலி’ என்பதாகும்.

திராவிட மாடல் அரசின் அண்மைக்கால செயல்பாடுகள்
அனைத்தும் அரைகுறை; அரைக்கிணறு!
ஆழ்மனதில் அச்சம்!!
அதனால் அடிக்கிறது அடிக்கடி அந்தர்பல்டி.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD., Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.06.2022