கார்கில் போரின் 527 வெற்றி வீரர்களுக்கும், 22 ஆம் ஆண்டு வெற்றி தினத்தில் புதிய தமிழகம் புகழஞ்சலி!
தன்னையும், தன் குடும்பத்தை காட்டிலும் இந்தியத் தேசமே பெரிதெனக் கருதி தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த அம்மாவீரர்களின் தியாகத்தை புதிய தமிழகம் கட்சி என்றென்றும் போற்றும்!
தேசமே ஒவ்வொருவரின் தேகமாகட்டும்!
261 Views
![]()
22 ஆம் ஆண்டு வெற்றி தினத்தில் புதிய தமிழகம் புகழஞ்சலி!
1999 ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 26 ஆம் தேதி வரையிலும் கார்கில் பகுதியில் நடைபெற்ற யுத்தத்தில் உயிர் நீத்த 527 இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் 22 ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தில் புதிய தமிழகம் கட்சி தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரிலிருந்து 200 கி.மீட்டர் கிழக்கேயும், லடாக்கிலிருந்து 250 கி.மீட்டர் மேற்கேயும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தரைமட்டத்திலிருந்து 2676 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ள மிக முக்கியமான இந்தியப் பகுதி கார்கில் ஆகும். பொதுவாக மே, ஜூன், ஜூலை மாதங்கள் பனி உருகும் காலம் என்பதால் கார்கில் பகுதிகளில் இந்திய-பாகிஸ்தான் படைகள் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்பது இரு நாட்டுப் படைகளுக்குள்ளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். எனவே, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த ஆண்டு மே மாதம் கார்கில் பகுதியில் இந்திய வீரர்கள் எவரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் படையினரும், அவர்கள் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களும் இந்திய எல்லைக்குள் உள்ள கார்கிலுக்குள் பல மைல்கள் ஊடுருவி பெரும் யுத்தத்திற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்.
கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தானியர்கள் ஊடுருவுவதற்கு மிக முக்கிய அரசியல் மற்றும் ராணுவ காரணங்கள் உண்டு. வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன படைகளின் நடமாட்டங்களைக் கண்காணிக்க ஏதுவாக இயற்கையாகவே கண்காணிப்பு கோபுரம் போன்று இந்திய நாட்டுக்குள் அமைந்துள்ள பகுதி சியாச்சின் ஆகும். எனவே சியாச்சின் பகுதியை லடாக் மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளில் இருந்து துண்டித்து இந்திய இராணுவ நகர்வை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் கார்கிலை கைவசப்படுத்துவது ஒன்றுதான் மிக முக்கியமான இராணுவ நகர்வாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமான பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு தீவிரவாதிகள் பனிப் பொழிவுகளுக்குள் இரகசியமாக ஊடுருவி கார்கில் பகுதியில் இரகசிய முகாம்களை அமைத்துக் கொண்டனர்.
கார்கிலைச் சுற்றிய சில பகுதிகளில் 1999-மே 6 அன்று 10 வரையிலான பாகிஸ்தான் ஊடுருவல் காரர்களை இந்திய ராணுவம் கண்டறிந்தது. மே 7ஆம் தேதி அந்த பகுதியில் நிலை கொண்டிருந்த இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் பீரங்கி படையினர் தாக்குதல் தொடுத்தனர். மே 8 ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. மே 9-ல் பாகிஸ்தான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. மே 10-14-ம் தேதிகளில் கார்கிலை சுற்றி ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகள் மற்றும் மறைவு முகாம்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் மற்றும் தீவிரவாதிகள் மேலும் ஊடுருவி பெரிய யுத்தத்திற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட மோசமான கார்கில் போரினுடைய அனைத்து அம்சங்களையும் கணித்த இந்திய ராணுவம் தனது முழு பலத்தையும் கொண்டு ஊடுருவல் காரர்களை இந்திய எல்லையிலிருந்து முற்றாக அப்புறப்படுத்தக் கூடிய பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 60 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற கார்கில் போரில் ஊடுருவல் காரர்கள் அனைவரும் ஒழிக்கப்பட்டு, சியாச்சின் பகுதியைத் துண்டிக்க வேண்டும் என்ற தீய முயற்சி முறியடிக்கப்பட்டு, போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 1999-ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போரில் இந்தியா வெற்றிக் கொடியை நாட்டியது. கார்கில் போரில் சாதாரண ராணுவ சிப்பாய் முதல் உயர் ராணுவ அதிகாரிகள் வரை 527 மாவீரர்கள் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்து இருக்கிறார்கள். அன்று கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற, 22வது வெற்றி தினத்தில் அந்நிய ஊடுருவல் காரர்களை எதிர்த்துப் போரிட்டு தங்களது இன்னுயிரை இந்த தேசத்திற்காக நீத்த அனைத்து இந்திய இராணுவ வீரர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி தனது வீரவணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறது.
தன்னையும், தன் குடும்பத்தை காட்டிலும் இந்தியத் தேசமே பெரிதெனக் கருதி தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த அம்மாவீரர்களின் தியாகத்தை புதிய தமிழகம் கட்சி என்றென்றும் போற்றும்!
தேசமே ஒவ்வொருவரின் தேகமாகட்டும்!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
26.07.2021






