பதக்கங்களுக்கான ஏக்கம் இருந்தால் மட்டும் போதாது; இந்தியா அதை அடைவதற்கான ஆக்கமும், ஊக்கமும் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்க வேண்டும்!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் சானு அவர்கள் இந்திய தேசத்தை பதக்கப்பட்டியலில் அடையாளப்படுத்தியுள்ளார். அவருக்கு நமது பாராட்டுக்கள்!
303 Views
![]()
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியத் தேசம் ஒவ்வொரு நாளும் இன்று எத்தனை பதக்கங்களை பெற்றோம்; இல்லை, நாளையாவது பதக்கங்களை பெறுவோமா? என்ற ஏக்கத்துடன் தொலைக்காட்சியையும், இணையத்தையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. சானுவின் வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு, கூடுதலாக ஒரு பதக்கம் கூட, இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை. இன்னும் பத்து தினங்கள் இருக்கிறது. நிச்சயமாக இந்திய வீரர்கள் தங்களுடைய அதீத திறமைகளை வெளிக்கொணர்ந்து வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை கொள்வோம். ஆனால் நம்பிக்கை என்பது வேறு; அதற்கான உத்திரவாதம் என்பது வேறு.
உலகின் பல நாடுகள் தாங்கள் முன்கூட்டியே எந்தெந்த விளையாட்டுப் பிரிவுகளில் தங்கங்களை பெற முடியும்; வெள்ளிகளை, வெண்கலங்களைப் பெற முடியும் என கணித்து விடுகிறார்கள். ஆனால் நம்மால் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாத நிலைக்குக் காரணம் என்ன? விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அது ஒரு நாட்டின் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடிய அம்சம் என்று பார்க்கும் பார்வை நமது தேசத்தில் இன்னும் உருவாகவில்லை என்பதே இந்நிலைக்குக் காரணமாகும்.
ஒலிம்பிக் போட்டி நீண்ட நெடிய வரலாறு கொண்டது. கிரேக்க நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நகரான ஏதேன்சில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. கி.மு 776-ல் துவங்கி கி.பி 393 வரையிலும் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் அதன் பிறகு ஏறக்குறைய 1503 ஆண்டுகள் நடைபெறவில்லை. மீண்டும் 1896-ல் அதே ஏதேன்ஸ் நகரில் 12 நாடுகளிலிருந்து 750க்கும் மேற்பட்ட வீரர்களுடன் நவீன ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. 1900-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து இந்தியா இன்று வரையிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு, இதுவரை 8 தங்கம் உட்பட 28 பதக்கங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.
10 முதல் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறிய நாடுகள் கூட ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று; பதக்கங்களை வென்று; தங்களின் முகவரியைச் சரியாகப் பதிவு செய்து வருகின்றன. ஆனால், இந்தியா இன்னும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அளவிற்கு மனநிலையை வளர்த்துக் கொள்ளவில்லை. உலக மக்களிடத்தில் மனிதநேயம் வளர வேண்டும்; மனிதர்களிடத்தில் புதைந்து கிடக்கும் மனித வளங்களையும், உடல் வளங்களையும் போற்றி, பேணிப் பாதுகாக்க வேண்டும்; அவற்றை எல்லாம் வெளிப்படுத்துவதற்கான தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் பண்டைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப் பெற்றது. ’FASTER-HIGHER-STRONGER’ என்ற மும்முனை நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு பிரான்சை சேர்ந்த Baron Pierre de Coubertin என்பவரது முன் முயற்சியால் நவீன ஒலிம்பிக் புத்துயிர் பெற்றுள்ளது.
1896-லிருந்து முதல் மற்றும் இரண்டாவது உலக யுத்தத்தைத் தவிர, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் ஏதாவது நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 100 ஆண்டுகள் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி புள்ளி விவரங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் எந்த நாடுகள் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறதோ, அந்த நாடுகளெல்லாம் கல்வி, பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஆகிய அனைத்து தளங்களிலும் அதிக ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாகவே இருக்கின்றன என்பதே தெளிவாகிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் அடையாளத்திற்காக மட்டும் பங்கு பெறுகிறோம் என்ற நிலையிலிருந்து மட்டும் பார்க்காமல், பதக்கங்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும். இந்தியா ஓரிரு விளையாட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவதைத் தவிர, வேறு எந்த விளையாட்டிலும் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை. கல்வியில் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்காக கல்வி கட்டமைப்புகளில் கவனம் செலுத்துகிறோமோ? தொழில் முன்னேற்றத்திற்கு தொழில் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துகிறோமோ? விண்வெளியில் கவனம் செலுத்துகிறோமோ? அதேபோல விளையாட்டுத் துறைகளிலும் அதற்கு சமமாகவோ அல்லது கூடுதலாகவோ கவனம் செலுத்தத் தவறுகிறோம்.
ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுவதற்காக 10 முதல் 15 ஆண்டுகள் வரை பல நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல், சாதி, மத, இன, உள்ளூர், வெளியூர் என எவ்வித பாகுபாடும் இல்லாமல் இளம் பிராயத்திலிருந்தே விஞ்ஞான முறைப்படி தேர்வு செய்து அவர்களுக்கு எல்லா செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டு ’நாற்றுப் பண்ணையில் நாற்றுகளை வளர்ப்பது போல’ விளையாட்டு வீரர்களை அந்நாடுகள் வார்த்தெடுக்கிறார்கள். அவர்களுடைய எல்லா விதமான திறன்களையும் முழுமையாக வெளிக்கொணர்ந்த பிறகே, ஒலிம்பிக் போட்டி போன்ற சர்வதேசப் போட்டிகளில் களம் இறக்குகிறார்கள். அதனால் அவர்களால் எளிதாக பதக்கங்களைத் தட்டிச் சென்று விட முடிகிறது.
நமது நாட்டில் சர்வதேச போட்டிகளுக்கு என்று தயார் செய்வதற்கான தேசிய அளவிலான ஒரு கொள்கை முதலில் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும். சர்வதேச குறியீடுகளுக்கு ஏற்ப ஒலிம்பிக்கில் உள்ள அனைத்துப் போட்டிகளுக்கும் பயிற்சி பெறும் விதமாக மாவட்டத்திற்கு ஒரு மையமாவது முழுமை பெற்று உள்ளதா? என்றால் இல்லை. நமது நாட்டு விளையாட்டு வீரர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது. பல்வேறு வீரர்கள் மத்திய, மாநில அரசின் காவல்துறை அல்லது ஏதாவது வேறு துறைகளில் பணிபுரிந்து கிடைக்கக்கூடிய மாதாந்திர சம்பளத்தைக் கொண்டு தங்கள் குடும்பத்தை பாதுகாத்தும்; அவர்களும் சத்தான உணவுகளை உட்கொண்டு, பயிற்சிகளை மேற்கொள்ளவும் முடிவதில்லை. ’ஊரில் இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதை போல மத்திய, மாநில அரசுகளின் விளையாட்டுத்துறை முக்கியமற்ற துறைகளாகவும், மிகக் குறைந்த நிதி ஆதாரங்களை ஒதுக்கும் துறைகளாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றன.
இதையெல்லாம் தாண்டியும் நமது விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேர்ச்சி பெற்றுக் கலந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் விளையாட்டுத் துறையில் நமது அடையாளம் மற்றும் வலிமையை உலகளவில் காண்பிக்க வேண்டுமென்றால், நாம் அதில் பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டும் என்பது மிக மிக முக்கியமானதாகும்.
விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்ற பிறகு மத்திய, மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு சில கோடிகளைக் கொடுக்கிறார்கள் அதில் தவறில்லை, இன்னும் கூடுதலாகக் கூட கொடுக்கலாம். ஆனால் அவர்கள் பயிற்சி பெறும் காலத்தில் அடிப்படைத் தேவைகளான காலணிகள், உடைகள், உணவுப் பொருட்கள், தங்கி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை யாரும் செய்து கொடுப்பதில்லையே? இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளச் சென்ற வீரர், வீராங்கனைகளின் பொருளாதார நிலைகள் உண்மையிலேயே கவலை அளிக்கக்கூடியதாகவும், வருத்தப்படக் கூடியதாகவும் இருந்தது. எனவே மத்திய, மாநில அரசுகளின் பார்வைகள் ஒட்டு மொத்தமாக மாற வேண்டும்.
2029 மற்றும் 2033-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நமது விளையாட்டு வீரர்களைத் தயார் செய்ய இப்போது இந்த நிமிடத்திலிருந்தே அனைத்து முயற்சிகளும், முதலீடுகளும் செய்யப்பட வேண்டும். ஆரம்ப பள்ளிகளிலிருந்து விளையாட்டு வெறும் ஒரு பாடமாக இல்லாமல், படிப்பின் ஒரு அங்கமாகவே மாற்றப்படவேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பணிபுரியும் இடங்கள் என அனைத்திலும் விளையாட்டுக்கான நேரமும், இடமும் முறைப்படி அமைக்கப்பட வேண்டும்.
விளையாட்டு வீரர்களை இளம் பருவத்திலேயே தேர்ந்தெடுத்து அவர்களுக்கான முழு செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொண்டு, சர்வதேச தரத்தில் உள் விளையாட்டு அரங்கங்கள், வெளி விளையாட்டு மைதானங்களை அமைத்து பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் அது போன்ற வீரர்களின் வாழ்க்கைக்குத் தேவையான உத்தரவாதத்தையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
நம்முடைய இந்தியத் தேசம் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் இந்த ஆண்டு நிறைவேறவில்லை என்றாலும். 2029 மற்றும் 2033-ல் ஆம் ஆண்டில் நடைபெறும் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்திலும் முதலிடம், ஒட்டுமொத்த பதக்கத்திலும் முதலிடம் என்ற நிலையை அடைய இந்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும்; அதற்கான நோக்கமும் அரசுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.07.2021






