செப்டம்பர் 11 – தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது 67 வது நினைவு நாள்.! இழந்த அடையாளங்களையும், அதிகாரத்தையும் மீட்டெடுக்க சிவப்பு – பச்சைக் கொடியேந்தி புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணி திரண்டு வாரீர்..!

அறிக்கைகள்
s2 276 Views
  • Sep 11
  • Sep 11
Published: 07 Sep 2024

Loading

செப்டம்பர் 11 – தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது 67 வது நினைவு நாள்.!
இழந்த அடையாளங்களையும், அதிகாரத்தையும் மீட்டெடுக்க சிவப்பு – பச்சைக் கொடியேந்தி புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணி திரண்டு வாரீர்..!
தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் அறைகூவல்.!

1993 ஆம் ஆண்டு துவங்கி, கடந்த 31 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ”மது, புகை, போதை இல்லா புதிய தமிழகம் படைப்போம்” என்ற முழக்கம் தாங்கிய டி-ஷர்ட்டுகள் அணிந்து ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாக மதுரையிலிருந்து தியாகியார் நினைவிடம் செல்லுகின்ற வரையிலும் நமது பயணத்திற்கு எண்ணற்ற இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு மதுரையிலிருந்து மதியம் ஒரு மணிக்குப் புறப்பட்ட நாம் பல்வேறு இடையூறுகளின் காரணமாக இரவு 8:00 மணிக்குத் தான் நினைவிடத்திற்குச் செல்ல முடிந்தது.

1993 ஆம் ஆண்டு நாம் அஞ்சலி நிகழ்ச்சியைத் துவங்கிய பொழுது மிகக் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்! ஆனால், அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தியதன் விளைவாக, தமிழகத்தில் லட்சோப லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய ஒரு மிகப்பெரிய நினைவு நாள் நிகழ்ச்சியாக இப்பொழுது உருவெடுத்து இருக்கிறது. நம்முடைய முயற்சியினால் ஏற்பட்ட இந்த நிகழ்விற்கு எவரும் பாராட்ட வேண்டும் என்று நாம் அன்றும் எதிர்பார்க்கவில்லை; இன்றும் எதிர்பார்க்க மாட்டோம். ஆனால், அதற்கு எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என எதிர்பார்க்கிறோம்.

தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை பொருத்தமட்டிலும் புதிய தமிழகம் கட்சியின் நிகழ்ச்சியாகும். இது முழுக்க முழுக்க நம்முடைய ஆழ் மனதில் பொதிந்து கிடக்கும் உண்மையான உணர்வு, விசுவாசத்தின் அடிப்படையில் நாம் செலுத்துகின்ற அஞ்சலியாகும். அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அற்ப மனம் படைத்தோர் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்து விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தோடு நமது வாகனங்களுக்கு ஊடாக வாகனங்களை இயக்கி நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பரமக்குடிக்கு செல்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியை செவ்வனே நடத்திட முழு ஒத்துழைப்பு நல்குமாறு நமது மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர். செல்வகுமார் அவர்கள் காவல்துறை தென்மண்டல உயர் அதிகாரிகளையும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்துத் தெளிவுபடுத்தி இருக்கிறார். பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகிறோம். எனவே புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சூழ்நிலை மற்றும் நேரத்தின் அருமை கருதி காலை 11 மணிக்குள்ளாகவே மதுரை வந்தடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வேன், பேருந்துகள் எதுவாக இருந்தாலும் அந்தந்த பகுதி காவல் நிலைய அதிகாரிகளிடம் முதல் நாளே அனுமதி பெற்று பயணத்தை எளிதாக்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களில் வரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் பெயருடன் தங்களுடைய மாவட்டம், ஒன்றியம், கிளை குறிப்பிட்டு பேனர் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அரசு பேருந்தில் வரக்கூடியவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் அரசு பேருந்து பணிமனை அதிகாரிகளை அணுகி உரிய அனுமதியைப் பெற்றுத்தர வேண்டுகிறோம்.

நாம் இந்த ஆண்டு நிகழ்ச்சியை மாலை 3:30 மணிக்குள்ளாக நிறைவு செய்யத் திட்டமிட்டு உள்ளோம். எனவே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்கள் எவரும் நினைவிடத்திற்கு முன்கூட்டியே செல்வது, பின் நமது ஊர்வலத்திற்கு எதிரே நடந்து வருவது, மீண்டும் உடன் வருவது போன்ற செயல்களை எல்லாம் தவிர்த்து விட்டு, ஆண்களும், பெண்களும் நமது கட்சி சீருடை அணிந்து அணிவகுத்து பார்த்திபனூரில் அல்லது காட்டுப் பரமக்குடியில் நம்மோடு இணைந்து கொள்ள வேண்டும். இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுற்றுவட்டார மக்கள் காட்டுப் பரமக்குடியில் அணிவகுத்து நிற்குமாறும், அதன் பின் நம்மோடு இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டீ சர்ட் அணிந்து வரக்கூடிய இளைஞர்கள் ”நமது அதிகாரம் நமது தலைவர்” என்ற வாசகங்கள் டீசர்டின் முன் பகுதியிலும், ”2026-ல் புதிய தமிழகத்தின் தலைமையில் ஆட்சி” என்ற வாசகங்கள் பின் பகுதியிலும் அச்சிட்டு அணிந்து வர வேண்டும்.

எனவே, காலை 11 மணிக்குள்ளாக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மதுரைக்கு வந்து விடுமாறும், பிற நிர்வாகிகள், தொண்டர்கள் பார்த்திபனூரில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியை பொருத்தமட்டிலும் ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ நம்மால் நடத்தப்படுவதில்லை. தேவேந்திர குல வேளாளர்களின் இழந்த அரசியல் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு ஒருமைப்பாட்டு விழாவாகவே இது அனுசரிக்கப்படுகிறது. எனவே, தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்கு வரக்கூடிய எவரும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது எனத் தெரியப்படுத்தப்படுகிறது.

நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பலருக்கும் நமது வாக்கு மட்டுமே குறியாக உள்ளது. நமது விடுதலையோ, உயர்வோ, நமக்கான அதிகார மீட்போ அவர்களுடைய கண்ணுக்கு தெரியாது. எனவே இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க, நாம் அனைவரும் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்ச்சியில் ஓரணியில் திரண்டு நமது வலிமையை உலகிற்கு உணர்த்துவோம்.!

தியாகியார் அவர்களின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்க நாம் கடந்த 30 வருடமாக போராடி வருகிறோம். இப்போது கிடைத்துள்ள அங்கீகாரம் லட்சக்கணக்கான மக்களுடைய உணர்வு அலைகளால் கிடைத்தது. ஆனால் இது போதாது. இதை மட்டுமே பெருமையாகக் கருதி ஏமாந்தால், அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கு நமது சந்ததியினரும் ஏமாற்றப்படுவார்கள். எனவே சிகப்பு பச்சைக் கொடியின் கீழ் ஒன்றாக அணிதிரள்வதும் நமக்கு அரசியல் விடுதலையைப் பெற்றுத் தரும் புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணி திரள்வதும் தான் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையாக அஞ்சலியாகும்.

எண்ணற்ற கிராமங்களிலிருந்து வரும் மக்கள் தன்னந்தனியாக எவ்வித இலக்கும் இல்லாமல் செல்வதைப் பார்க்கும் பொழுது பல நேரங்களில் மனது வேதனை அடைகிறது. காட்டாற்று வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடி சில நிமிட நேரங்களிலே வடிந்து விடுவதைப் போல நம்முடைய தாய்மார்களும் இளைஞர்களும் எவ்விதமான சமூக பலனும் இல்லாமல் கூடிக் கலைந்து போய் விடுகிறார்கள்.! இனியும் அதுபோன்ற அவல நிலைத் தொடர வேண்டாம்..!!

உங்களை அடையாளப்படுத்தவும், உங்களுக்காக அதிகாரம் அளிக்கவும் உருவாக்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் பின்னாலே அணி திரண்டு அஞ்சலி செலுத்த வாருங்கள்! உங்களது அடையாளத்தை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட சிவப்பு – பச்சைக் கொடி ஏந்தி அணிதிரண்டு வாருங்கள்!! என்று தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் வாழ வாழக்கூடிய தேவேந்திர குல வேளாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

2026 வெகு தூரத்தில் இல்லை! ஒன்றுபடுங்கள்!!
ஆட்சி – அதிகாரத்தை வென்றெடுப்போம்!!
சந்திப்போம் செப்டம்பர் 11 பரமக்குடியில்..!
நிகழ்ச்சி நிரல்.!

காலை 11.30 மணி – மதுரையிலிருந்து புறப்படுதல்
காலை 11.45 மணி – சுலைமானில் கொடியேற்றுதல்
மதியம் 12.30 மணி- மானாமதுரையில் கொடியேற்றுதல்
மாலை 1.00 மணி – பார்த்திபனூரில் வரவேற்பு
மாலை 2.00 மணி – காட்டுப்பரமக்குடியில் கொடியேற்றுதல்
மாலை 2.30 மணி – காட்டுப்பரமக்குடியில் பேரணித் துவக்கம்
மாலை 3.30 மணி – தியாகியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துதல்

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
07.09.2024