மாஞ்சோலை மக்கள் கட்டாய வெளியேற்றம் – தடுத்து நிறுத்திட புதிய தமிழகம் புகார் மனு.! தேசிய மனித உரிமை ஆணையம் செப்டம்பர் 18, 19 ஆகிய நாட்களில் மாஞ்சோலை மக்களிடம் நேரடி விசாரணை.!

மாஞ்சோலை மக்கள் கட்டாய வெளியேற்றம் – தடுத்து நிறுத்திட புதிய தமிழகம் புகார் மனு.!
தேசிய மனித உரிமை ஆணையம் செப்டம்பர் 18, 19 ஆகிய நாட்களில் மாஞ்சோலை மக்களிடம் நேரடி விசாரணை.!
மாஞ்சோலை தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் பங்கு பெற வேண்டும்.!
திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுகா, ”மாஞ்சோலை வனப்பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என மாஞ்சோலை மக்கள் கடந்த ஐந்து மாத காலமாக போராடி வருகிறார்கள்.
ஏறக்குறைய ஆறு தலைமுறைகளுக்கு முன்பாகவே அங்குக் குடியேறி வனம் சார்ந்து அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1929-க்கு பிறகு, BBTC என்று அழைக்கப்படக்கூடிய அன்றைய கிழக்கிந்திய கம்பெனி – ஜின்னாவின் மகள் வழி பேரன் நுசில்வாடியாவின் இன்றைய கம்பெனி, தாங்கள் குத்தகைக்கு எடுத்த 8,373 ஏக்கர் வனப்பகுதியில் தேயிலை பயிரிட மாஞ்சோலை மக்களையும், எவ்வித போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்ட மக்களையும் கட்டாயப்படுத்தி அங்கிருந்த காடுகளைத் திருத்தி, தேயிலை காப்பி தோட்டங்களை உருவாக்கி, கடந்த 100 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டது.
ஜமீன் ஒழிப்பு சட்டம் அமலாக்கப்பட்ட பிறகும் ‘அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வுரிமை கொடுக்கிறோம்’ என்று காரணம் காட்டி தனது குத்தகை காலத்தை நீடித்துக் கொண்ட பிபிடிசி நிறுவனம் 2028 ஆம் ஆண்டுக் குத்தகை முடிவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே தற்போது வாழக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக விருப்ப ஓய்வு திட்டப் படிவத்தில் கையெழுத்து பெற்று, ஆகஸ்டு 7 ஆம் தேதிக்குப் பிறகு அவர்கள் குடியிருப்புகளை எல்லாம் காலி செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து, ஜூன் 14 ஆம் தேதியிலிருந்து அவர்களுக்கு எவ்விதமான வேலையும் கொடுக்காமல் அவர்களைப் பட்டினி சாவு என்ற நிலைக்குத் தள்ளி இருக்கிறது; மாநில அரசும் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்த அந்த பகுதியை 2018 ஆம் ஆண்டு காப்புக் காடுகளாக மாற்றுவதற்கு முன்பாகவும் அல்லது புலிகள் காப்பகமாக மாற்றுவதற்கு முன்பாகவும் அந்த மக்களிடம் எவ்விதமான கருத்துகளையும் கேட்கவில்லை. இயற்கை அழகு நிறைந்த மாஞ்சோலையை சூழல் சுற்றுலாத்தலம் (ECO) என்ற பெயரில் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடும் ஒரு கும்பலுக்கு ஆதரவாக அரசினுடைய பல்வேறு துறைகள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றிட பிபிடிசி நிர்வாகம் துடிக்கிறது; அரசும் அதற்குத் துணை நிற்கிறது.
”அம்மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்ற அடிப்படையில் 2006 வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் படி ”மாஞ்சோலையின் ஐந்து டிவிஷன்களிலும் தற்போது வாழக்கூடிய மக்களை எக்காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது; அவர்களுடைய வாழ்வாதாரத்தை அங்கேயே உருவாக்கித் தர வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்ததோடு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி அன்று டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அவர்களைச் சந்தித்து புகார் அளித்தோம். நாம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாஞ்சோலையில் கடந்த மூன்று மாத காலகட்டத்திற்கு மேலாக பசியோடும், பட்டினியோடும் இருக்கக்கூடிய மக்களுடைய அவல நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும், அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் தவறான நடவடிக்கைகளை விசாரிப்பதற்காகவும், 2006 ஆம் ஆண்டு வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் படி நமது புகார் மனுவில் குறிப்பிட்ட படி, ”அம்மக்களுக்கு மாஞ்சோலையிலேயே வாழும் உரிமை மற்றும் நிலம் வழங்க வேண்டும்” போன்ற உரிமைகளை நிலைநாட்டவும், அம்மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தவும் வருகிற செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் 5 நாட்களுக்கு அக்குழு மாஞ்சோலை வருகிறது. அதில் குறிப்பாக 18,19 ஆகிய இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கேட்டறிய உள்ளார்கள்.
1998 ஆம் ஆண்டு இதேபோல, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமையாக நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி மனித உரிமை ஆணையத்தில் நாம் புகார் அளித்து, உயர் அதிகாரிகள் விஜயம் செய்த பிறகுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனவே, மாஞ்சோலை வாழ் மக்களுடைய எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையில் கடந்த நூறாண்டுக் காலமாக பிபிடிசி நிர்வாகத்தால் ஏற்பட்ட அவலங்களை எடுத்துச் சொல்லவும், இப்பொழுது பிபிடிசி நிர்வாகம் அரசு நிர்வாகத்தோடு கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றத் துடிக்கும் அவலநிலைக்குத் தீர்வு காணவும், தற்போது மாஞ்சோலை மக்கள் மத்தியில் நிலவும் பட்டினி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் தொழிலாளர்கள் தங்களிடம் உள்ள எல்லா விதமான ஆதாரங்களையும் நேரடி விசாரணைக்கு வரும் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தற்காலிகமாக எங்கிருந்தாலும் கண்டிப்பாக செப்டம்பர் 18,19 ஆகிய தேதிகளில் மாஞ்சோலைக்கு வந்து விட வேண்டும். பிபிடிசியில் பணி புரிந்ததற்கான அடையாள அட்டைகள், ஓய்வூதியம் பிடித்ததற்கான ரசீதுகள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தங்களுடைய மூதாதையர் அப்பகுதியில் வாழ்ந்ததற்கு உண்டான ஆதாரங்கள், பிபிடிசி நிர்வாகத்தின் கீழ் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், கொத்தடிமைத் தனங்கள், குறைந்த சம்பளம் குறித்த பழைய ஆவணங்கள்; 1998 போராட்ட அனுபவங்கள் மற்றும் பாதிப்புகள், மனித உரிமை மீறல்கள், தொல்லைகள் குறித்து அதிகாரிகளிடம் முன்பு மனு கொடுத்திருந்தால் அது குறித்த மனுக்களின் நகல்கள் அனைத்தையும் சேகரித்து அவற்றை தேசிய மனித உரிமை ஆணைய நேரடி விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கும் படி, அனைவரும் செப். 17ஆம் தேதி மாலையே மாஞ்சோலை வந்து விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விசாரணையில் தற்போது பணிபுரியக்கூடிய தொழிலாளர்களும், பணி ஓய்வுப் பெற்று வெளியில் இருக்கக்கூடியவர்களும் பங்கு பெறலாம். இந்த அரிய சந்தர்ப்பத்தை எந்த தொழிலாளர்களும் நழுவ விடக்கூடாது. இவ்விசாரணையில் பங்கு பெறுவதன் மூலமாக மாஞ்சோலை மக்களுக்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கப் போகிறது என்பதைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
டெல்லியிலிருந்து மனித உரிமை ஆணைய விசாரணைக் குழு அதிகாரிகள் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு எல்லாம் மாஞ்சோலை வந்து சேர்ந்து விடுவார்கள். எனவே மாஞ்சோலையில் அவரவர் அந்தந்த டிவிசன் பகுதியில் இருந்திட வேண்டும். தாங்கள் பட்ட அனைத்து இன்னல்களையும் கஷ்டங்களையும் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதி மனுவாகவும் கொடுக்கலாம். எனவே அனைத்து தொழிலாளர்களும் இந்த மனித உரிமை ஆணையத்தின் நேரடி விசாரணையில் தவறாது பங்கு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.09.2024