முதலமைச்சர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் ஏன்?

மூணாறில் உயிரிழந்த ஐந்து தமிழ் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்க முனைப்பு காட்டத் தவறலாமா?

அறிக்கைகள்
s2 356 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 27 Apr 2023

Loading

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியைச் சார்ந்தவர்கள் கடந்த வாரம் 22.04.2023 அன்று கேரள மாநிலம், மூணாறில் நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது ஏற்பட்ட வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்; 20-க்கும் மேற்பட்ட பலத்த காயமுற்றனர். சிகிச்சை பெற்றவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றியும் இறந்துள்ளனர். அவர்கள் அனைவருமே ஏழை, எளிய, விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.

விபத்தில் உயிரிழந்த 55 வயதான ஜானகி, 59 வயதான பெருமாள் மற்றும் 79 வயதான அவரது தாயார் வள்ளியம்மாள், 8 வயது நிரம்பிய சிறுவன் சுசீந்திரன், 4 வயது நிரம்பிய சுசிலேந்திரன் ஆகிய ஐந்து பேரின் குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு வாரம் ஆகியும் கூட இன்னும் அந்த நட்ட ஈட்டை வழங்க இந்த அரசு முன்வரவில்லை.

இங்கிருந்து 5000 கிலோமீட்டருக்கு அப்பால் அரேபிய நாட்டில் வேலை பார்த்த இருவர் தீ விபத்தில் இறந்த செய்தி அறிந்து, 10 லட்சம் ரூபாய் அரசு நட்ட ஈடு வழங்கி இருக்கிறது. தமிழர்கள் எந்த பகுதியில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நேசக் கரம் நீட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அரேபியா நாட்டில் வேலைக்குச் சென்று தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கக்கூடிய அதே அரசு, அதே போன்று கேரள மாநிலம், மூணாறு வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பங்களுக்கும் நட்ட ஈடு கொடுப்பதே உண்மையான சமத்துவமும் ஆகும்.

மேலும், எந்த ஒரு அரசும் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக் கூடாது. ஆனால், கடந்த ஒரு வாரமாகியும் மூணாறு வாகன விபத்தில் உயிரிழந்த விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கக்கூடிய மானுரைச் சேர்ந்த ஐந்து தமிழ் குடும்பங்களுக்கும் நட்ட ஈடு வழங்காதது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. அதன் மூலம் இந்த அரசு பாரபட்சம் காட்டுவதாகவே அர்த்தம் கொள்ளப்படும். எனவே, காலம் தாழ்த்தாமல் மூணாறு வாகன விபத்தில் உயிரிழந்த மானூர் தமிழ் குடும்பங்களுக்கு உடனடியாக தலா 10 லட்சம் வழங்க மீண்டும் வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் கூடாது!!

மூணாறில் உயிரிழந்த ஐந்து தமிழ் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்க முனைப்பு காட்டத் தவறக் கூடாது.!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
27.04.2023.