ஈரோடு கிழக்கில் நடைபெற்றது தேர்தல் அல்ல!
ஈரோடு
வெற்றி பெற்றவர்களுக்கு இது வெற்றியும் அல்ல.!
தோல்வி பெற்றவர்களுக்கு இது தோல்வியும் அல்ல.!
மொத்தத்தில் நடைபெற்றது தேர்தலே அல்ல,
பட்டப்பகல் ஜனநாயக படுகொலை.!
364 Views
![]()
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் எப்படி நடைபெறக் கூடாதோ அதற்கு முன்மாதிரியாக அளவற்ற முறைகேடுடனும் ஒழுங்கீனத்துடனும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று இருக்கிறது. வாக்காளர்களுக்கு சன்மானமும் பரிசுப் பொருட்களும் வழங்குவது என்ற அண்மைகால நடைமுறைகளையும் தாண்டி நவீன தேர்தல் விதிமீறல் ஒன்று ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் புதிதாக அரங்கேறியுள்ளது.
கடந்த காலங்களில் ஒருவருடைய வாக்கு உரிமையை இன்னொருவர் கள்ள ஓட்டுப் போட்டுத் தட்டிப்பறிப்பார்; எதிரணி வாக்குச்சாவடி முகவர்களை வன்முறையால் வெளியேற்றிவிட்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி தங்களுடைய வேட்பாளருக்கே ஒட்டு மொத்த வாக்குகளையும் குத்திப் போட்டுக் கொள்வது என்பதும் ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்கள் முறைகேடுகள். அதுபோன்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் பட்சத்தில் மறு தேர்தல் நடத்த வாய்ப்புண்டு. பல நேரங்களில் அவைகள் பூதாகரமாகவும் வெடிப்பதுண்டு. எனவே கடந்த காலத்தை போன்று அடாவடிகளில் நேரடியாக இறங்காமல், இந்த முறை முழுக்க முழுக்க ஒரு புதுவித தேர்தல் முறைகேட்டை திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி வாக்கு சேகரிக்கும் இடங்களுக்கோ, பொதுக் கூட்டங்களுக்கோ போக முடியா வண்ணம் அவரவர் வீட்டிற்குள்ளேயும் வீதியிலேயும் முடக்கப்பட்டார்கள் அல்லது அந்தந்த பகுதிகளில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ’தொண்டு பட்டிக்கு’ ஒத்த ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் ’பட்டிகளைப் போன்ற முகாம்களில்’ காலை முதல் மாலை வரையிலும் அப்பகுதி வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு, வாக்குப்பதிவு தினத்தன்று தங்களுடைய வீடுகளிலிருந்து, அடியாட்கள் மூலம் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆளுங்கட்சியினர் கூறிய சின்னங்களிலே பொத்தான்களை அமுக்கிவிட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இது சாதாரணமான தேர்தல் விதிமுறை மீறல் மட்டுமல்ல, அப்பட்டமான ஜனநாயக படுகொலை.
இவ்வளவு பெரிய அத்துமீறல்கள் நடந்தும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாததும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட இதைக் கடுமையாக விமர்சிக்காததும், கண்டன குரல் எழுப்பாததும் தான் வேதனையிலும் வேதனை! திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடைய மிதமிஞ்சிய அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டு விட்டது. எனவே, இது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுத்திட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை மக்களும், பொறுப்புமிக்க அரசியல் கட்சிகளும் உணர்ந்தாக வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்புணர்வை ஈரோட்டில் ஜனநாயக படுகொலை செய்து பெற்ற இந்த சிறிய வெற்றியின் மூலம் மூடி மறைக்க நினைக்கிறார்கள்.
ஈரோடு தேர்தலில் தோல்வி அடைந்தால், 2024 நாடாளுமன்றம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலேயே ஆளுங்கட்சியினர் இந்த அளவிற்கு வரம்பு மீறி வாக்குகளைச் சூறையாடி இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. கடந்த பத்தாண்டு கால வரலாறு இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றாலும் தொடர்ந்து வரும் பொதுத் தேர்தல்களில் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள் என்பது தான் திருமங்கலம் மற்றும் பல இடைத் தேர்தல்களின் படிப்பினையாகும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி! வெற்றி!! என்று முழக்கமிட்டு அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கும் கனிம வளம் உள்ளிட்ட அனைத்து கொள்ளைகளையும் தொடர்ந்து நடத்திக் கொள்ள வேண்டுமானால் இவ்வெற்றி உதவலாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி என்பது தமிழக மக்களின் உண்மையான பிரதிபலிப்பு அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் நிச்சயமாக வேறு மாதிரியானதாக இருக்கும். ஒரு குடும்பம் தமிழகத்தை ஒவ்வொரு அங்குலமாக திட்டமிட்டுச் சுரண்டி வருகிறது. எப்படியாவது பதவியிலிருந்தால் போதும் என்ற ஒரே எண்ணத்தோடு அவர்களுக்குக் கூட்டணிக் கட்சிகள் ஜால்ரா தட்டுகிறார்கள்.
கள நிலவரங்களையும், மக்களின் துன்பங்களையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஆளும் கட்சி அரவணைப்பில் இல்லாத பிற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க முடியும்! நியாயமான தேர்தல் ஒன்றை மக்களுக்கு அளித்திட முடியும்! தமிழக மக்களுக்கு விடிவு காலத்தையும் தந்திட முடியும்.!
வெற்றி பெற்றவர்களுக்கு இது வெற்றியும் அல்ல.!
தோல்வி பெற்றவர்களுக்கு இது தோல்வியும் அல்ல.!
மொத்தத்தில் நடைபெற்றது தேர்தலே அல்ல,
பட்டப்பகல் ஜனநாயக படுகொலை.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.03.2023






