இளைஞர்களைத் தீய செயல்களுக்குத் தூண்டும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடிடுக!

அறிக்கைகள்
s2 7 Views
Covai girl Murder sulur
Published: 23 May 2026

Loading

கோவை மாவட்டம் – சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை!
இளைஞர்களைத் தீய செயல்களுக்குத் தூண்டும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடிடுக!
உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஒரே மாதத்தில் தண்டனை பெற்றிடுக!
……………………………………………………………

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கேட்போர் மனம் பதபதைக்கும் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்; குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான தொடர் பலாத்காரச் சம்பவங்கள், மது போதையால் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ஆகியவையே ஆட்சி மாற்றத்திற்குக் காரணிகளாக அமைந்தன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள ஒரு சில நாட்களிலேயே நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்தது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
என்னதான் காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சமூகக் கேடுகளை ஒழிக்க, அனைத்து மட்டங்களிலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகும். போதைப் பொருட்களை ஒழிக்கவும், மதுக்கடைகளைக் குறைக்கவும் முதல்வர் விஜய் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இளைஞர்களைத் தீய செயல்களுக்குத் தூண்டும் மதுப் பழக்கவழக்கங்களை ஒழிக்க, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டியது உடனடி அவசியம்.
மதுபானக் கடைகள் ஒழிக்கப்படும் பொழுது தான், கஞ்சா உள்ளிட்ட பிற போதைப் பொருட்களையும், இது போன்று தொடரும் வன்சம்பவங்களையும் தடுக்க முடியும். எனவே, அரசு வருவாயைக் கணக்கில் கொள்ளாமல் மதுக்கடைகளை உடனடியாக மூடினாலே பெரும்பாலான சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வரும்.
மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளுக்கு எதிராகக் காலம் தாழ்த்தாது, ஒரு சில வாரங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, ஒரே மாதத்தில் தீர்ப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டால் தான் இதுபோன்ற கொடூரச் செயல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். தமிழக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.

23.05.2026Covai girl Murder sulur