மெட்ரோ இரயில் திட்டத்தில் கோவை மாநகரின் தெற்கு பகுதியை முற்றாக புறக்கணித்தது ஏன்?

கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் சுற்று வட்டாரத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையும், பல்வேறு தொழில்கள் வளர்வதற்கு தேவையான மூலப்பொருட்களும், அனைத்துவிதப் போக்குவரத்து வசதிகளும், பெரும் கல்வி நிறுவனங்களும், அதனால் திறன் வாய்ந்த தொழிலாளர்களும் கிடைப்பதால் தான் இந்நகரம் பலராலும் விரும்பி குடியேறும் நகரமாகவும், தொழில் முனைவோரின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே, புதிதாக எந்த ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டாலும் கோவை மாநகரின் அனைத்துத் திசைகளையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
துவக்க காலங்களில் முறையாக திட்டமிடாததால் முக்கிய வசதிகள் நகரின் ஒரு பகுதியிலேயே குவிந்து கிடக்கும் சூழல் ஏற்பட்ட ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் முறையான திட்டமிடாமல் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முனையக் கூடாது. தெற்கே சுந்தராபுரம், குறிச்சி, போத்தனூர், வெள்ளலூர், குனியமுத்தூர், மதுக்கரை; பேரூர், மருதமலை; கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி; சூலூர், நீலாம்பூர் வரையிலும் பரவிக் கிடக்கிறது. அடுத்து வரும் 10 ஆண்டுகளில் கோவை மாநகர் மேலும் விரிவடைந்து செல்லும்; எனவே, புதிதாகக் கொண்டு வரப்படும் அனைத்துத் திட்டங்களும் அடுத்த 40 அல்லது 50 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்படும் தேவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
கார்கள்; இருசக்கர வாகனங்கள், வேன், லாரிகள் எண்ணிக்கை; அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே தினமும் பணிக்குச் செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகங்களை அடைய முடிவதில்லை. போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க மேலை நாடுகளில் 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் நமது நாட்டிற்கு தற்போது தான் மெல்ல மெல்ல வருகின்றன. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே மெட்ரோ இயங்கி வருகிறது. அடுத்தபடியாக கோவை, மதுரை ஆகிய இரண்டு நகரங்களுக்கும் மெட்ரோ திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதில் மதுரை மாநகரின் நான்கு திசைகளிலும் உள்ள நகர்ப்புற, புறநகர் பகுதிகளை முறையாக இணைக்கும் வகையில் மெட்ரோ திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மிகப்பெரிய தொழில் நகரமான கோவையின் வடக்குப் பகுதி மட்டுமே மெட்ரோ சேவை கிடைக்கும் வகையிலும், உக்கடத்திற்கு தெற்கு மற்றும் மேற்கே உள்ள வெள்ளலூர், போத்தனூர், குறிச்சி, சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை, குனியமுத்தூர், பேரூர் கோவைப்புதூர் சுண்டைக்கா புதூர், வேளாண்மை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை, தடாகம், துடியலூர் ஆகிய பகுதிகள் மெட்ரோ திட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறுகிய கண்ணோட்டத்திலும், கோவையின் மிகச் சிறிய அளவிலான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களுக்கு மட்டும் பயன் அளிக்கும் வகையிலும், ஒரு சில அரசியல் பின்புலம் வாய்ந்த ரியல் எஸ்டேட்டுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயனடையக் கூடிய வகையில் மட்டுமே அமைந்துள்ளது.
எனவே, கோவை மாநகருக்கு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள அரைகுறை மெட்ரோ திட்ட அறிக்கையை நிராகரித்துவிட்டு, கோவை நகரின் அனைத்துத் திசைகளையும் உள்ளடக்கி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கோவை மாநகரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளையும் உள்ளடக்கிய சரியான ’மெட்ரோ திட்ட அறிக்கை’ வடிவமைக்கப்பட வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.12.2024