மாணவச் செல்வங்களை நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு, மனிதநேயத்துடன் அறிவார்ந்த சமூகமாக வார்த்தெடுக்கும் ஆசிரியர்களை என்றென்றும் போற்றுவோம்!

அறிக்கைகள்
s2 479 Views
  • Dr-K-Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr-K-Krishnasamy
Published: 05 Sep 2021

Loading

’கற்பிக்கும் திறன், இனிய சுபாவம், பொறுமை’ இந்த மூன்றும் மாணவர்களைக் கட்டிப்போடும் மந்திரங்கள்!
மாணவச் செல்வங்களை நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு, மனிதநேயத்துடன் அறிவார்ந்த சமூகமாக வார்த்தெடுக்கும் ஆசிரியர்களை என்றென்றும் போற்றுவோம்!

தேசிய ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ’ஆசு’ என்றால் ’தவறு’ – ’இரியர்’ என்றால் ’திருத்துபவர்’. எனவே, ஒவ்வொருவரது தவறுகளையும் குழந்தைப் பருவத்திலிருந்தே திருத்திச் செம்மைப்படுத்துபவர்களே ’ஆசிரியர்கள்’ ஆவர். அவர்களின் உன்னதப் பணிகளைப் போற்றக்கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுடைய முன்னேற்றத்திற்கும் ஒரு வழிகாட்டியோ, குருவோ, ஆசிரியரோ நிச்சயம் இருந்திடல் வேண்டும். கொள்கை, கோட்பாடு, தத்துவரீதியாக வழி காட்டக் கூடியவர்கள் சிலர். ’இருவென இருந்து’ – ’எழுவென எழுந்து’ – ’சொல்லெனச் சொல்லி’ என்ற மேல்-கீழ் அடுக்கதிகார முறையைக் கொண்டது ’குரு-சிஷ்ய முறை’. மாணாக்கர் குருவுடனே தங்கி ஆய கலைகளையும் கற்றுக் கொள்ளும் இம்முறை இந்தியாவில் பன்னெடுங்காலம் வழக்கத்திலிருந்தது.

காலம் மாற மாற குரு – சிஷ்யன் முறை மாறி ஆசிரியர்கள் – மாணாக்கர் என்ற நட்பு பாராட்டும் வகையில் இன்றைய காலத்திற்கேற்ப கற்பித்தல் முறை பரிணமித்துள்ளது. பண்டைய குரு-சிஷ்யர் முறையானாலும் சரி, இன்றைய ஆசிரியர்-மாணாக்கர் என்ற வகுப்பறை முறையானாலும் சரி, ஆசிரியர்களின் அடிப்படை தன்மை மட்டும் மாறாதது.

ஆசிரியர்களின் ’கற்பிக்கும் திறன், இனிய சுபாவம், பொறுமை’ இந்த மூன்று குணங்களும் தான் எவ்வளவு மோசமான மாணவர்களையும் திருத்தி ஆசிரியரிடத்தில் கட்டிப்போடும் மந்திரமாகும். இன்றைய நவீனக் கால கட்டத்தில் பாடங்களை கற்றுக் கொள்ள எத்தனையோ தொழில்நுட்ப முறைகள் கையடக்க கைபேசிக்குள் வந்துவிட்டன. எனினும் நல்ல பண்புகளை வகுப்பறைகளில் ஆசிரியர்களிடத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

ஒரு மனிதன் பல புத்தகத்தைப் படித்து அறிவாளி ஆகலாம்; ஆனால், நல்ல பண்புகளைக் கொண்ட மனிதனாக மாற வேண்டும் என்றால் அது நல்ல ஆசிரியரால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆசிரியர்களே வாழ்க்கையில் வெற்றி பெறத் தூண்டுதலாகவும், வழிகாட்டியாகவும், குருவாகவும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களை மறந்து விடலாம். ஆனால், கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை மட்டும் யாரும் மறப்பதில்லை. எனவே தான் விடுதலை பெற்ற இந்திய தேசம் ஒரு சிறந்த தேசமாக உருவாக்கப்படவும், தேசத்தின் எதிர்கால சந்ததியினர் நல்லமுறையில் உருவாக்கப்படவும் ஆசியர்களால் மட்டுமே முடியும்; அவ்வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள்; எனவே, அந்த பணியில் ஈடுபடக் கூடிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள்; எனவே தான் பள்ளி, பல்கலைக்கழக ஆசிரியராக பணியாற்றி இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த ’தத்துவ மேதை’ ’சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன்’ அவர்கள் தனது பிறந்த நாளை ’ஆசிரியர் தினமாக’ அனுசரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனடிப்படையில் 1962 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் ’செப்டம்பர் 5-ஆம் தேதியை ’தேசிய ஆசிரியர் தினமாக’ அனுசரித்து வருகிறோம். எனவே இந்திய நாட்டில் இருக்கக்கூடிய கோடான கோடி மாணவ செல்வங்களை நாட்டுப் பற்று உடையவர்களாகவும்; அர்ப்பணிப்பு, மனிதநேயம் மிக்கவர்களாகவும்; அறிவார்ந்த சமூகமாகவும் இந்தியச் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

ஆசிரியர் பணி என்பது ஒரு ஏணிக்குச் சமமானது. அது எத்தனை பேரை ஏற்றி விட்டாலும் அது அங்கேயே தான் இருக்கும். அதே போலத்தான் ஆசிரியர்கள் இலட்சோபலட்சம் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகள் ஆக இருந்து செயல்படக் கூடியவர்கள். இந்த தேசம் உயிர்ப்போடு இருந்திருக்க வேண்டுமென்றால், உயர்ந்த, மனித நேயம் மிக்க சமுதாயமாக இருக்க வேண்டுமென்றால் ஆசிரியர் அனைவரும் போற்றப்பட வேண்டும்.

எனது வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக, நண்பர்களாக ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை உற்ற துணையாக விளங்கிய ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும்; இப்பொழுது நாம் உருவாக்கியுள்ள தாமரை வேர்ல்டு பள்ளி மற்றும் இன்டோபின் மழலையர் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும்; தமிழகம்-இந்தியாவில் உள்ள கோடான கோடி மாணவ செல்வங்களின் கல்விக் கண்களைத் திறக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும்; ஆசிரியர் நண்பர்களுக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலட்சோபலட்சம் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகளாக இருந்து செயல்படக் கூடிய ஆசிரியர்களை என்றென்றும் போற்றுவோம்!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.09.2021