இன்று (18.05.2022) பேரறிவாளன் விடுதலை.! மிக்க மகிழ்ச்சி.! 2011-ல் பேரறிவாளன் கழுத்தை இறுக்கிய சுருக்குக் கயிறு கழற்றப்பட்டது எப்படி?

அறிக்கைகள்
s2 416 Views
  • பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை.!

  • பேரறிவாளன் விடுதலை
Published: 18 May 2022

Loading

இன்று (18.05.2022) பேரறிவாளன் விடுதலை.! மிக்க மகிழ்ச்சி.!

2011-ல் பேரறிவாளன் கழுத்தை இறுக்கிய சுருக்குக் கயிறு கழற்றப்பட்டது எப்படி?

தமிழக மக்கள் உண்மை நிகழ்வுகளை அறிந்து கொள்ள,

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . கிருஷ்ணசாமி அவர்களின், 10.09.2018 அறிக்கை மறு பதிவு செய்யப்படுகிறது.

நேற்று (09.09.2018) தமிழக அமைச்சரவை கூடி மறைந்த பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்கள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட, தமிழக அமைச்சரவையும், தமிழக அரசும் எடுத்த முடிவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருடைய கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்படுவதற்குண்டான எல்லா விதமான ஆயத்தங்களும் செய்யப்பட்டு இருந்தன; யார் அதை நிறைவேற்றப்போகிறார் என்பது கூடப் பெயருடன் வெளிவந்தது; ஜனாதிபதி அவர்கள் அந்த மூவருடைய கருணை மனுவை நிராகரித்துவிட்ட நிலையில், நடைமுறை சட்டப்படி மத்திய உள்துறை இணைச் செயலாளரிடமிருந்து 3 பேரும் சிறைப்பட்டிருக்கக்கூடிய வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கும், மாநில அரசின் உளவுத்துறைக்கும் அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.

எண்ணி 8 தினங்களே இருந்த நிலை; ஒரே ஒரு ஆங்கில செய்தித்தாளில் மட்டும் இந்தச் செய்தி கசிந்திருந்தது. ஜனாதிபதி அவர்கள் நிராகரித்து, தூக்குத்தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த முடிவை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே ஒரு வழி இருப்பதை மட்டும் நாம் அறிந்துகொண்டோம். தமிழகச் சட்டமன்றத்தில் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

முதலமைச்சர் விரும்பினாலொழிய அது நடக்காது. தமிழ்நாடு முதலமைச்சருடைய கவனத்திற்குக் கொண்டு செல்வதும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அவரை இசைய வைப்பதும் எவ்வளவு பெரிய காரியம் என்பதை சட்டமன்றத்திற்கு வெளியே இருந்து பார்த்தால் தெரியாது; உள்ளே இருந்தால் மட்டும் தான் அதனுடைய உண்மைக் கஷ்டங்களை அறிய முடியும்.

கூட்டணியிலே போட்டியிட்டு தேர்தல் முடிந்து 3 மாதங்கள் கூட ஆகவில்லை. இந்த விசயத்தை முதல்வர் ஏற்றுக் கொள்வாரா? இல்லையா என்பதை அறிந்துகொள்வது கூடக் கடினம். ஈழ விடுதலைப் போராட்டம் துவங்கிய 1973, 74-லிருந்தே ஈழத்தமிழ் மக்கள் மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து நாம் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். எனவே விளைவுகள் என்னவாக இருப்பினும் சட்டமன்றத்தில் போராடி விடுவது என்று முடிவெடுத்தேன்.

நேரடியாக 3 பேருடைய தூக்கு தண்டனை ரத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தால், அதை உடனடியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே, ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனைகளையே ரத்து செய்வது என்ற தலைப்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்தேன். இருபுறமும் இருந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு இடது சாரி கட்சி உறுப்பினர்கள் மட்டுமே அதில் கையெழுத்திட்டனர்.

இரண்டு நாள் நான் நேரமில்லா நேரம் என்றழைக்கப்படக்கூடிய Zero Hour-ல் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டது. நான் எதுகுறித்து குரல் எழுப்பினேன் என்பது கூட அவைக்குறிப்பில் ஏற்றப்படவில்லை.

அவையில் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கூட்டணியிலிருந்துகொண்டே வெளிநடப்பு செய்தால் எப்படியும் முதல்வர் கோபப்படுவார் என்பது தெரியும். எனினும், வெளிநடப்பு செய்தால் மட்டுமே அந்தச் செய்தி வெளியுலகத்திற்கு வர இயலும்.

தொடர்ந்து இரண்டு நாள் கேள்வி நேரம் முடிந்தவுடன் எழுந்து நிற்பது, அனுமதி மறுப்பது, வெளிநடப்பு செய்வது என்ற நிகழ்வுகளே நடந்தன. நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தன. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தினமும் காலை 8 மணிக்கே சட்டமன்ற வளாகத்திற்கு வருவார். ஆனால், உள்ளேவர அனுமதி கிடைக்காது. நானே வெளியே வந்து அவரை  டைப்பிங் அலுவலகத்திற்கு அழைத்து வருவேன்; அவர் வடித்த கண்ணீர் மிகக் கொடுமையானது.

அவரை அழைத்துக் கொண்டு பல சட்டமன்றக் கட்சித் தலைவர்களைச் சந்திக்க முயற்சி எடுத்தும் கூட அந்த அம்மையாரை சந்திக்க மறுத்து விட்டார்கள். நேரடியாகவே களத்தில் இறங்குவது தான் பலனளிக்கும் என்ற அடிப்படையில், 5-வது நாள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருடைய பெயரைக் குறிப்பிட்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நேரடியாகவே கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்தேன்.

முன்வரிசையிலிருந்த 3 முக்கிய கட்சித் தலைவர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள். 5-வது நாள் எப்படியும் பிரச்சினை செய்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தே, அந்தப் பிரச்சினையைக் கிளப்பினேன். 5-வது நாளும், 6-வது நாளும் வெளியேற்றப்படக்கூடிய அளவிற்குப் பிரச்சினையைக் கிளப்பினேன்.

காஞ்சிபுரம் செங்கொடி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட செய்தியும் வந்தது. அன்று காலையில் முதல்வர் கையில் ஒரு தாளோடு வந்து அமர்ந்திருந்தார். கேள்வி நேரம் முடிந்ததும் மீண்டும் நான் எழுந்தேன். இன்றைய மீன்வளத்துறை அமைச்சர் தான் அன்றைய பேரவைத் தலைவர். ”அம்மா அவர்கள் முக்கியமான ஒரு தீர்மானத்தை வாசிக்கவிருக்கிறார், அமருங்கள்என்று அவர் சொன்னார்.

ஒரு வாரம் சட்டமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் நடத்திய போராட்டத்திற்கு முடிவு வந்துவிடும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இருப்பினும் அவர் அந்தத் தீர்மானத்தை முழுமையாக வாசிக்கின்ற வரையிலும் திக்., திக்., என இருந்தது, அவர் அந்தத் தீர்மானத்தை முழுமையாக வாசித்தபின்பு தான் ஏறக்குறைய ஒரு வாரப் போராட்டத்திற்கு ஒரு விடை கிடைத்தது; நாம் நடத்திய அந்த ஒரு வார சட்டமன்றப் போராட்டம் தான் அன்று, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வைத்தது; அவர்கள் கழுத்தை நெருக்கிய தூக்குக் கயிற்றைக் கழற்றியது.

அதற்குப் பிறகு நீதிபதி சதாசிவம் அவர்களுடைய தீர்ப்பின் மூலம் அவர்களுடைய விடுதலை சிறை வாசல் கதவுகள்வரை வந்தும், அது திறவாமல் போய்விட்டது. ஆனால், இப்பொழுது உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வாழ்த்துகிறோம். சட்டமன்றத்திற்குள் நாம் நடத்திய போராட்டத்தை தமிழ்த்தேசிய வியாபாரிகள் எவரும் பெயரளவில் கூட வெளியில் சொல்லமாட்டார்கள். ஆனால் அற்புதம் அம்மாள் நிச்சயம் எல்லாவற்றையும் அறிவார்.

பல்லாண்டு கால நீதிமன்ற போராட்டத்திற்குப் பிறகு, பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் போராடிய தீர்மானம் நிறைவேற்ற வைத்து, தூக்கிலிடப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டதால் இன்று விடுதலை பெறுகிறார்.! மிக்க மகிழ்ச்சி.!

பலரும் அவருடைய விடுதலையை உரிமை கொண்டாடலாம்.! ஆனால் நமது பங்களிப்பை மற்றவர்கள் சொல்லமாட்டார்கள்.! நாம் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அடைப்படையில் இதைப்பதிவு செய்கிறோம்.!

டாக்டர் .கிருஷ்ணசாமி MD, Ex.MLA.,

நிறுவனர் & தலைவர்

புதிய தமிழகம் கட்சி.

18.05.2022