நொச்சிக்குப்பம் லூப் சாலையை நிரந்தரமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.!

சாந்தோம் சாலையின் இரு மருங்கிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை
அகற்றி – அகலப்படுத்தி கடற்கரைச் சாலை போக்குவரத்தை
அடையாறு வரையிலும் இலகுவாக்கிட மாற்றி யோசியுங்கள்.!

அறிக்கைகள்
s2 463 Views
  • Loop Road

    நொச்சிக்குப்பம் லூப் சாலையை நிரந்தரமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.!

  • Loop Road
Published: 18 Apr 2023

Loading

சென்னை கடற்கரைச் சாலை கலங்கரை விளக்கம் பகுதியிலிருந்து அடையாறு செல்லும் பாதையில் சாந்தோம் பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் காரணமாக, சில ஆண்டுகளாகவே காலை மற்றும் மாலை நேரங்களில் கலங்கரை விளக்கத்திலிருந்து மீனவ குப்பங்கள் வழியாக பட்டினம் பாக்கம் வரையிலும் ஏறக்குறைய இரண்டரை கிலோ மீட்டர் அளவிற்கு தற்காலிகமாக ஒரு லூப் சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. லூப் சாலை சிறிய அளவிலிருப்பதால் அந்த சாலையின் இரு மருங்கிலும் மீனவ மக்கள் மீன் வியாபாரம் செய்து, தங்களது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. இப்பொழுது அந்த லூப் சாலையின் இரு மருங்கிலும் உள்ள அனைத்து மீன் கடைகளையும் அகற்றிவிட்டு, லூப் சாலையை அகலப்படுத்தி நிரந்தர போக்குவரத்து சாலையாக மாற்றுகின்ற முயற்சிக்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கலங்கரை விளக்கத்திலிருந்து சாந்தோம் வரையிலும் இரு மருங்கிலும் உள்ள ஆக்கிரமிப்பின் காரணமாகவே அந்த சாலை குறுகலாகி ஒரு வாகனத்தின் பின் ஒரு வாகனம் செல்லக்கூடிய அளவிற்கு பாதை குறுகலாகிவிட்டது. நெய்தல் என்று அழைக்கப்படக்கூடிய கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழக்கூடிய ஆயிரக்கணக்கான மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு இடையூறு செய்யாமல் சாந்தோம் பகுதியில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்தினாலே அது நான்கு வழிச் சாலை ஆகிவிடும். அதிகபட்சம் 20 முதல் 25 நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் தீர்வு வரும். அதை விட்டுவிட்டு காலம் காலமாக கடற்கரை பகுதியை தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பலபிரயோகம் செய்து அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்வது எவ்விதத்தில் நியாயம்?
ஆக்கிரமிப்புகள் எந்த பகுதியிலிருந்தாலும், அதை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அதை அகற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதில் வசதி படைத்தவர்களுக்கு ஒரு பார்வை, மற்றவர்களுக்கு இன்னொரு பார்வை என்ற கோணத்தில் அணுகக் கூடாது. மீனவர்கள் அரசியல்-அதிகாரமற்றவர்கள், குரலற்றவர்கள் என்பதால் அவர்களை பலபிரயோகம் செய்து அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும். சாந்தோம் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி – அகலப்படுத்தி நிரந்தர சாலையாக மாற்றத் தேவையான மாற்று நடவடிக்கைகளை பற்றியே அரசு சிந்திக்க வேண்டும்.

எனவே, லூப் சாலையை நிரந்தரமாக்கும் எண்ணத்தை கைவிட்டு; சாந்தோம் சாலையின் இரு மருங்கிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி – அகலப்படுத்தி கடற்கரைச் சாலை போக்குவரத்தை அடையாறு வரையிலும் இலகுவாக்கிட மாற்றி யோசிக்க சமந்தபட்ட அனைவரையும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
18.04.2023.