இந்திய தேசம் ’ஒன்றியமெனில்’ தமிழ்நாடு என்ன ‘ஊராட்சியா’? – டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி.!

தேர்தல் காலங்களில் உங்கள் கட்சி நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் பேசியதை போல, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி கூட்டத்தளத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீணடிக்கிறீர்கள். புளித்துப்போன மாநில சுயாட்சி பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். அறிவுஜீவி என்ற அதிமேதாவி தன அரிப்பை மட்டுமே எல்லா இடங்களில் சொரிந்து காட்டுவதிலேயே நீங்கள் குறியாக இருக்கிறீர்கள்.

அறிக்கைகள்
s2 452 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 01 Jun 2021

Loading

தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் கடந்த 07 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது முதல், தினம் தினம் சர்ச்சைகளை உருவாக்குகிறார். தமிழகத்தின் வரலாற்றில் நிதித்துறை இதுவரை மாநில முதலமைச்சரிடத்திலோ அல்லது அமைச்சரவையில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வகித்தவர்களிடத்திலோ தான் இருந்திருக்கிறது. இன்றைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இதற்கு முன்பு கட்சியிலோ, ஆட்சியிலோ முக்கிய பதவிகள் எதுவும் வகித்த மூத்த நிர்வாகியும் அல்ல; போராட்டங்கள் எதிலும் கலந்து கொண்டு அனுபவப்பட்டவரும் அல்ல. ஒரே ஒரு முறை மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். வெகு அண்மை காலமாக மட்டுமே கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். எனவே தான். அமைச்சரவையிலும் கடைசியாகவே வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும் இன்று ஏறக்குறைய 8-கோடி தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

பொதுவாக மத்திய, மாநில நிதி அமைச்சராக இருப்பவர்கள் ஊடக வெளிச்சத்திற்கு வர மாட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் இலட்சக்கணக்கான மக்களுடைய நன்மையும், தீமையும் அடங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் அப்பொறுப்பு வகித்தவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முழுமையாகத் தவிர்த்து இருக்கிறார்கள். காரணம் பத்திரிகையாளர்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக அல்ல, வாய் தவறி வரும் வார்த்தைகளில் கூட தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவரும் யூகித்துக்கூட விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒரு நிதி நிலை அறிக்கையில் என்ன வரும்? வராது? என்பது முன்கூட்டியே தெரியும் பட்சத்தில், சிலர் பாதிக்கப்படையக்கூடும் அல்லது சிலருக்கு பெரும் அநூகூலமாகிவிடக் கூடும் என்பதால் தான். இதன் காரணமாகவே ”பட்ஜெட் ரகசியம்” பாதுகாக்கப்படுகிறது. கடந்த காலங்களில் நிதி அமைச்சகத்திலிருந்து வெளியான சில கசிவுகளை மட்டுமே வைத்து சிலர் கோடீசுவரர்களான கதையெல்லாம் நாடறியும்.

பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பேசியது என்பது வேறு; இப்போது வகிக்கும் பொறுப்பிலிருந்து பேசுவது என்பது வேறு. நேர்முக வரியைக் காட்டிலும், மறைமுக வரி கூடுதலாக இருக்கக்கூடாது என்பது ஒன்றும் அவருடைய புதிய கண்டுபிடிப்பு அல்ல, பொதுவாக எல்லா பொருளாதார நிபுணர்களும், அனைத்து அரசியல்வாதிகளும் வலியுறுத்தி வரும் கருத்து தான். 1963-ல் பேரறிஞர் அண்ணா அவர்களும் இது குறித்து விலாவாரியாக பேசியிருக்கிறார். இப்போது பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பொறுப்பேற்று ஒரு மாத காலம் ஆகப்போகிறது. இவர் முறையாக செயல்பட்டிருந்தால் இந்நேரம் பெட்ரோல், டீசலுக்கான ஜி.எஸ்.டி வரியை நீக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நிம்மதியை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் அதுபோன்று நிதித்துறை அமைச்சர் செய்ய வேண்டிய எவ்வித ஆக்க பூர்வ நடவடிக்கையும் அவர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக மத்திய அரசு உட்படப் பலருடனும் மோதல் போக்கை மட்டுமே கையாண்டு வருகிறார்.

ஜக்கிவாசுதேவ் இந்து ஆலயங்கள் ஆன்மீகவாதிகளின் கைக்கு வரவேண்டும் என்று சொல்லுகிறார். இதை வலியுறுத்திப் போராடுவது என்பது அவருடைய ஜனநாயக உரிமை. அதில் அமைச்சருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆட்சி, அதிகாரத்தை வைத்திருக்கக்கூடிய நீங்கள் அது சட்டத்திற்கு உட்பட்டது என்றால், அது பரிசீலிக்கப்படும் என்று கூற வேண்டும்; அது சாத்தியப்படாது என்றால் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். இதுதான் ஜனநாயக மரபு. ஆனால் அதை விடுத்து, ஜக்கிவாசுதேவ் மீது பாய்ந்து பிறாண்டுவது எவ்விதத்தில் நியாயம்?

அதேபோல நேற்றைய முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி காணொளி கூட்டத்தில் என்ன பேச வேண்டுமோ? அதை விட்டுவிட்டு மத்திய அரசை சிறுமைப் படுத்துகிறீர்கள்? இன்னொரு மாநிலத்தைக் குறைத்து பேசுகிறீர்கள்? ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில சுயாட்சி பற்றி முழங்குகிறீர்கள்? கோவா மாநிலம் ஒப்பீட்டு அளவில் சிறியது என்றாலும், மாநில அந்தஸ்து பெற்றது. ஜிஎஸ்டி காணொளி கூட்டத்தில் கோவா மாநில மக்களின் மனம் புண்படும்படி, அம்மாநிலத்தை குறைத்துப் பேசியதால் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றியிருக்கிறது.

ஜிஎஸ்டி கொண்டு வந்த பின், இதற்கு முன்பு வரை 42 முறை கூட்டங்களில் தமிழகம் உள்ளிட்ட பல மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டு, மெல்ல மெல்லப் போராடிப் பல பொருட்களுக்கு வரி விலக்கு பெற்றிருக்கிறார்கள். 3, 4 சிலாப்புகள்; சில பொருட்களுக்கு 28% வரையிலும் வரி விதிப்பு; ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சில மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகள் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. எனவே 2 சிலாப்புகள் உள்ளடக்கி 12% வரி விதிப்புக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதே தமிழக மற்றும் இந்திய உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இதைப் பற்றி எல்லாம் பலமுறை கூட்டம் கூட்டிப் பேசினீர்கள். ஆனால் ஜிஎஸ்டி கூட்டத்தில் இதுபோன்ற கருத்துக்களைப் பற்றிப் பேச மறுக்கிறீர்கள். சில காலம் மட்டுமே நீடிக்கும் கரோனா மருந்துகளுக்கு மட்டுமே வரி விலக்கைக் கேட்கிறீர்கள். இந்த கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் இன்னும் சில வருடங்கள் நீடிக்கலாம். எனவே பொருளாதார நிலை மீட்சி பெற வேண்டுமென்றால் பெட்ரோல், டீசல் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவும்; சிமெண்ட், எஃகு கம்பிகள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான 28% ஜிஎஸ்டி வரியை 12%க்கு உள்ளாகக் குறைக்கத்திடவும் ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால், இவையெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டுமெனில், மத்திய அரசிடம் சண்டையிடுவதைக் காட்டிலும் சாதுரியமாக நடப்பதே முக்கியம். ஆனால் நீங்கள் சண்டையிடுவதற்கான ஆயுதத்தை மட்டுமே கையில் எடுக்கிறீர்கள்.

மிக முக்கியமான ஜிஎஸ்டி கூட்டங்களையே அரசியல் விவாத மேடைகள் ஆக்குகிறீர்கள். தேர்தல் காலங்களில் உங்கள் கட்சி நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் பேசியதை போல, அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி கூட்டத்தளத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீணடிக்கிறீர்கள். புளித்துப்போன மாநில சுயாட்சி பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். அறிவுஜீவி என்ற அதிமேதாவி தன அரிப்பை மட்டுமே எல்லா இடங்களில் சொரிந்து காட்டுவதிலேயே நீங்கள் குறியாக இருக்கிறீர்கள்.

இறையாண்மை மிக்க இந்திய அரசை மிகவும் எளிதாக ’ஒன்றிய அரசு’ என்று கொச்சைப்படுத்தி சிறுமைப்படுத்துகிறீர்கள். இந்தியா ’ஒன்றியம்’ என்றால், தமிழ்நாடு என்ன ’ஊராட்சியா’? நீங்கள் நீதிக்கட்சி வழி வந்தவர் என்பதைப் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். நீதிக்கட்சி இந்தியச் சுதந்திரத்தை நேசித்ததில்லை என்பதும்; பாரத தேசத்தை ஒன்றாமல், பிரிட்டிஷ் அரசையே ஒண்டியிருந்தது என்பதும் தானே வரலாறு. நீங்கள் மட்டும் அதற்கு என்ன விதிவிலக்காகவா இருக்கப் போகிறீர்கள்? நீங்கள் பல தேச பறவையாக பலகாலம் இருந்த காரணத்தினால், இந்த தேசத்தின் மீது பாசமும், பற்றும் முழுமையாக இருக்கும் என்று எப்படிக் கருத முடியும்? ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான அரசியல் ரீதியான விருப்பு, வெறுப்புகளை நாம் பிறந்த தேசத்தின் மீது காட்டக்கூடாது. பாரத தேசத்தை எத்தனையோ பேர் ஆண்டு இருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக மோடி ஆண்டு கொண்டிருக்கிறார்; இன்னும் சில காலம் அவர் ஆளலாம். அதற்குப் பிறகு அவரும் போய்விடலாம். மோடிக்கு முன்பும் இந்தியத் தேசம் இருந்தது; மோடிக்கு பின்பும் தேசம் இருக்கும். ஒரு கட்சியின் மீதான இன-அரசியல் ரீதியான வெறுப்பை உமிழ்வதற்காக இந்தியத் தேசத்தையே ’ஒன்றியம்’ என்று உள்நோக்கத்தோடு குறிப்பிடுவது நீங்கள் பதவியேற்றுக் கொண்ட போது எடுத்துக் கொண்ட ரகசிய பிரமாணத்திற்கு எதிரானதும், சட்டவிரோதமானதும் ஆகாதா?

ஒரு கிராம அளவிலான பஞ்சாயத்தை ஊராட்சி என்கிறோம். 30-40 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியைத் தமிழில் ’ஒன்றியம்’, ஆங்கிலத்தில் ’Union – block’ என்கிறோம். ஆனால் மிகமிகச் சிறிய அந்த ’ஒன்றியம்’ என்ற அலகை பரந்துபட்ட இந்திய அரசுடன் ஒப்பிட்டுக் குறிப்பிடுவது எப்படி முறையாகும்? பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து இந்திய அரசை ’ஒன்றியம்’ என பொதுதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது குதர்க்கமானதும், ஆணவப்போக்குமானதும் ஆகும். ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பதற்காக பழனிவேல் தியாகராஜனின் இதுபோன்ற தவறுகளை எல்லாம் கண்ட பின்னரும் பலரும் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, எல்லா காலகட்டத்திலும் அப்படியே இருப்பார்கள் என்று எண்ணி விடக்கூடாது. இதை எல்லாம் தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்கிறார்? என்பது தெரியவில்லை.

எந்தவொரு குடிமகனும் தான் பிறந்த குடும்பம் அல்லது பகுதி அல்லது மொழி அல்லது இனத்தைத் தாண்டி தாய் நாட்டின் அடையாளத்தைத் தான் முதன்மைப்படுத்துவார்கள். அதை பழனிவேல் தியாகராஜன் எளிதாக உணர மாட்டார் என்பது தெரியும். நிலப்பிரபுத்துவ வர்க்க மனோபாவம், நான்கு தலைமுறை குடும்ப பெருமை பேசும் அவருக்கு முன்னால் இந்த தேசம் சிறியதாகத் தான் தோன்றக் கூடும். ஏட்டுக்கல்வி என்பது வேறு; எதார்த்தம் என்பது வேறு, அதைப் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

மத்திய அரசுடன் ஒரு மாநில அரசு மோதவே கூடாது என்று சொல்ல முடியாது. மாநில மக்களின் நலன் காக்கப் போராடலாம்; போராட வேண்டும். ஆனால், அது அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக்கூடாது. எம்ஜிஆர் தனது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு மத்திய அரசிடம் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார். ஆனால், அவர் அதை அறிக்கையாகவோ அல்லது வார்த்தையாகவோ வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், காரியத்தில் குறியாக இருந்திருக்கிறார். எம்ஜிஆர் இரண்டாவது முறையாக 1980-84 ஆட்சியமைத்த போது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வறட்சி நிலவிய நேரம் அது. தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் நெல் உற்பத்தி குறைந்துவிட்டது. தமிழகத்தின் தேவைகளையே நிறைவேற்ற முடியாத நிலையில் அன்றைய மத்திய அரசு, மத்திய தொகுப்பிற்குத் தமிழகத்திலிருந்து அரிசியைத் தர வற்புறுத்தியது. ஆனால் எம்ஜிஆர் அவர்கள் அன்றைய சூழலில் மத்திய தொகுப்பிற்கு அரிசியைத் தர மறுத்துவிட்டார் என்பது அப்போதே கிடைத்த செய்தி. அதன்பின் எத்தனை ஆண்டுக்காலம் அப்படி நடந்து கொண்டார் என்பது தெரியாது. அதற்குப் பெயர்தான் சாதுரியம்.

இப்போது தமிழகம் கரோனாவால் சிக்கித் தவிக்கிறது. ஆக்ஸிஜன் இல்லை; மருந்துகள் இல்லை; தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு. ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் நிதிநிலையும் மிக மோசமாக இருக்கிறது. ஆனால், இதைச் சீர் செய்வதற்கு மத்திய அரசுடன் முறையான அணுகுமுறைகளைக் கையாளாமல், பாரத தேசத்தை ஒரு ஊராட்சி ஒன்றிய அளவில் சுருக்கி பெயரிட்டு சுய இன்பம் அடைந்து காலத்தை வீணடிக்கிறார்; மாநில அரசுக்குத்தான் வாக்கு வங்கி, மத்திய அரசிற்கு வாக்கு வங்கி இல்லை என குதர்க்கம் பேசுகிறார்.

இங்கிலாந்திலிருந்து இடம் பெயர்ந்து காலனியாக வளர்ந்திருந்த, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை/நாடுகளை ஒன்றிணைத்து 300 ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட United States of America போல உருவாக்கப்பட்ட நாடல்ல இந்தியா. சிந்து சமவெளி, ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகங்களைத் தோற்றுவித்த பெருமைக்குரிய பன்னெடுங்கால தேசம் இது. கிமு 300களில் துவங்கி, மாவீரன் அலெக்சாண்டர், துருக்கியர்கள், ஆப்கானீய இஸ்லாமியர்கள், மங்கோலியாவின் செங்கிஸ்கான், இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி, டச்சுக்காரர்கள், பிரென்ச்சுகாரர்கள் உள்ளிட்ட பல்வேறு அந்நியர்களின் படையெடுப்புகளுக்கு ஆளாகியும், தங்களது தேசத்தைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த 600-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சமஸ்தானங்கள், எட்டுப்பட்டி, பத்துப்பட்டி, சண்டியர், சண்டாளர் என மிகக் கர்ண கொடூரமான கிராம ஆட்சி-அதிகாரத்திற்கு ஆளாகியும் இந்தியா சின்னாபின்னமாகிக் கிடந்தது. இப்படித் துண்டாடப்பட்டுக் கிடந்த அனைத்தையும் ஒன்றிணைத்துத் தான் 1947-ல் இந்தியத் தேசம் உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்பு, தமிழகம் இருந்ததா? கேரளம் இருந்ததா? கர்நாடகம் இருந்ததா? ஆந்திரா இருந்ததா? தெலுங்கானா இருந்ததா? ஒரு வேளை ஆயிரமாண்டு காலத்திற்கு முன்பு, அந்த அடையாளங்கள் இருந்திருக்கலாம், இடைப்பட்ட கால நிலை என்ன? கிராம ஊராட்சிகள் இருந்ததா? நகராட்சிகள் இருந்ததா? மாநகராட்சிகள் இருந்ததா? எனவே, இந்திய நடுவண அரசு ஒன்று உருவான பிறகுதானே, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியத் தேசத்தின் வரலாறு தெரியாமல் தவறுதலாக உங்கள் மேதாவி தனத்தைக் காட்ட முற்படாதீர்கள். பழம்பெரும் பாரத தேசத்தை மீண்டும் மீண்டும் ’ஒன்றியம்’ என அழைப்பதை இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பற்ற வெகுதூரமும், வெகுகாலமும், பயணம் செய்ய வேண்டும். வீண் குதர்க்கம் பேசி உங்களுடைய அதிகார காலத்தை குறைத்துக் கொள்ளாதீர்கள்.

இந்தியாவை ’ஒன்றியம்’ என்று குறிப்பிட்டால் தமிழகம் என்ன அதிலிருக்கும் ’ஊராட்சியா?’ என்ற கேள்விக்கு மிஸ்டர் தியாகராஜன் அவர்கள் எப்போது பதில் கூறுவீர்கள்?

குறிப்பு:
மத்திய அரசுக்கு ஓட்டு வங்கியா? மாநில அரசுக்கு ஓட்டு வங்கியா? என்று நீங்கள் தொடங்கிய விவாதத்திற்கு பதில் நாளை வரும்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி.
01.06.2021