கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத் தின சம்பள உயர்வு; வரவேற்கத்தக்கது.! மேலும், 250 நாட்களாக உயர்த்தி, நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்.!

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குத் தினச் சம்பளம் ரூபாய் 294 இல் இருந்து ரூபாய் 319 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. கடந்த மார்ச் 27ஆம் தேதி மத்திய அதிகாரம் அளித்தல் குழுவில் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து மாநில அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் தினமும் அதிகரித்து வரும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுகள், பெருகிவரும் பண வீக்கம் போன்ற சூழலில் இந்த ஊதிய உயர்வு எவ்விதத்திலும் போதாது. தமிழகத்தில் இன்று கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் நிலவும் மிகமுக்கியமான பிரச்சனையே வேலைவாய்ப்பின்மை ஆகும். கிராமப்புறங்களில் நிலவக்கூடிய வேலைவாய்ப்பின்மை பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளிலும்; குறிப்பாக பெண்கள் மத்தியிலும் மிக அதிகமாக நிலவுகின்றன. ஆனால், அது பெரிய அளவிற்கு அரசினுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் பல குடும்பங்கள் தினமும் ரூபாய் 100, 150 கூட வருமானம் ஈட்ட முடியாமல் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழக்கூடிய சூழல்கள் பெருமளவு உள்ளன.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பெண்கள் மத்தியில் நிலவும் வேலைவாய்ப்பின்மையைச் சுட்டிக்காட்டி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்தவும்; 100 நாள் வேலையைக் குறைந்தது 250 நாளாக மாற்றவும்; தினச் சம்பளம் ரூபாய் 600 ஆக உயர்த்தவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்றும் நான் பரப்புரை செய்த போது மிகப்பெரும் வரவேற்பு இருந்ததைக் கண்கூட காண முடிந்தது. “தண்ணீருக்குள்ளே மீன் அழுதால் கண்ணீர் எப்படி வெளியே தெரியும்” என்பதற்கு இணங்க கோடான கோடி தாய்மார்களும், குடும்பங்களும் மாதம் ரூபாய் 10,000 முதல் 15,000 கூட எட்ட முடியாமல் தத்தளிப்பதைக் கண்கூட காண முடிகிறது.
வேளாண்மை கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும். ஆனால் பருவநிலை மாற்றங்களால் அங்கும் வேலைவாய்ப்புகள் குறைகின்றன. காலத்துக்கு ஏற்ப பெருகிவரும் நவீன தொழிற்சாலைகளும் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்படாமல் பெரும்பாலான தொழிற்சாலைகள் தலைநகரைச் சுற்றி மட்டுமே அமைந்து விடுவதால் நவீன தொழில்வேலை வாய்ப்புகளும் அனைத்து மாவட்ட மக்களுக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை; கிடைத்தாலும் அது அரிதிலும் அரிதாகும். சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரவில்லை எனில் அதைஎவ்விதத்திலும் நியாயமில்லை.
தவறான புள்ளி விவரங்கள், மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெறும் இலவசத் திட்டங்கள் எந்த குடிமக்களின் கண்ணீரையும் துடைக்காது; அவர்களின் வயிற்றையும் நிரப்பாது. எனவே, இப்பொழுது கிராமப்புறங்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய மகாத்மா காந்தி கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை 250 நாட்களாக உயர்த்தவும்; தின சம்பள இலக்கு ரூபாய் 600 ஆக இருந்தாலும், முதற்கட்டமாகக் குறைந்தது ரூபாய் 450-ஆக உயர்த்தவும்; இத்திட்டத்தை அனைத்து பேரூராட்சி, நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
19.05.2024