செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.!
ஓட்டுநர் – நடத்துநர் வேலைக்கு ரூ 50 கோடி லஞ்சம்!
ஊர்ஜிதமாகும் உச்சநீதிமன்ற தீர்ப்பு.!
குற்றவாளியைப் பதவியில் வைத்துக் கொண்டு,
நியாயமான விசாரணை நடத்த முடியாது.!
நீதியை நிலைநாட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து
நீக்க வேண்டும்.!
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக செந்தில் பாலாஜியின் மீது நடைபெற்று வந்த வழக்குகள் நேற்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு, புதிய ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக செந்தில் பாலாஜி வகித்து வரக்கூடிய டாஸ்மாக் மற்றும் மின்சாரம் ஆகிய இரு துறைகளிலும் நடைபெறக்கூடிய ஊழல்கள் ஒவ்வொரு நாளும் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு செய்த ஊழல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அல்லது தற்போது வகித்து வரக்கூடிய டாஸ்மாக் துறையில் நிகழும் ஒரு லட்சம் கோடி ஊழல் அல்லது விஷ மது குடித்து 25-க்கும் மேற்பட்டவர் உயிரிழந்த நிகழ்வு. இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற ஊசலாட்டம் ஊடகங்களுக்கு இருந்தது போலும்.!
செந்தில் பாலாஜி ஒரு அசாத்திய மனிதர்தான். அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சிறிதும் அதைப் பற்றி கவலைப்படாமல் விஷ மது அருந்தி 25 பேர் இறந்த பிறகும் கூட, வீட்டுக் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொண்டு விடிய விடிய வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
எத்தனை நாட்களுக்கு பரமசிவன் கழுத்தில் பாம்பாகவும் இருந்திட முடியும். எலி எவ்வளவு நாட்களுக்கு வலைக்குள் பதுங்கினாலும் புகையடித்தால் வெளியே வந்து தானே ஆக வேண்டும்.
2011 முதல் 2016 வரையிலும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது இவர் செய்த ஊழல்கள் எண்ணிலடங்கா. ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இளம் பொறியாளர்கள், வரைவாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களில் நடைபெற்ற அளவு கடந்த முறைகேடுகளில் Job For Cash அதாவது ’பணம் கொடுத்தால் தான் பணி’ என்று அந்த ஐந்து வருடமும் போக்குவரத்துத் துறையில் உருவான அல்லது லஞ்சத்திற்காகவே உருவாக்கப்பட்ட பணியிடங்கள் ஏராளம்! ஏராளம்.!
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 744 ஓட்டுநர்கள், 610 நடத்துநர்கள், 266 இளம் வரைவாளர்கள், 13 இளம் பொறியாளர்கள், 40 உதவிப் பொறியாளர்கள் என ஏறக்குறைய 1,670 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2014 நவம்பர் மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் அளிக்கப்பட்டது.
லஞ்சம் கொடுத்த பின்பும் வேலை கிடைக்காத பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்; பலர் நீதிமன்றம் சென்றனர். அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக் மற்றும் மருமகன் கார்த்திக் ஆகியோரிடம் பணம் கொடுக்கப்பட்டதாக இடைத்தரகர்களாக செயல்பட்ட சில போக்குவரத்து ஊழியர்கள் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டன.
2011 முதல் 2016 வரையிலும் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காரணத்தினால் அதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணையை முடக்கிப் போட முடிந்தது. மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சரவையில் பங்கு பெற்றதால், விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். புகார் கொடுத்தவர்களில் சில பேர் அமைச்சருடன் ஏற்பட்ட சமரசத்தின் படி, வழக்கை திரும்பப்பெற தயாரானார்கள். அதனுடைய அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை புகார் அளித்தவர்களுக்கும், புகார் சுமத்தப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரச அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. காவல்துறை சமர்பித்த அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிமன்றமும் அவ்வழக்கை முடித்து வைத்தது.
பாதிக்கப்பட்ட பலரும் சேர்ந்து அளித்த புகாரில் ஒரு சிலரோடு ஏற்பட்ட சமரசத்தை அனைவரது கருத்தாகவும் கருதி சென்னை உயர்ந்தீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றத்தை நாடினர். ”ஏறக்குறைய 50 கோடி ரூபாய்க்கு மேல் எழுந்த புகாரில் சமரசம் ஏற்பட்டது சட்ட விரோதம்; மேலும், பணம் வாங்கியவர்களிடத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்று கூறியது வேலை கொடுக்க லஞ்சம் வாங்கியதை ஊர்ஜிதம் ஆக்குகிறது; அரசு வேலைக்கு லஞ்சம் பெற்றது பெருங்குற்றம். எனவே செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்; ED-Enforcement Directorate அமலாக்கத்துறையும் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும்” என பலரும், ஊழலுக்கு எதிரான தொண்டு நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தை அணுகின.
கபில் சிபால், துசார் மேத்தா, கோபால் சங்கரநாராயணன், பிரசாந்த் பூசண், பாலாஜி சரவணன், சி.ஏ.சுந்தரம், சித்தார்த் குத்ரா, முகில் லோகிடாக்கி, மோகனா, சித்தார்த் அகர்வால் போன்ற உச்ச நீதிமன்றத்தில் மிகப்பெரிய மூத்த வழக்கறிஞர்கள் ஆதரவாகவும், எதிராகவும் அணி திரண்டு வாதாடினார்கள். நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், கிருஷ்ணமுர்ரே ஆகியோரிடத்திலும் இந்த வழக்கு பல மாதங்கள் நடைபெற்று நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதில் கீழ்கண்ட மிக முக்கியமான தீர்ப்புகளைக் கூறப்பட்டுள்ளது.
1. சென்னை உயர் நீதிமன்றத்தில் 31.10.2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட de novo Investigation ”மீண்டும் புதிய விசாரணை” என்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2. மேலும், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரியே தொடர்ந்து விசாரிக்க வேண்டும். மேலும் இது சாதாரண பிரிவுகளின் கீழ் இல்லாமல், லஞ்ச ஒழிப்பு பிரிவுகளின் கீழும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும்; அந்த அதிகாரி இந்த விசாரணையில் ஏதாவது சுணக்கம் காட்டினாலோ; செந்தில் பாலாஜி இன்றும் அமைச்சராக இருக்கின்ற காரணத்தினால் ஆதரவாக நடந்து கொள்வது போன்ற செயல்கள் ஏதாவது தென்பட்டாலோ; அந்த வழக்கு விசாரணையில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டாலோ உச்ச நீதிமன்றமே தலையிட்டு ”ஒரு சிறப்புப் புலனாய்வு பிரிவை” நியமிக்கப்பட வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்து உள்ளது.
3. அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்படக்கூடிய அந்த விசாரணையும் தொடர வேண்டும் எனவும், இந்த வழக்கை இரண்டு மாதத்திற்குள்ளாக முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இது சாதாரணமாக கீழமை கோட்டினுடைய உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும்; காவல்துறையை தன் வசம் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு போடப்பட்ட கிடிக்குப்பிடியும் ஆகும். செந்தில் பாலாஜி தனக்கு வரும் முறைகேடான வருமானத்தைத் தினமும் கோபாலபுரம் குடும்பத்தில் தவறாமல் கப்பம் கட்ட கூடியவர். யார் இறந்தால் என்ன? எப்பெண்மணி அனாதியானால் என்ன? தங்களுக்கு உண்டான பங்கு சிந்தாமலும் சிதறாமலும் வந்து விட வேண்டும் என்பதில் செந்தில் பாலாஜியும், ஸ்டாக்கிஸ்ட் குடும்பமும் தெளிவாக இருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி மீதான விசாரணையைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு ஒரு பக்கம்; சட்டவிரோதமாக மது விற்பதன் மூலமாக ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் வீடு வந்து சேர வேண்டும் என்ற கவலை இன்னொரு பக்கம். இதில் எதை விட்டுக் கொடுப்பது என்று ஸ்டாலினுக்கு திண்டாட்டமாகத் தான் இருக்கும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு between the devil and the deep sea ஆர்ப்பரிக்கும் ஆழ்கடல் போன்ற டாஸ்மாக் ஊழல் ஒரு பக்கம்; அச்சுறுத்தும் பூதமாக தனது குடும்ப வருமான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னொரு பக்கம். திமுக அரசு ’நாட்டின் நலன் தான் முக்கியம்’ என்று கருதி இருந்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்க வேண்டும். ஸ்டாலின் இந்த நிமிடம் அவரை அதைச் செய்யவில்லை.
அமைச்சர் ஒருவர் மீது 89 பக்கங்களில் 132 பாராக்களாக தொகுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக மக்களுக்கு எதுவுமே தெரியாது; எல்லாம் கடந்து போய் விடுவார்கள்; மரக்காணம் – மதுராந்தம் மது பிரியர்கள் மரணத்தில் எல்லாமே மறந்து போய்விடும் அல்லது மாயமாகிவிடும் என்று எண்ணினால் அது தவறானது. செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்துக் கொண்டு ஒரு நேர்மையான, நியாயமான விசாரணையை நிச்சயமாக தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ள இயலாது.
எனவே, நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்; நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், செந்தில் பாலாஜி இந்த நிமிடமே அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். களவாணியை இப்பொழுது கவ்விப் பிடித்தே ஆக வேண்டும்; இல்லையென்றால் டெல்லியிலிருந்து கிடுக்கிப்பிடிப் போட உச்சநீதிமன்றமும் தயார்; அமலாக்கத்துறையும் தயார்.
சமூக நீதி என்று நீதியின் வார்த்தையை மாடல் ஆட்சியில் அடிக்கடி சேர்த்துக் கொள்கிறீர்கள். குறைந்தபட்சம் அந்த வார்த்தைக்காவது மதிப்பளிக்க கூடிய வகையில் நீதியை நிலைநாட்டுங்கள். ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இளம் வரைவாளர்கள், இளம் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் என ஏழை, எளியவர்களின் பிள்ளைகள் நாடும் பணியிடங்களுக்குக் கூட கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற ஊழல் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்கு முயலாதீர்கள். அது உங்களுக்கும் காலகாலத்திற்கும் அவப்பெயரைக் கொண்டு சேர்க்கும்; உங்கள் ஆட்சிக்கும் அது கேடு விளைவிக்கும். செந்தில் பாலாஜி இன்றே அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதுவே நீதியைக் காப்பாற்றும் மார்க்கமாகும்.
ஓட்டுநர் – நடத்துநர் வேலைக்கு ரூ 50 கோடி லஞ்சம்!
ஊர்ஜிதமாகும் உச்சநீதிமன்ற தீர்ப்பு.!
குற்றவாளியைப் பதவியில் வைத்துக் கொண்டு
நியாயமான விசாரணை நடத்த முடியாது.!
நீதியை நிலைநாட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து
நீக்க வேண்டும்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
17.05.2023