உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லியில் பேரணி
புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.!
நவம்பர் 7 ஆம் தேதி பல தடைகளையும் தாண்டி சென்னை பேரணி வெற்றிகரமாக அமைந்துவிட்டது. காலங்கள் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மட்டும் மாறவில்லை; மாறாது என்பதற்கு மேலும் இந்நிகழ்வு ஒரு உதாரணம். ஆட்சி அதிகாரங்கள் ஒரு சிலரின் கைகளில் இருப்பதால் தானே இந்நிலை தொடர்கிறது. ஆட்சி அதிகாரத்தை மாற்றி நம் கைக்கு கொண்டு வர வேண்டும் என்ற உன்னதமான இலக்கை நோக்கி வருங்காலங்களில் பயணிப்போம்.!
2026 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றம் புதிய தமிழகத்தால் நிகழ்த்தப்பட வேண்டும்! ஆட்சியில் புதிய தமிழகமும் அமர்த்தப்பட வேண்டும்! இது வெறும் கனவுகள் அல்ல; லட்சியக் கனவுகள்! நிச்சயம் நிறைவேறும்.!!
ஐயா.! சென்னை பேரணியில் கலந்து விட்டு இப்பொழுது தானே வீடு வந்து சேர்ந்துள்ளோம்! மீண்டும் டெல்லியா? என்ற உங்களின் குரல் எனக்கு கேட்காமல் இல்லை.!!
என்ன செய்வது! சிலர் பதவி, பட்டம் நோக்கிப் பயணிக்கிறார்கள்.! அதற்காக நம் சமூக மக்களைக் காட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்!! நாம் அப்படி இருந்து விட முடியாது!! ஒவ்வொரு கட்சிக்கும் லட்சியமும் பாதையும் வேறுவேறாகத்தான் இருக்கும். நமது புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து நமது பாதை தெளிவானது; வெளிப்படையானது; தூய்மையானது; மக்களின் விடுதலைக்கானது.!!
கடந்த 30 வருடத்தில் நாம் வெற்று அரசியல் கோஷங்களை எழுப்பி அரசியல் செய்ததில்லை; பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடியதும் இல்லை; ஒளிந்து கொண்டதுமில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நேரடியாக எதிர்கொண்டுள்ளோம். இன்னும் எதிர்கொள்வோம்.! நமது பாதையே வெற்றி பெற்றிருக்கிறது.
அரசு வேலை வாய்ப்புகளில் சட்ட ரீதியாகக் கொடுக்க வேண்டியதை, கொடுக்காத போது வெள்ளை அறிக்கை கேட்டோம்; அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் பலன் பெற்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அரசு கல்லூரிகளில் 50 ஆண்டுகளாக நிரப்பப்படாத 1400 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை பெற்றுத் தந்தோம்.
அதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத போலி சமூக நீதி காவலர்கள் 2008இல் 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலிந்து திணித்து நமது உழைப்பின் பயனை ஒரு குறிப்பிட்ட மிக மிக சிறுபான்மையினருக்கு பிடுங்கிக் கொடுத்து விட்டார்கள். அதனால், தேவேந்திர குல வேளாளர்களும், ஆதிதிராவிடர் / பறையர் சமூக இளைஞர்களும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 2008இல் அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் கொடுத்த எதிர்ப்பை போன்றே சக அமைப்புகளும் தெரிவித்து இருந்தால் நிலைமைகள் வேறு. கடந்த 15 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் மூன்று சதவீதத்தினருக்கு தாரைவார்க்கப்பட்டது தெரிந்திருந்தும் இன்னும் அதை எதிர்க்கத் துணிவின்றி காலை ஒன்றும், மாலை ஒன்றும் பேசி வருகிறார்கள்.
யார் ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் தேவேந்திர குல வேளாளர்கள், ஆதி திராவிடப் பறையர் இன மக்களின் சட்ட ரீதியான உரிமைகளை மீட்டெடுக்கும் வரையிலும் நமது போராட்டம் தொடரும்!! எவ்வித அடிப்படை புள்ளி விவரங்களும் இன்றி தாரைவார்க்கப்பட்ட மூன்று சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரையிலும் நாம் போராடியே தீர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகளின் வாயை அடைத்து விட்டு ”ஒரு குறிப்பிட்ட சாதியின் வளர்ச்சியில் மட்டுமே இன்றைய ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்துகின்றனர்; சிறப்பு உட்கூறுத்திட்டத்திலும், அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் (AABCS) உள்ளிட்ட பட்டியலினத்தவருக்கு வழங்கப்படும் அனைத்துத் திட்டங்களிலும் பெரும் மோசடி நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் பதவி உயர்வு ரத்து செய்யப்படுகிறது; கிரிமிலேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது; இதுபோன்று நமது வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் D-MODEL அரசு செயல்படுகிறது.
இந்த அரசின் உண்மை முகத்தை தேசிய அளவில் அம்பலப்படுத்த வேண்டி உள்ளது. இட ஒதுக்கீட்டில் தமிழகத்தில் நடைபெறும் மோசடியை மத்திய அரசின் கவனத்திற்கும், தேசிய அளவிலும் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ஒரு பிரச்சனையை பாதியில் விட்டு விட முடியாது. அது புதிய தமிழகம் கட்சியின் பழக்கமும் இல்லை; வழக்கமும் இல்லை. 3% உள் இட ஒதுக்கீட்டால் ஏற்படும் பாதிப்புகளை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர்/பறையர் சமூக அரசு ஊழியர்களும், களப் போராட்ட அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் நன்கு தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி, அது குறித்து வெளிப்படையாக தங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். 30 வருடங்களுக்குப் பிறகு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு வருகிறது.
எனவே தான், டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் டெல்லியில் பேரணி மற்றும் கருத்தரங்கு மிக மிக முக்கியமானது. எவ்வளவு சிரமம் இருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் அவசியம் கலந்து கொள்ள ஆயத்தமாகுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை பேரணியை விட இன்னும் பத்து மடங்கு டெல்லி பேரணியும் கருத்தரங்கும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெறப் போகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணியில் கலந்து கொள்ளாமல் இருப்பது எப்படி நியாயமாகும்! ஆயத்தமாகுங்கள்.! அணி திரளுங்கள்.!!
டெல்லியில் ஒன்று கூடுவோம்.!
வரலாறு படைப்போம்.!
3% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்.!!
அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட
இட ஒதுக்கீடு உரிமையை மீட்டெடுப்போம்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.11.2024