‘இராஜீவ் காந்தி’ கேல் ரத்னா விருது பெயர் நீக்கம் அவசியமற்றது!
399 Views
![]()
’தயான் சந்த்’ அவர்களின் பெயரில் விளையாட்டு வீரர்களை உருவாக்க புதிய விருது-அகாடமி உருவாகட்டும்!!
தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் 1991-92 முதல் இன்று வரையிலும் மத்திய அரசால் ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ வழங்கப்பட்டு வருகிறது. ’கேல் ரத்னா’ என்றால் ’Sports Gem -விளையாட்டில் மாணிக்கம்’ என்று பொருள்படும். சர்வதேச சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் இந்த விருதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயர் நீக்கப்பட்டு முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் தயான் சந்த் அவர்களின் பெயரில் மட்டுமே வழங்கப்படுமென பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஹாக்கி ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதுள்ளது, அது இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதும், பெருமை சேர்க்கக்கூடியதுமே. அதேபோல மகளிர் அணியும் பதக்கங்கள் எதுவும் பெறவில்லை என்றாலும், கடைசி வரை போராடி தங்களுடைய அபரிதமான திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஆடவர் அணி மற்றும் மகளிரணி வீரர்களைக் கௌரவப்படுத்த பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எண்ணுவதில் எவ்வித தவறும் இல்லை; அவருடைய முயற்சி பாராட்டத் தகுந்ததே.
எனினும்,இளம் வயதில் இந்த நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணம் செய்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயரை நீக்கித்தான், அவ்வுயரிய விருதுக்கு தயான் சந்த் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற அவசியமில்லை.இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, 1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கங்களைப் பெற முக்கியக் காரணமாக இருந்தவர் தயான் சந்த் அவர்கள்.
அவர் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பந்தை லாவகமாகக் கடத்திச் செல்வதைப் பார்த்த பலரும் அவருடைய ஹாக்கி மட்டையில் ஏதாவது நவீன பசையை ஒட்டி வைத்திருக்கிறாரா? அல்லது அது மந்திர மட்டையா? என்று கூட விமர்சனம் செய்தது உண்டு. 1936-ல் இந்திய அணி 8-1 என்ற கணக்கில் ஜெர்மனியைத் தோற்கடித்த போது, அந்த நாட்டின் அதிபர் ஹிட்லர் அவர்கள் தயான்சந்த் அவர்களை ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூட அழைப்பு விடுத்தது உண்டு. அந்த அளவிற்கு அற்புதமான ஹாக்கி விளையாட்டு வீரர்.
அவருடைய பெயரில் ஏற்கனவே டெல்லியில் பெரிய விளையாட்டு மைதானம் ஒன்று இருக்கின்றது. அவர் எந்தவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளாகாதவர். தன்னுடைய அபரிதமான விளையாட்டு திறமையால் மட்டுமே இந்தியாவின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியவர். அவரது பெயரில் விருது வழங்கப்படுவது எவ்விதத்திலும் அரசியல் சர்ச்சைக்கு இடம் அளிப்பதாக இருந்து விடக்கூடாது.
ராஜீவ் காந்தி அவர்கள் விளையாட்டு வீரர் இல்லை என்றாலும் கூட, அவருடைய ஆட்சி காலத்தில் தான் இளைஞர்கள் வளர்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே நாடெங்கும் விளையாட்டுகள் முக்கியத்துவம் பெற்றன. எனவே, அந்த உயரிய மதிப்புடைய விருதையும், பணம் முடிச்சுகளையும் எந்த விதத்திலும் சர்ச்சைக்குரியதாக ஆக்கி விடக்கூடாது என்பதே அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அந்த விருது ராஜீவ் காந்தி பெயரின் அடிப்படையிலேயே தொடரவும் வேண்டும், அதே போல தயான் சந்த் பெயரில் ஒரு புதிய விருது ஒன்றை உருவாக்கி, அதை ஒலிம்பிக்கில் வெற்றி பெறக் கூடியவர்களுக்கு மட்டும் கூட பிரபல்யபடுத்தலாம்; தற்போது வழங்கப்படும் 25 லட்சத்தை ஒரு கோடியாக கூட உயர்த்தலாம். அது மட்டுமின்றி தயான் சந்த் அவர்களின் பெயரிலேயே இந்தியாவெங்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையில் குறைந்தது 5-10 ஆண்டுகளுக்கு உண்டு, உறைவிட விளையாட்டு பள்ளிகளை மாவட்டந்தோறும் துவங்கும் புதிய முயற்சியிலும் ஈடுபடலாம்.
எனவே,சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் தேசத்தை அடையாளப்படுத்தக் கூடியவர்களுக்கு ஏற்கனவே உள்ளபடி ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ என்றே தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், ஒலிம்பிக் போட்டிக்கென்றே அகில இந்திய அளவில் தயான் சந்த் ’ஒலிம்பிக் அகாடமியை உருவாக்கி, அதை இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்வதுமே சரியானதாக இருக்க முடியும் என தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பெயரிலேயே ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ தொடரட்டும், தயான்சந்த் அவர்களின் பெயரில் ’ஒலிம்பிக் அகாடமி’ ஒன்று இந்தியாவில் புதிதாக உருவாகட்டும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.08.2021






