திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு
492 Views
![]()
அரசியல் உள்நோக்கத்துடனும், சாதிரீதியான மனோபாவத்துடனும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினரை உடனடியாக விடுதலை செய்யவும், அப்பட்டமான இந்த மனித உரிமைமீறல் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக மனித உரிமை ஆணையம், உள்துறை முதன்மைச் செயலாளர் (தமிழ்நாடு), தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட புகார் மனு:
தமிழகத்தினுடைய அரசியல் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கக்கூடிய ஓர் அப்பட்டமான மனித உரிமை மீறலை தங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். புதிய தமிழகம் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் மாவட்டம், பழனி எஸ். விஜயகுமாரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் க.சிவநாதன் பாண்டியனும் 2022 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி திண்டுக்கல் மாநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அடுத்த ஆறே நாட்களில் 06.05.2022 அன்று நிர்வாகிகள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பிரயோகித்துள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை செய்த சட்டவிரோத செயலை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்தே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விஜயகுமாரும் சிவநாதன் பாண்டியனும் புதிய தமிழகம் கட்சியின் விசுவாசமிக்கத் தொண்டர்களாகச் செயல்பட்டு வரக்கூடியவர்கள். எங்கள் கட்சியின் சார்பாக ஜனநாயக ரீதியாக அறிவிக்கப்பட்ட போராட்டங்களைத் தவிர, அவர்கள் எவ்விதமான சமூகவிரோத செயல்களிலும் எக்காலத்திலும் ஈடுபட்டவர்கள் அல்ல. அது போன்று எவ்விதமான வழக்குகளும் அவர்கள்மீது கிடையாது.
’குண்டர் சட்டம்’ என்பது கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், கடத்தலில் ஈடுபடுவோர், மணல் கடத்தல் செய்வோர், போதை மருந்து கடத்துவோர், நில அபகரிப்பு செய்வோர் போன்ற சமூக விரோதிகளை எவ்வித விசாரணையுமின்றி ஒரு வருடத்திற்குச் சிறையில் அடைப்பதாகும். ஆனால் அந்தச் சட்டத்தை அரசியல் கட்சியின் தொண்டர்கள்மீது ஏவியது எவ்விதத்தில் நியாயம்?
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ‘மக்கள் சபை‘ நிகழ்ச்சியில் தமிழகத்திற்குத் தேவை தேசிய மாடலா? திராவிட மாடல் அரசா? என்ற தலைப்பின் கீழ் ’தேசிய மாடலின் சிறப்பு’ குறித்து நான் பேசிக்கொண்டிருந்தபொழுது, ஏற்கனவே திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த திமுகவினர் அந்த அரங்கிலேயே கலவரம் செய்தார்கள்; என்னைப் பேச விடாமல் தடுத்திட முயற்சி செய்தார்கள். திமுகவினரின் இந்த ஜனநாயக விரோத போக்கைக் கண்டிக்க கூடியவகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக அந்தந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதே போன்று, கடந்த 30 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக விஜயகுமார் மற்றும் சிவநாத பாண்டியன் ஆகியோரின் தலைமையில் 32 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக தமிழகத்தில் இது போன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடியவர்களைக் கைது செய்து, அன்று மாலையே விடுதலை செய்து விடுவது தான் வழக்கம். ஆனால் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 32 பேரையும் அன்று மாலை விடுதலை செய்யாமல், தனித்தனியாகப் பிரித்து 10 பேர் திண்டுக்கல், மற்றொரு 10 பேர் தேனி, மீதம் 12 பேர் மதுரை என வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 2 ஆம் தேதி (திங்கட் கிழமை) திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிணை விடுப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக மூன்றாவது நாளான 04.05.2022 – புதன் கிழமையே விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் புதன்கிழமை விசாரிக்கப் படாமல் 05.05.2022 – வியாழக்கிழமை விசாரித்து, 06.05.2022 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அவர்களுடைய பிணை விடுப்பை நிராகரித்து நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. தீர்ப்பில் காவல்துறையினர் அவர்கள்மீது குண்டர் சட்டம் போட உள்ளதால் எதிர்ப்பு தெரிவித்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுவாக அவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம் 143, 341, 285, 153A(1)a, 505(1)(b) ஆகிய பிரிவுகளுக்கு பிணைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வழக்கின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல் காவல்துறையின் அழுத்தத்தின் பேரில் தீர்ப்புக் கூறியதே முதற்கண் அநீதியாகும். அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
06.05.2022 – வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு விஜயகுமார் மற்றும் சிவநாத பாண்டியன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான குண்டர் சட்ட உத்தரவுடன் காவல்துறையினர் மதுரை செல்வதாகத் தகவல்கள் வந்தன. மாவட்ட ஆட்சியர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. ஒரு சாதாரணமான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு இவர்கள் இருவரும் எப்படி உடந்தையானார்கள்?.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பட்டங்கள் பெறுகின்றபொழுது, ’இந்திய அரசியல் சாசனத்தின்பால் நம்பிக்கை கொண்டு, எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் நடந்து கொள்வோம்’ என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்த தெய்வத்தின் மீதோ அல்லது மனசாட்சியின் அடிப்படையிலோ எடுத்துக்கொண்ட உறுதி மொழி அன்று என்ன ஆயிற்று? ஆட்சியாளர்கள் இன்று இருக்கலாம்; நாளைப் போகலாம். இது போன்ற சட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் பதில் சொல்லக் கூடியவர்கள் அதிகாரிகள் தான் என்பதை அவர்கள் ஏன் உணராமல் போனார்கள்?
தன்னை எதிர்த்து எவ்விதமான ஆர்ப்பாட்டமும் நடைபெறக் கூடாது என்று முதலமைச்சர் எண்ணுவதற்கு ஸ்டாலின் ஒன்றும் ’முடிசூடா மன்னனும்’ அல்ல, தனது மாவட்டத்தில் ஒரு சிறிய ஆர்ப்பாட்டமும் நடத்தக் கூடாது என்று மாவட்ட அமைச்சர் எண்ணுவதற்கு ஐ.பெரியசாமி ஒன்றும் ’குறுநில மன்னரும்’ அல்ல. ஒருவேளை ஸ்டாலினும், பெரியசாமியும் அந்த எண்ணத்தோடு இருந்தாலும்கூட, மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். விசாகன்.இ.ஆ.ப, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. வி.ஆர்.சீனிவாசன், இ.கா.ப ஆகியோர் இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத செயலுக்குத் துணை போனது ஏன்? அதிகாரிகள் ஆட்சியாளர்களின் PRIVATE ARMYகளா? இந்திய மக்கள் அனைவரையும் பாதுகாக்க இந்திய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஏன் உணர மறுத்தார்கள்? இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை, ஜனநாயகப் படுகொலையை நாம் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.! தமிழ்நாட்டில் இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்பொழுது திமுக ஆட்சியிலும் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்திய அனைவர் மீதும் குண்டர் சட்டங்கள் ஏவப்படுகிறதா? அப்படி ஏவப்பட்டால் அது ஜனநாயகமாகுமா?
2017 ஆம் ஆண்டிலிருந்து தான் ஆட்சிக்கு வந்த 2021மே மாதம் வரை ஸ்டாலின் மற்றும் திமுக நடத்திய போராட்டங்களுக்கும், அதில் பங்கு பெற்ற திமுக காரர்கள் மீதும், கூட்டணி கட்சியினர் மீதும் எவ்வித குண்டர் சட்டங்கள் போடவில்லையே! ‘நீட் எதிர்ப்பு’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம், கலவரம் என்று சட்டம் ஒழுங்கைச் சீர் குலைத்தார்கள்; 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏறக்குறைய 2 ஆண்டுக் காலம் கரோனா ஊரடங்கு அமலிலிருந்த பொழுதே தடைகளை மீறி ஊர் ஊராகச் சென்று ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்தினார்; 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோரைக் கூட்டி விடிய விடிய மெரினாவிலும், மதுரையிலும், கோவையிலும் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது: இந்திய அரசியல் சாசனத்தின்பால் நியமிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதற்காக மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் சென்றபொழுது எல்லா மாவட்டங்களிலும் திமுகவினரால் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது: ஆளுநர் மாளிகை நோக்கி கனிமொழி தலைமையின் கீழ் முற்றுகை போராட்டம் நடைபெற்றது: கோவை தொண்டாமுத்தூரில் காவல்துறை அனுமதியை மீறி ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தைக் கூட்டினார்: பாரத பிரதமர் மோடி அவர்கள் அரசு விழாவிற்காக தமிழகம் வந்தபோது விமானம் நிலையம் முழுவதும் கருப்பு கொடியும், ஹெலிக்காப்டரில் செல்லும்போது கூடக் கருப்பு நிறத்தை பார்க்க வேண்டும் என கருப்பு பலூன்களைப் பறக்க விட்டார்கள், மாற்றுப்பாதையில் ஐ.ஐ.டி வளாகத்திற்குள் சென்றபிறகும் கூட கருப்புக்கொடி காட்டப்பட்டது: பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தாக்கப்பட்டார்கள்; சுங்கச்சாவடிகள் உடைக்கப்பட்டன; 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கும் நாள்வரை கரோனா முழு முடக்க உத்தரவு அமலிலிருந்தது: கூட்டம் கூட்டக் கூடாது என உத்தரவு இருந்தது ஆனால் அதையும் மீறி தமிழகம் முழுவதும் ஸ்டாலினும் உதயநிதியும் சட்டவிரோதமாகக் கூட்டங்களைக் கூட்டினார்கள்: கடந்த 15 தினங்களுக்கு முன்பு கூட மேதகு ஆளுநர் ரவி அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அவரின் வாகனங்கள்மீது கொடிக்கம்பங்கள் எறியப்பட்டதே அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டனரா? குண்டர் சட்டம் பாய்ந்ததா?
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் அரங்கில் கலவரம் செய்ய முற்பட்ட திமுகவினரைக் கண்டிக்கவும், ஸ்டாலின் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் செய்திருந்தால் அது ஒரு நாணயமான தலைமை என்று கருதலாம். ஆனால் ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்குக் கூட அனுமதிக்காமல் கலவரம் செய்த திமுகவினர் மீது அக்கட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட கட்சியின் தொண்டர்கள் தன்னிச்சையாக ஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்தினால் அதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள்மீது வழக்குப் போட்டதும், சிறையில் அடைப்பதும், அதன் முன்னணி செயல் வீரர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததும், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடனும்; அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடும் அரசு இயந்திரத்தை எதிர்க்கட்சியினர் மீது தவறாகப் பயன்படுத்தும் அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எளிய மக்கள்மீது காவல்துறை நடத்திய எண்ணற்ற அத்துமீறல்களை சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எடுத்துவைத்தும், சட்டரீதியாகப் போராடியும் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே இதைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக தமிழகத்தில் வேறு எவருக்கும் இந்த அநீதி வரும் காலங்களில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக இதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியை நிர்வாகிகளான எஸ்.விஜயகுமார் மற்றும் சிவநாதபாண்டியன் ஆகியோர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்; திண்டுக்கல் மாவட்ட அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி சாதி ஆதிக்க எண்ணம் கொண்டவர். தனது கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை எதிர்த்து தனது மாவட்டத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்று விட்டது. எனவே, போராடியவர்களை சட்டத்தின் துணை கொண்டு அடக்கி ஒடுக்கி விட வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்குடனும், ஆதிக்க – சாதிரீதியான மனோபாவத்துடனும் மாவட்ட அமைச்சர் என்ற அதிகாரத்தைக் கொண்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரையும் பணியவைத்து குண்டர் சட்டத்தை ஏவி அதிகார துஷ்பிரயோகம் மூலம் சட்ட விரோதக் குற்றச் செயலைச் செய்துள்ளார். எனவே, நடந்தது முழுக்க முழுக்க அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். எனவே இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை விசாரித்து அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, பிணை வழங்காமல் இன்னும் வெவ்வேறு சிறைகளில் உள்ள திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் 32 பேரை உடனடியாக விடுதலை செய்யவும், மாநில துணைப் பொதுச்செயலாளர் பழனி எஸ்.விஜயகுமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் க.சிவநாத பாண்டியன் ஆகியோர்மீது புனையப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
10.05.2022






