மகளிர் தினம் கொண்டாடுவதல்ல பெருமை ! மகளிரை விடுதலை செய்வதே பெருமை!!
398 Views
![]()
மகளிர் தினம் கொண்டாடுவதல்ல பெருமை !
மகளிரை விடுதலை செய்வதே பெருமை!!
சர்வதேச மகளிர் தினத்தன்று அனைத்து மகளிருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாந்தர் குலத்தில் சரிபாதியாக இருக்கக்கூடிய மகளிர், சமுதாயத்தில் தாயாகவும், துணைவியாகவும், சகோதரியாகவும், பெற்ற மகளாகவும் பல்வேறு பாத்திரங்களில் மிளிர்கிறார்கள். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுகின்ற அதேவேளையில் மகளிருக்கான சமத்துவத்தையும் அவர்களுடைய வளர்ச்சியையும் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.
நாகரீகம் பெறாத நாடோடிகளாக வாழ்ந்த ஆதிகாலத்தில் பெண்ணே, ஒரு குழுவிற்கு தலைமை தாங்கக்கூடிய பாத்திரத்திலிருந்திருக்கிறாள். அன்று புராதன கால பொதுவுடைமை சமுதாயம் நிலவியது. பெண்ணினம் சுதந்திரமாக இருந்தது. மனிதகுலம் ஓரிடத்தில் நிலை கொண்டு வாழப் பழக்கப்பட்ட பிறகு குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற அமைப்புகள் உருவாகின. ‘தனது சொத்து – தனது வாரிசு’ என்ற எண்ணங்கள் உருவானபோது, பெண் தனது சுதந்திரமான வரலாற்றுப் பாத்திரத்தை இழந்து, அடிமைப்படுத்தப்பட்டு, குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாக்கப்பட்டாள். எல்லாவிதமான அடிமைத்தனத்திற்கும் ’பெண்ணடிமைத்தனமே’ முதன்மையாக இருந்திருக்கிறது.
இந்த நாடு, அந்த நாடு என்று இல்லாமல் மனிதகுலம் பரவியிருந்த அனைத்து கண்டங்களிலும், நாடுகளிலும் ஏதாவது ஒருவிதத்தில் பெண் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டிருக்கிறாள். ஆணின் உடல் வலிமையும், இயற்கையாகவே ஒன்றி பிணைந்த தாய் பாரமும் பெண்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தின. பத்தாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே, பெண்கள் நசுக்கப் பட்டதற்கான வரலாறுகள் உண்டு. மனித மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக புரட்சிகள் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தன. அதே காலகட்டங்களில் பெண்களுடைய அடிமைத்தனமும் அதிகரித்தது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த கருப்பின பெண்கள் சொல்லொணா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஐரோப்பா கண்டம் மற்றும் அமெரிக்கக் கண்டம் முழுமைக்கும் கப்பல் கப்பலாக ஏற்றிச் செல்லப்பட்டார்கள். ஆசிய கண்டம் குறிப்பாக இந்தியாவிலிருந்து அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பர்மா, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள ரப்பர் தோட்டங்களுக்கும்; பீஜி மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கரும்புத் தோட்டங்கள் மற்றும் தங்கச் சுரங்கங்களுக்கும் பணிபுரிய பெண்கள் கப்பல் கப்பலாகக் கொண்டுச் செல்லப்பட்டு அவர்கள் ஈவிரக்கமற்ற முறையில் பிழிந்தெடுக்கப்பட்டார்கள்.
மகளிர் தினம் எல்லா மகளிருடைய விடுதலைக்கானதாகவும், உயர்வுக்கானதாகவும், சுதந்திரத்திற்கானதாகவும் இருந்தாலும்கூட இந்த நவீனக் காலத்திலும் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலையில் இன்னும் ஆணாதிக்கத்திற்கும் வறுமைக்கும் ஆட்பட்டுக் கடை நிலையிலும் கடை நிலையாக உள்ள மகளிர் விடுதலை கேள்விக் குறியாக உள்ளது.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் குடும்பத் தலைவனாக ஆண் இருந்தபோதிலும், இன்னும் பல குடும்பங்களில் வருமானம் ஈட்டக்கூடியவர்களாகவும், அந்தக் குடும்பங்களைத் தாங்கிப் பிடிக்கக் கூடியவராகவும் பெண்களே இருக்கிறார்கள். ’மண்ணடிமை தீராமல் பெண்ணடிமை தீராது’ என்பது பொதுவிதி. தனிச்சொத்தும் அரசும் உருவான காரணத்தினாலே தான் பெண் அடிமைத்தனத்திற்குத் தள்ளப்பட்டார். எனவே, equity and equality என்ற அடிப்படையில் சமத்துவமும் சம பங்கும் நிதர்சனம் ஆகும் நாள் என்றோ அன்று தான் உண்மையான பெண் சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.
தீண்டாமையும், பெண் தனக்குக் கீழானவனவள் என்ற எண்ணங்களும் சமூகத்தில் புரையோடியுள்ள ஒரு மனநோய் தான். பெற்ற தாய் ஆனாலும்; உடன்பிறந்த சகோதரி, பெற்ற குழந்தையானாலும் பெண் ஆணுக்குச் சமமானவர்கள் அல்ல என்ற மனப்பான்மை பலரது நெஞ்சங்களில் என்பதைவிட அவர்களுடைய ஒவ்வொரு மூலக்கூறிலும் குடிகொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
ஆணின் வளர்ச்சி எவ்வளவாக இருந்தாலும் அந்த வளர்ச்சியில் பெண்ணின் பங்கு இல்லாமல் இருக்கவே முடியாது. ஒருவருக்கு தாயாக இருக்கலாம், ஒருவருக்கு மனைவியாக இருக்கலாம், ஒருவருக்கு உடன்பிறந்த சகோதரியாக இருக்கலாம். மகளிர் தான் ஏதாவது ஒரு விதத்தில் ஆண்களின் வளர்ச்சிக்குப் பக்கபலமாகவும் உந்துவிசையாகவும் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்தை வெகுவாகப் போராடி நிலை நிறுத்திக் கொண்டார்கள். பாரத பெண்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
பெண்களே பெண்களை உயர்வாக நடத்தும் எண்ணங்கள் இன்னும் வரவில்லை. அதில் சாதி உயர்வு – தாழ்வு வந்துவிடுகிறது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வந்துவிடுகிறது, கல்வி உயர்வு – தாழ்வுகள் வந்துவிடுகிறது, மத பிரச்சனைகள் வந்துவிடுகிறது. தனிக்குடும்ப முறைகள் உருவாகாத இந்தியச் சமுதாயத்தில் திருமணமாகி ஒரு வீட்டுக்குச் செல்லக்கூடிய பெண் இன்னொரு பெண்ணால் அங்கு மருமகளாக ஒருபடி குறைவாகவே நடத்தப்படக்கூடிய நிலையை நாம் பார்க்கிறோம். மாமியார் மருமகள் மோதல் என்பதும் பெண்ணடிமைத்தனத்தின் ஒரு பகுதியே. சாதிய மேலாண்மை போக்குகள் இன்னும் பெரும்பாலான பெண்ணினத்தைச் சமமாக மதிப்பதில்லை.
புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தோடு அணுகினார்கள். அதை ஒரு தொழிலாளர்களின் போராட்டமாகக் கூடப் பெரும்பாலான முற்போக்கு சக்திகள் கருதவில்லை. அவர்கள் மட்டுமல்ல, திராவிட மாடல் ஸ்டாக்கிஸ்ட்கள் அதன் ஆன்மாவாக விளங்கிய மனிதநேயத்தை கூடப் புரிந்து கொள்ளவில்லை. பெண் விடுதலையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய ஐயாயிரம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலும் தேயிலை பறிப்பதில் ஈடுபட்டவர்கள் பெண்கள் தான். நூற்பாலைகளிலும், அரசு நிறுவனங்களிலும் 8 மணி நேர வேலை வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனாலும் கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், நாடி நரம்புகளைப் பிளிர்த்தெடுக்கும் குளிர் போன்ற மோசமான இயற்கை சூழல்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை லாந்தர் விளக்குகள் கையிலே வைத்துக் கொண்டு பணிபுரிய வேண்டிய அவல நிலை இருந்தது. கைக்குழந்தையுடன் இருந்த தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் மார்பகங்கள் வீங்கிச் சீழ் பிடித்து மரணித்த சம்பவங்கள் எத்தனை எத்தனையோ!
’இம்மன்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்’ என்பது வெறும் வெற்றுச் சொல்லல்ல. இவர்கள் அனுபவித்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டால் கசையடிகளுக்கு ஆளானார்கள்; இடம் மாற்றப்பட்டார்கள்; சொல்லாலும் செயலாலும் பல்வேறு அவமானங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். கல்வி கற்க வேண்டிய இளம் வயதிலும் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல் பதினைந்து ரூபாய் தினக்கூலிக்கு பணி புரிய நேர்ந்தது. அப்பெண்களின் இளமை கங்காணிகள், மேலாளர்களின் பசியை ஆற்றின. இந்தக் கொடுமைகளை எல்லாம் தட்டிக் கேட்டதற்காகவும், இதையெல்லாம் தடுத்து நிறுத்தக் குரல் கொடுத்ததற்காகவும் தான் நம் மீது கலவரக்காரர்கள் முத்திரையைக் குத்தினார் ‘முத்தமிழ் வித்தகர் க-நிதி’. தாமிரபரணியில் 17 பேர் உயிரைப் பறித்துக் கொண்டார்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள். இன்றுபோல் அன்றும் பெரும்பாலான ஊடகங்கள் விலை போயிருந்தன. மாஞ்சோலை போராட்டத்தின் நியாயத்தை வெளியே எடுத்துச் சொல்லவில்லை. அது மகளிர் விடுதலைக்கான போராட்டம் என்பதை இன்றுவரை எவரும் சொல்லவில்லை. இன்றில்லை என்றாலும் கூட என்றாவது உண்மைகளை நாம் கொண்டு வருவோம் அல்லது எவனாவது ஒருவன் அந்த அந்தப் போராட்டத்தையும் தியாகத்தையும் ’காசாக்கிட’ படமாவது எடுப்பான்.
கொடியங்குளம் போராட்டமும் அங்கு மகளிர் மீதான காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக எழுந்த எழுச்சியே. 60 வருடங்களுக்கு முன் நம்மை ஈன்றெடுத்த தாமரைத்தாய் அவர்கள் ஊட்டி வளர்த்த மனிதநேயம், மகளிர் மீதான நன்மதிப்பு, மரியாதை, அன்பு, விதைத்த வீரம் அனைத்தும் இன்று உதித்த செந்தாமரை போல் அதே அழகோடும், அதே உணர்வோடும், அதே மணத்தோடும், அதே குணத்தோடும் புதிய தமிழகமாக, தமிழகம் தாண்டி – பாரதம் தாண்டி உலகெங்கும் வாழக்கூடிய மகளிர்களுடைய சமத்துவத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறோம்; பயணித்தும் கொண்டிருக்கிறோம்.
மகளிர் தின வாழ்த்துச் சொல்வது மற்றவர்களுக்கு ஆண்டொன்றுக்கு அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான ஒரு சடங்கு. நமக்கோ மகளிர் விடுதலை என்பது மனித குல விடுதலையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து அதை நிறைவேற்றுவதற்கான கடமையுடன் செயல்படுகிறோம். தமிழக மகளிர் துயரத்தை டாஸ்மாக்கால் மறைக்கலாம்; தேர்தல் நேர ஊழலால் ஊனப்படுத்தலாம்; துண்டுக் கரும்பால் அவமானப்படுத்தலாம்; நூறு நாள் வேலையைத் தலையில் சுமத்தி அவர்களின் துயரத்தை நிரந்தரமாக்க முயற்சிக்கலாம். இத்தனையும் செய்துவிட்டு மகளிருக்காக முழங்குவார்கள். ஆனால், மகளிர் விடுதலையை விழுங்க நினைப்பார்கள்.
புதிய தமிழகம் மகளிர்களின் காவலாக விழிப்போடு இருக்கிறது!
மகளிரை விழிப்படையச் செய்வோம்.!
அவர்களை முழுமையாக விடுதலை செய்வோம்!
நமது பணி வாழ்த்தோடு நிற்பதில்லை; மகளிர் முழு சுதந்திரத்தோடு வாழும் வரை தொடரும்.!
அதுவே, தாமரைத் தாய் கற்றுக்கொடுத்தப்பாடம்; நாம் கற்றுக்கொண்ட பாடம்!
மகளிர் தினம் கொண்டாடுவதல்ல பெருமை!
மகளிரை விடுதலை செய்வதே பெருமை!!
– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.03.2022.






