பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் எண்ணங்களை நீக்கி, இந்து என்ற ஒற்றை அடையாளத்தில் பரிணமிக்க சபதமேற்போம்!!

அறிக்கைகள்
s2 485 Views
  • Dr Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 01 Jan 2022

Loading

பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் எண்ணங்களை நீக்கி, இந்து என்ற ஒற்றை அடையாளத்தில் பரிணமிக்க சபதமேற்போம்!!

இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் என்ற மத பேதங்களை நீக்கி, இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்தை வென்றெடுக்க சபதமேற்போம்!
2022 – புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

2022-ஆம் ஆண்டை, புதிய தமிழகம் கட்சியின் சாதனை ஆண்டாக மாற்றிக்காட்ட சபதமேற்போம்!!

2021-ஆம் ஆண்டு நிறைவுற்று, 2022-ஆம் ஆண்டு புத்தாண்டு துவங்கும் இந்நன்னாளில், புதிய தமிழகம் கட்சியினருக்கும், அன்பிற்கினிய நண்பர்களுக்கும், தமிழகம் மற்றும் இந்திய தேசத்தின் அனைத்து மக்களுக்கும், சங்கீதா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், Thaamarai World School, Indofin Kids School மற்றும் Dr.Krishnasamy’s IAS Academy ஆகிய நிறுவனங்களின் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், மாணாக்கர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், எனது சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டானது ஆங்கிலப் புத்தாண்டு என்று கருதப்பட்டாலும், உண்மை அதுவல்ல. ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத்திலும், தொன்மையிலும் முதன்மை தேசமாக விளங்கிய ரோமாபுரியில் தொடங்கி, இன்று வரையிலும் உலகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முதன் முதலில், ஜூலியஸ் சீசருடைய காலத்தில் தான் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. Janus என்ற ரோமாபுரி பெண் தெய்வத்தின் பிறந்த நாளே ஜனவரி 1 ஆகும். அதன்பின், 1582 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற கிரிகோரியன் (Gregorian) நாட்காட்டியில், ஜனவரி 1 புத்தாண்டின் துவக்கமாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அதுவே இப்பொழுதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

புத்தாண்டுப் பிறப்பை உலகெங்கும் வாழக்கூடிய மக்கள் இன்று உற்சாகத்தோடுக் கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் இன்பங்களும் துன்பங்களும் மாறிமாறி வரும்; அதுவே ஒரு சமுதாயத்திற்கும் அல்லது ஒரு நாட்டிற்கும் கூட நிகழும். தங்களிடத்திலே நிலவி வந்த சில தவறான பழக்கங்களை விட்டுவிட்டு, இந்தாண்டு முதல் நான் சிறந்த மனிதனாக மாறப் போகிறேன் என்று பலரும் சபதங்கள் ஏற்பதற்கு புத்தாண்டு நிகழ்வுகள் அடிகோலியாக அமையும். இந்தப் புத்தாண்டு உறுதிமொழிகள் அல்லது சபதங்கள் தனிப்பட்ட மனிதனுக்கு மட்டுமின்றி, ஓர் இயக்கத்திற்கும் பொருந்தி வரும்.

புதிய தமிழகம் கட்சி, அதன் உறுப்பினர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து, மகிழ்ச்சியும், எழுச்சியும் நிகழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு மட்டுமல்ல, இம்மண்ணின் மக்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் மாற்றமும், மகிழ்ச்சியும், எழுச்சியும் நிகழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். மனிதநேயமும், மாண்பும், சமத்துவமும், சமஉரிமையும், நீதியும் நிலைநாட்டப்படவும், உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும், நம்மைப் பாதுகாக்கின்ற இயற்கையும் பேணப்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

பாரத தேசத்தில் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டவும், அடையாளங்களை இழந்தோரின் அடையாளங்களை மீட்டெடுக்கவும், அதிகாரங்களை இழந்தோரின் அதிகாரங்களை வென்றெடுக்கவும், இந்த தேசத்தின் பண்பாட்டையும், பெருமையையும் நிலைநாட்டவும் உருவெடுத்த நம்முடைய புதிய தமிழகம் கட்சி, சமூகத்தளத்தில் இம்மண்ணின் பூர்வீகக் குடி மக்களின் அடையாளத்தை மீட்டுக் கொடுத்து, ஆயிரமாண்டுகாலம் யாரும் செய்யாத சாதனையை 2021-ஆம் ஆண்டு நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். ஆனால், அரசியல் தளத்தில் நம்பிக்கை துரோகத்தால் தற்காலிகமாக 2021-ல் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தோம். கட்சித் தலைமையின் அதிகாரத்தை அல்லது கட்சியின் பெருமையை நிலைநாட்டுவது என்பதெல்லாம் வரலாற்றில் வந்து போய்விடும்.
ஓர் இயக்கம் அல்லது அரசியல் கட்சி சமூகத்தளத்தில் என்னென்ன சாதனைகளைச் செய்கிறதோ அவை மட்டுமே நிலைத்து நிற்கும்; அவை மட்டுமே பேசும் பொருளாகும்; அவை மட்டுமே வரலாறாகும்; அவை மட்டுமே பலருக்கும் பாடமுமாகும், சிலருக்கு படமுமாகும்.
அந்த வகையில், 2021-ஆம் ஆண்டில், வரலாற்றுச் சாதனையாக, நம்முடைய போராட்டத்தின் ஒரு பகுதியான தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தை வென்று கொடுத்துவிட்டோம். அதன் காரணமாகவே, நாம் அரசியல் தளத்தில் காயம்பட்டோம். “காயங்கள் ஆறிப் போகும், மாறியும் போகும்; ஆனால் காயம்பட்டு பெற்ற வெற்றி மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்”. நம்முடைய சாதனையை என்றென்றும் வரலாறு பேசும்.

புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழாத் துவக்க நிகழ்ச்சியை 15 தினங்களுக்கு முன்பு தென்காசியில், ‘உலக இந்துக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் எழுச்சி மாநாடாக’ சிறப்புற கொண்டாடினோம். இப்பொழுது நம்முடைய தளம் வயலின் வரப்புகளையும், பள்ளங்களையும், மேடுகளையும் தாண்டி, பரந்துபட்ட சமவெளிக்கு வந்திருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரத்தையும் தாண்டி நம்முடைய எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது; கடமையும் கூடிக் கொண்டே போகிறது.

பல்லாயிரம் ஆண்டு காலம் பாரம்பரியமிக்க இந்திய தேசத்தில், இந்தியன் – இந்து என்று தன்னை சொல்லிக் கொள்வதற்குக் கூட அன்று அந்நிய ஆக்கிரமிப்பு காலத்தில் அச்சப்படும் சூழலும், இன்று உள்ளூர் திரிபுவாதிகளாலும் பிரிவினைவாதிகளாலும் கூச்சப்படும் சூழலும், கோடானகோடி மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தன்னுடைய தாய் தேசத்தை சொல்லிக் கொள்வதற்கு யாராவது வெட்கப்படுவார்களா? தன்னுடைய தந்தையர் கடைபிடித்த வழிபாட்டு உரிமைகளை பெருமையாகச் சொல்வதற்கு யாராவது அச்சப்படுவார்களா? கூச்சப்படுவார்களா? ஆம்! இம்மண்ணில் அந்த அவலநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தாண்டில், அதை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

2021 டிசம்பர்-31 முடிவுற்று, 2022 ஜனவரி 1-ஆம் தேதியில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். நமக்கு முன்னே மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றன. குறிப்பாக, புதிய தமிழகம் கட்சியினர், தான் பிறந்த சமுதாயத்திற்காக மட்டுமல்ல, இந்த பரந்துபட்ட பாரத தேசத்தில், அனைத்து மக்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்கவும், அவர்களிடத்தில் உள்ள பேதைமைகளைப் போக்கி, ஒற்றுமையை உருவாக்கவும், அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய தலையாயக் கடமையும் நமக்கு இருக்கிறது.

2022-ஆம் ஆண்டை ஒரு சாதனை ஆண்டாக்கிட இப்பொழுதே நாம் சபதம் ஏற்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அள்ளித்தந்து ஆட்சிபீடத்திலே அமர்ந்திருக்கக் கூடியவர்களை அம்பலப்படுத்தி, அவர்களை அகற்ற வேண்டிய தலையாயப் பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது.

2024-ல் டெல்லி செங்கோட்டையிலும், 2026-ல் சென்னைக் கோட்டையிலும் கொடியேற்ற வேண்டும் என்ற இலட்சியம், ஒவ்வொரு புதிய தமிழகம் கட்சியின் தொண்டரிடத்திலேயும் மிளிர வேண்டும். பல களங்களைச் சந்தித்து தான் பெரும் போரில் வெற்றி பெற முடியும்.
பிப்ரவரியில் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்களில் கணிசமான வெற்றிகளைக் குவிப்பது; அனைத்து மாவட்ட மாநாடுகளையும் சிறப்புற நடத்துவது; புதிய தமிழகம் கட்சியை நகரங்கள், கிராமங்கள் என்று பாராது ஒவ்வொரு வீடுவீடாகக் கொண்டு போய் சேர்ப்பது; ஒவ்வொரு இல்லங்களிலும் நம்முடைய இலட்சியங்களை விதைப்பது ஆகிய உறுதிமொழிகளை, ஒவ்வொரு புதிய தமிழகம் கட்சியின் தொண்டரும், புத்தாண்டின் இந்த நிமிடம் முதல் கடைபிடித்திட வேண்டும்.

2022-ஆம் ஆண்டில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டுவது என்ற வேட்கையோடு, மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து பணியாற்றும் இலட்சியத்தை சபதமாக்கி, 2022-ஆம் ஆண்டை, புதிய தமிழகம் கட்சிக்கான ஆண்டாக மாற்றிட உள்ள மகிழ்வோடு உங்கள் பணிகளைத் துவக்க வாழ்த்துகிறேன்.

2022-ல், கரோனா உள்ளிட்ட அனைத்துவித நோய்களையும் வெற்றி கொள்ள சபதமேற்போம்!
இயற்கை அன்னைக்கு ஊறு விளையாமல் பாதுகாக்கவும், பிற உயிர்களிடத்தில் அன்புகாட்டவும் சபதமேற்போம்!!

பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் எண்ணங்களை நீக்கி, இந்து என்ற ஒற்றை அடையாளத்தில் பரிணமிக்க சபதமேற்போம்!

இந்து, கிறித்தவர், இஸ்லாமியர் மற்றும் எல்லாவிதமான மத பேதங்களை நீக்கி, இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்தால் சமூக நல்லிணக்கத்தை வென்றெடுக்க சபதமேற்போம்!!
இந்திய மக்களிடத்தில் இல்லாமையையும், கல்லாமையையும் போக்கி, உண்மையான சமத்துவ சமுதாயத்தைப் படைக்க சபதமேற்போம்!

2022-ஆம் ஆண்டை, புதிய தமிழகம் கட்சியின் சாதனை ஆண்டாக மாற்றிக் காட்ட சபதமேற்போம்!!

இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
1.1.2022.