திருமண மண்டபங்களில் ‘மது விருந்து’ அனுமதி! திராவிட மாடல் அரசின் ’ஆபத்தான’ அரசாணை!! ஊரெல்லாம் ’பார்’ ஆகிறதா? பாருக்குள்ளே ’ஊர்’ ஆகிறதா??

ஊருக்குள் ’பார்’ வைப்பதும், பாருக்குள் ’ஊரை’ வைப்பதும் ஆபத்தானவையே. எனவே, ’திருமண மண்டபங்களிலும் மது விருந்து அனுமதி’ அரசாணையை உடனடியாக ரத்து செய்க.

அறிக்கைகள்
s2 355 Views
  • ஊரெல்லாம் ’பார்’ ஆகிறதா பாருக்குள்ளே ’ஊர்’ ஆகிறதா
  • ஊரெல்லாம் ’பார்’ ஆகிறதா பாருக்குள்ளே ’ஊர்’ ஆகிறதா
Published: 24 Apr 2023

Loading

”மதுவுக்கு தமிழக ஆண்கள் அடிமைப்பட்டு போனதால் உடல்நலம் கெட்டு, ஒட்டுமொத்த தமிழகமுமே சீரழிந்து வருகிறது. போதைகளுக்கு அடிமையாகி உயிரிழப்புக்கு ஆளாகும் ஆண்களால் எண்ணற்ற பெண்கள் விதவை ஆகிறார்கள்” என்று 2021 வரையிலும் மு.க.ஸ்டாலினும், சகோதரி கனிமொழியும், குடும்பத்தாரும் ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வந்தார்கள். ”ஆட்சிக்கு வந்தவுடன் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எவ்விதமான அனுமதியும் பெறாமல் ஆயிரக்கணக்கான பார்கள் புற்றீசல் போல முளைப்பதும், அதிலிருந்து விற்பனையாகக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் சில தனி நபர்களின் பாக்கெட்டுகளுக்கும் செல்கிறது.

ஒரு பக்கம் 24 மணி நேர மது விற்பனையால் பணிக்குக் கூடச் செல்லாமல் ’பார்’களே கதி என்று ஒரு பெரிய கூட்டம் கிடக்கிறது. இன்னொரு பக்கம் வேலையை இருந்தாலும் வேலைக்குச் செல்லத் தயாராக இல்லை. இதனால் தமிழகப் பெண்மணிகள் கண்ணீர் சிந்துவதும் அவர்கள் தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு ஆளாகிக் குணப்படுத்தவே முடியாத எல்லைக்குச் சென்ற பின் பல பெண்கள் குழந்தை குட்டிகளுடன் நிர்க்கதி ஆகிறார்கள்.

எனவேதான் ‘மதுவிலக்கு அமலாக்க வேண்டும், முதல் கட்டமாக இந்த சட்ட விரோத பார்கள் அனைத்தையும் மூடிட வேண்டும்’ என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வந்து, வருகிற மே 10ஆம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தவும் ஆயத்தமாகி வருகிறோம். இந்நிலையில் இன்று காலை பத்திரிகைகளில் வந்த செய்தி இந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது வெறும் புரளியாக இருக்குமோ, தவறான செய்தியாக இருக்குமோ என்று தான் எண்ணினோம். ஆனால் அரசாணையை கையிலேயெடுத்து பார்த்த பிறகு தான் இவர்களின் கேவலமான மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது; அந்த செய்தி உண்மை என்று தெரிய வந்தது.

”பார்கள் அனைத்தையும் மூடிடுங்கள், அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைகளை மூடிடுங்கள்” என்று தமிழக மக்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் நாம் கோரிக்கை வைத்த இந்த வேலையில் தமிழக மக்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வகையில் இனி கடைகளுக்குப் பக்கத்தில் ஒரு பாரல்ல, இரு பார் அல்ல, ஊரெல்லாம் ’பார்’ ஆக்குகிறோம் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ’கோவில் இல்லாத ஊர் பாழ்’ என்றார்கள்; ’பள்ளிக்கூடம் இல்லாத ஊர்தான் பாழ்’ என்றார்கள். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் ’பார் இல்லாத ஊர் தான் பாழ்’ என்ற பொது தத்துவத்தை இங்கே உருவாக்கி, இனிமேல் திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க கூடிய மாநாடுகள், கருத்தரங்குகள், பிறந்தநாள், காதணி நிகழ்ச்சிகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் உள்ளிட்ட சுப காரியங்கள் மற்றும் உள்ளூர் கோவில் விசேஷங்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுகள் எதுவாகினும் அனைத்து விசேஷ நாட்களிலும் மது விருந்துகள் தினமுமோ, ஆண்டு முழுவதுமோ நடத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கி ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுவை ’விலக்குவதற்காக’ ஒரு அரசுத்துறை என உருவாக்கிவிட்டு, அதே மதுவை ’துலங்க வைக்க’ வைப்பதற்கான அரசுத்துறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலை ஆக்குவதற்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றிய கையோடு, இப்பொழுது ’ஊரெல்லாம் பார்கள், இனிமேல் பாருக்குள் தான் ஊர்கள் இருக்கும்’ என்பதற்கு இணங்க இந்த அரசாணை பிறப்பித்திருப்பதில் இந்த நாட்டை அந்நிய சக்திகளுக்கு தாரை வார்ப்பதற்கும், கலாச்சார ரீதியாக சுடுகாடாக்குவதற்கும் முடிவு செய்து விட்டதாகவே கருத முடிகிறது. பல இடங்களில் சட்ட ஒழுங்கு கெடுவதற்கு காரணமே குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் விளைவிக்கும் குழப்பங்களே, பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றன. ஊருக்கு சில மைல்கள் அப்பால் உள்ள பார்களில் குடித்துவிட்டு வந்தே இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தப்படுகின்றனவே, இனிமேல் எல்லா விசேஷ காலகட்டங்களிலும், விழாக்களிலும் அங்கேயே மது அருந்துவதற்கு உண்டான வாய்ப்பு உருவாகும் பட்சத்தில் அந்த விழாக்கள் என்ன மாதிரியாக நடந்திடும்? சண்டைகள் சச்சரவுகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அனைத்தும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்காதா? இதுவரையிலும் பல பேர் ஒளிவு மறைவாக குடித்து வந்ததையும் பகிரங்கப்படுத்துகின்ற பொழுது இனிமேல் ஒவ்வொரு விசேஷ நிகழ்ச்சிக்கான அழைப்புகளில் ’எல்லோரும் மதுவிருந்தும் உண்டு’ என்றும்; ஏ.சி ஹால் என்ற வார்த்தைகளுடன் “பார்’’ வசதியுடன் கூடிய ’திருமண மண்டபம்’ என்றும் பின்குறிப்பு போட வேண்டிய சூழல்களும் ஏற்படுமல்லவா?

துவக்கத்தில் இந்த விருந்துகளுக்காக மாவட்ட ஆட்சியரிடத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று அரசாணை இருந்தாலும் போகப் போக ஆளும் கட்சியின் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், ஆளுங்கட்சியின் பேச்சாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் என்று ஏரியா வாரியாக பிரித்து அனுமதி வழங்கக்கூடிய அதிகாரம் அல்லது ஏற்கனவே நடைபெற்று வரக்கூடிய சட்ட விரோத பார்களை போல எல்லா பகுதிகளிலும் சட்ட விரோதமாக வசூலித்துக் கொண்டு ஊரெங்கும் பார்கள் நடத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்தான போக்குகளும், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கும், சமூக சீரழிவுகளும், சாதி, மதச் சண்டைகளும் பெருகவும்; தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக மயக்கத்திலே ஆழ்த்தவும், அந்நிய நாட்டினர் மெல்ல மெல்ல தமிழகத்தில் ஊடுருவி ஒரு கலாச்சார சீரழிவை உருவாக்கவும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டை தொழில்களைத் துவக்குவதற்கு மட்டும் திறந்து விடவில்லை; எல்லாவிதமான களிப்பாட்டங்களுக்கும் தமிழ்நாட்டின் கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன என்பதை பன்னாட்டு கம்பெனிகளுக்கு எடுத்துச் சொல்லவும், தமிழ்நாட்டை நிரந்தரமாக ஒரு சுரண்டல் தளமாக ஆக்கவும் நடைபெறுகின்ற ஒரு சர்வதேச சதியாகவே கருதப்பட வேண்டி உள்ளது.

ஐந்து வருடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இன்னும் மூன்றாண்டு காலம் ஆட்சியில் இருக்கட்டும் என்று கூட நாம் நினைத்தோம். ஆனால், எஞ்சி இருக்கக்கூடிய மூன்றாண்டுகள் இந்த ஆட்சி இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டு மக்களை அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார தளத்தில் கடை நிலைமைக்கு கொண்டு போய் சேர்த்து விடுவார்கள் என்பது மட்டும் வெட்ட வெளிச்சம் ஆகிறது.

பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம் கொண்ட தமிழ் சமுதாயம் கண்முன்னே சீரழிந்து போவதை தமிழ் மீது பற்று கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தினுடைய படித்த இளைஞர்கள், பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் உடைய இந்த அரசாணை எதிர்த்து குரல் கொடுக்கவும், வீதிக்கு வந்தும் போராடவும் வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தினுடைய அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி என்ற அந்த கணக்குகளை மட்டும் பார்க்காமல், 12 மணி நேர வேலைக்கு எப்படி ஒன்றுபட்டு குரல் கொடுத்தீர்களோ, அதே போல தமிழக அரசின் நேற்றைய மது விருந்து அரசாணையும் எதிர்த்துப் போராட ஒன்று திரள வேண்டும் என்றும்; சென்னை பேரணியிலும் தாங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஊருக்குள் ’பார்’ வைப்பதும், பாருக்குள் ’ஊரை’ வைப்பதும் ஆபத்தானவையே. எனவே, ’திருமண மண்டபங்களிலும் மது விருந்து அனுமதி’ அரசாணையை உடனடியாக ரத்து செய்க.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
24.04.2023.