தமிழக மக்களின் ரூ 1200 கோடி வரிப்பணத்தை வீணடிக்கலாமா, விரயமாக்கலாமா? விஜய் அவர்களே!

அறிக்கைகள்
s2 1 Views
Is it right to waste or squander ₹1,200 crore of the Tamil Nadu people's tax money? Mr. Vijay!
Published: 03 Sep 2026

Loading

(சென்னை) தலைநகரையே (திருச்சிக்கு) மாற்ற வேண்டிய கோரிக்கை வலுவாக உள்ள நிலையில்,
புதிய தலைமைச் செயலக மாற்றம் உருப்பெறுமா?
தமிழக மக்களின் ரூ 1200 கோடி வரிப்பணத்தை வீணடிக்கலாமா, விரயமாக்கலாமா? விஜய் அவர்களே!
………………………………………

தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை மாற்றியமைக்க முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார். புதிய தலைமைச் செயலகம், சட்டமன்ற மாற்றம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக பேசப்பட்டு அலுத்துப் புளித்துப் போன விஷயமாகும்.
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்றம், 2011-ல் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்பொழுது வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது; நாமக்கல் கவிஞர் மாளிகையில்தான் பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படுகின்றன.
அதற்கு முன்பு, ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியில் சென்னை கடற்கரை ராணி மேரி கல்லூரிப் பகுதியை சட்டமன்றமாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது. எனவே, தமிழகத்தில் எவர் ஆட்சிக்கு வந்து, புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டாலும் அங்கு சட்டமன்றம் செயல்பட முடியாத சூழ்நிலைகளே உருவாகி இருக்கின்றன; உருவாகும்.
இப்பொழுது 1,200 கோடி ரூபாயில் புதிய சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் கட்டப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆலோசனை வழங்கியவர் பழைய பண்டிட்டா? அல்லது புதிய பண்டிட்டா? என்பதற்கான விளக்கம் ஏதும் இல்லை. மேலும், சட்டமன்றம் எங்கு கட்டப்படும், எப்போது கட்டப்படும் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. நிலம் தேர்வு செய்யப்படும் பொழுது, அதற்கு என்னென்ன இடர்பாடுகள் வரும் என்பதெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது.
எல்லா இடர்பாடுகளையும் தாண்டி விஜய் தேர்வு செய்யக்கூடிய இடத்தில் சட்டமன்றமே கட்டப்பட்டாலும், பின்னால் ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் அந்த புதிய சட்டமன்றத்தைப் பயன்படுத்துவார்களா என்பதற்கான உத்தரவாதமும் இல்லை; இவர்கள் கட்டிய சட்டமன்றத்தை தான் பயன்படுத்த வேண்டும் எனச் சட்டம் போட்டும் தடுத்துவிட முடியாது. கடந்த காலங்களைப் போல இந்த முயற்சியும் வீணாகி, 1,200 கோடி விரயமாகக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.
”தமிழ்நாட்டின் தலைநகரையே சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முடிவெடுத்தார். ஆனால் அது கைகூடாமல் போய்விட்டது. தமிழ்நாட்டின் தலைநகரம் ’மையப்பகுதியில்’ இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. எனவே, தலைநகரை மாற்றுவதா? தலைமைச் செயலகத்தை மாற்றுவதா? என்பது குறித்து அனைத்துத் தரப்பு மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை உணர்வும், ஒருங்கிணைப்பும் உருவாக வேண்டும்; அது எப்பொழுது உருவாகும் என்று தெரியவில்லை.
ஏற்கனவே கஜானா காலி, கடந்த மூன்று மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் குறைந்து கொண்டே வருவது; எண்ணற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சூழல், தமிழ்நாடெங்கும் இன்னும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்குச் சொந்த வீடு கட்டித்தர வேண்டிய அவசியம் எனப் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ள அரசு, இப்பொழுது உடனடி தேவையற்ற தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது அவசியம்தானா?
தலைநகரையே மாற்ற வேண்டிய சூழலில், தடுமாற்றங்களுடனான தலைமைச் செயலக மாற்றம் தமிழக மக்களின் 1,200 கோடி ரூபாய் வரிப்பணத்தை வீணடிப்பதும், விரயமாக்குவதுமானதாகவே அமையும்!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
03.09.2026