புட்டினுக்கு ’ICC’ கைது வாரண்டு.! நடைமுறைப்படுத்த முடியுமா? செல்லுபடியாகுமா?
பிடிவாரண்டை நடைமுறைப்படுத்த இயலாது என்பதே எதார்த்தம்!
பிடிவாரண்டு உத்தரவின் மூலம் ஐ.சி.சியும், ஐ.நாவும் ’காகிதப் புலிகள்’ என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.
470 Views
![]()
புட்டினுக்கு ’ICC’ கைது வாரண்டு.!
நடைமுறைப்படுத்த முடியுமா? செல்லுபடியாகுமா?
நெதர்லாந்து நாட்டில் The Hague எனும் இடத்தில் அமைந்துள்ள International Criminal Court (ICC) எனும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களை, கைது செய்து ஆஜர் படுத்த உத்தரவிட்டுள்ளது. சர்வதேச அளவில் நேற்றும் இன்றும் பரபரப்பான தலைப்புச் செய்தி இதுவே ஆகும். புட்டினுக்கு எதிரான பிடிவாரண்டு பிறப்பித்ததன் மூலம் இதுபோன்ற ஒரு நீதிமன்றம் ஒன்று உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவு செல்லத்தக்கதா?இல்லையா? இது ரஷ்ய நாட்டை கட்டுப்படுத்துமா? இல்லையா? என்பதே மிக முக்கியமான கேள்வி.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகத்தில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட ஒரு அமைப்பு வேண்டும் என்ற கருத்து உருவாகி அது 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையாக உருவெடுத்தது. ஐ.நாவுக்கு பல அமைப்புகள் உண்டு. அதனுடைய முக்கியமான அமைப்புகள், அலுவலகங்கள் அனைத்தும் அமெரிக்காவில் மட்டுமே உண்டு; ஜெனிவாவில் ஐநாவின் இன்னொரு விரல் மட்டுமே உண்டு; கரம் அங்கு இல்லை.
துவக்கத்தில் உட்ரோ வில்சன், உதாண்ட் போன்றவர்கள் அதனுடைய தலைவர்களாக இருந்த காலகட்டங்களில் மட்டுமே அதனுடைய செயல்பாடுகள் ஓரளவிற்கு சுதந்திரமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் அது காலாவதியாகிப்போன அமைப்பாக மாறிவிட்டது. அமெரிக்காவின் படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்புகளை ஓடோடி அங்கீகரிக்கும் அமைப்பாகவே ஐ.நா கரைந்து போய்விட்டது. உலகத்தில் அதிக ஆண்டுகள் நீடித்து நடைபெற்ற வடகொரியா – தென் கொரியப் போர், வட வியட்நாம் – தென் வியட்நாம் போர் போன்றவற்றைக் கூட குறிப்பிட்ட காலத்திற்குள் ஐ.நாவால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
1980களில் இருந்து ஏறக்குறைய 50 ஆண்டு காலம் இலங்கையில் இனப் போராட்டங்கள் நடைபெற்று அங்கு தமிழ் மக்கள் பேரழிவுக்கு ஆளானார்கள். போர் விதிமுறைகளை மீறிக் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன; முள்ளி வாய்க்காலில் ஒரே நேரத்தில் முப்பதாயிரம் பேர் கொன்று புதைக்கப்பட்டார்கள். ஐ.நா உரிய நேரத்தில் தலையிடவுமில்லை; இனப்படுகொலைகளைத் தடுக்கவும் இல்லை. 1962 இல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லுமும்பா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதோடு இரண்டு ஆண்டுகள் கழித்து மிகக் கர்ண கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடான சிலியில் அலண்டோ ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பின் அவரும் கொல்லப்பட்டார். கம்போடியாவில் போல்பாட்டிற்கும் அதே கதிதான். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது; ஈராக் அழிக்கப்பட்டது; சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. சிரியா, எகிப்து, லிபியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளில் கலவரங்கள் மூட்டி விடப்பட்டன. பின் லேடனை பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் 20 வருடம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஜப்பானை வீழ்த்துவதற்காக ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் மீது வெடிகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை அழித்தொழிக்கப்பட்டார்கள்; அந்த அணு வீச்சுக்கு இறையானவர்கள் இன்றும் கூட பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இவற்றைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ரஷ்யாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மீறி, நோட்டோ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ராணுவ கூட்டமைப்பில் ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்த்து, ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவின் எல்லை வரையிலும் நேட்டோ எல்லையை விஸ்தரிக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தியும் நேட்டோவிற்கு தலைமை தாங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்குச் செவி சாய்க்காததால் உக்ரைன் மீதான போரை ரஷ்ய அதிபர் புட்டின் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக ரஷ்யா தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்கிறது. ஓராண்டு போர் என்ற காரணத்தினாலும், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கிற போர் என்பதாலும் அங்கு நடக்கும் முழு சம்பவங்களையும் நம் நாட்டில் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஓராண்டு போரில் உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை உக்ரைன் இழந்திருக்கிறது. இரு தரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு இருக்கின்றன; பொருட்சேதங்களுக்கும் அளவே இல்லை. ரஷ்யா தனித்து நின்று இந்த போரை நடத்துகிறது. ஈரான் நாட்டிலிருந்து ட்ரோன்கள் கிடைப்பதாக மட்டும் சொல்லப்படுகிறது. ஆனால், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகள் கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதோடு, நவீன ஆயுதங்களையும் வழங்குகிறார்கள். ’பாக்முத்’ என்ற நகரத்தை மட்டும் கைப்பற்றுவதற்காக கடந்த மூன்று மாதமாக கர்ண கொடூரமான போர் நடந்து வருகிறது. தினமும் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழக்கிறார்கள்.
உலக நாடுகள் இடையே போர் மூண்டால் ஐ.நாவின் படைகளை அனுப்பி அந்த நாட்டில் சண்டையை நிறுத்தி சமாதானத்தை நிலை நாட்ட வேண்டிய ஐ.நா இருதரப்பினரையும் முதலில் சண்டையை நிறுத்த சொல்வதற்கு பதிலாக உக்ரைன் நாட்டிற்கான நேட்டோ நாடுகளின் ஆதரவை ஐ.நா தலைவரே நேரடியாக ஆதரிக்கிறார். ஐ.நா எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டதா அல்லது காற்றோடு கலந்து போய் விட்டதா என்ற கேள்வியே இப்பொழுது எழுகிறது. அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் ஒரு அமைப்பாகவே அல்லது அமெரிக்காவின் இன்னொரு கரமாகவே ஐ.நா விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. இப்படிப்பட்ட ஐநா அமைப்பால் உருவாக்கப்பட்டதே தற்போது ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து இருக்கக்கூடிய சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் (ICC) ஆகும்.
1948 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ஐ.நாவின் 52 வது கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட முடிவின்படி The International Criminal Court (ICC) எனும் நீதிமன்றம் அமைக்கப்பட்டு அதனுடைய தலைமை இடமாக நெதர்லாந்து நாட்டில் உள்ள The Hague என்ற இடத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த நீதிமன்றத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற முக்கிய நாடுகள் அதில் அங்கம் பெறவும் இல்லை; உறுப்பினராகவும் இல்லை. இந்தியாவும் இதுவரை உறுப்பினராக இல்லை. அந்த ஐசிசியில் உலகின் 123 நாடுகள் மட்டுமே உறுப்பினராக உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட ஏழை நாடுகளே அங்கம் வகிக்கிறார்கள். ஒரு நாடு ஐசிசியில் அங்கம் பெற்று விட்டால் அந்த நாடு ஏதாவது நாட்டின் மீது படையெடுத்து, அத்துமீறல்கள் நடைபெறுவதாக இருந்தால் அந்த நாட்டினுடைய போர் வீரர்களோ, அதிகாரிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ ICC நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு ஆட்பட வேண்டியவர்களாகிவிடுகிறார்கள். எனவே தான் வல்லமை மிக்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ளவே இல்லை. அதாவது ஐசிசியில் உறுப்பினர் அல்லாத நாடுகள் ஐசிசியின் உத்தரவிற்குக் கீழ்ப்படியவோ, கட்டுப்படவோ வேண்டியதில்லை அல்லது முடியாது என்பதே பொருள்.
ஒருவேளை அமெரிக்கா ஐசிசியில் உறுப்பினராக இருந்திருக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற கொரியா, வியட்நாம், கம்போடியா, சிலி, காங்கோ, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நடத்திய அனைத்து போர்களுக்கும் அமெரிக்கா குற்றவாளியாக்கப்பட்டிருக்கும். எனவே இன்று வரையிலும் உறுப்பினர் அல்லாத அமெரிக்காவை ஐசிசியால் கட்டுப்படுத்த முடியாத பொழுது ரஷ்ய நாட்டையும், அதன் அதிபர் புட்டினை மட்டும் எப்படி ஐசிசி உத்தரவு கட்டுப்படுத்த முடியும்? அல்லது அந்த உத்தரவு செல்லுபடி ஆகும்?
அதனால் தான் புட்டினுக்கு எதிரான பிடிவாரண்டு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன் ”வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று சொல்லுவதற்கு ஏற்ப ஒரு நழுவலான பதிலைச் சொல்லித் தப்பித்திருக்கிறார். இந்த கைது வாரண்டு மூலம் புட்டினின் வெளிநாட்டுப் பயணங்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியுமா? எனும் கேள்வி எழும். உக்ரைன் போருக்குப் பிறகு புட்டின் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுடனும் நல்லுறவு இல்லை; அமெரிக்காவுடனும் நல்லுறவோடு இல்லை. எனவே அவர் அங்கு பயணம் செய்ய வாய்ப்பும் இல்லை. ஒருவேளை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டாலும் நட்பு நாடுகளுக்கு – வரவேற்கக் கூடிய நாடுகளுக்குத்தான் பயணிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறதே தவிர, பகை நாடுகளுக்கு புட்டின் பயணம் செல்லப் போவதில்லை. ஐசிசி நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, சீனாவின் அதிபர் ஷீ ஜின் பிங்க் ரஷ்யா செல்லுகிறார்; அதனுடைய பொருள் The Hague நீதிமன்றத்தின் உத்தரவு என்பது பொருட்படுத்தக்கூடிய உத்தரவு அல்ல என்பதே ஆகும்.
போர் என்றால் விதிமுறைகள் இருக்கும் என்பது எதார்த்தம். ஆனால் புட்டின் மீதும், ரஷ்ய நாட்டினுடைய குழந்தைகள் நல மேம்பாட்டுத் தலைவர் மீதும் வைத்திருக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்குக் கடத்தப்பட்டு இருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டு குறித்தும், குழந்தைகளின் நிலைமைகள் குறித்தும் சர்வதேச சமுதாயத்திற்கு ரஷ்யா முறையான பதிலைப் பதிவு செய்ய வேண்டும். அந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து ரஷ்யா விளக்கம் அளித்திட வேண்டும்.
2009-2010 ஆம் ஆண்டுகளில் ”விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுகிறோம்” என்ற பெயரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் மக்களுக்கு நீதி கேட்டு ஈழத்தமிழ் மக்கள் சர்வதேச அமைப்புகளை நாடினார்கள். 2013 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஜெனிவாவில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் நாமும் கலந்து கொண்டு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க ஆலோசனை வழங்கினோம். அதனடிப்படையில் சில நகர்வுகளும் ஏற்பட்டன. ஐ.நாவும், இதே ஐசிசி நீதிமன்றமும் இன்று போல அன்று போல் உயிரோடு இருந்தன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ராஜபக்சேயைக் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உலகெங்கும் கண்டன குரல் ஒலித்தது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் தலையிடவில்லை. அன்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் அதற்கு கண் அசைக்கவில்லை போலும்.! இப்பொழுது உக்ரைனில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருக்கிறதோ? இல்லையோ? சர்வதேச அளவில் புட்டினை அசிங்கப்படுத்த வேண்டும்; அம்பலப்படுத்த வேண்டும்; கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவை தனிமைப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சர்வதேச நீதிமன்றமும் நடுநிலை தவறிச் செயல்பட்டதாகவே தோன்றுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, புட்டினை கைது செய்ய ஐசிசி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டு செல்லுமா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழும். அது செல்லுபடி ஆகாது என்பதே உண்மை!
பிடிவாரண்டை நடைமுறைப்படுத்த இயலாது என்பதே எதார்த்தம்!
பிடிவாரண்டு உத்தரவின் மூலம் ஐ.சி.சியும், ஐ.நாவும் ’காகிதப் புலிகள்’ என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.03.2023






