மலையிலும் மண்ணிலும் மனதிலும் ‘தீ’ தவுலெடுத்து தாளம் அடித்தால் அணையாது.!

அறிக்கைகள்
s2 377 Views
  • Dr Krishnasamy 4

    எழுத்தால் எகத்தாளம் பேசி ’படம்’ எடுத்தாலும் பட்டக்காயமும், வெட்டுக்காயமும் ஆறாது!

  • Dr Krishnasamy 4
Published: 11 Aug 2023

Loading

மலையிலும் மண்ணிலும் மனதிலும் ‘தீ’
தவுலெடுத்து தாளம் அடித்தால் அணையாது.!

எழுத்தால் எகத்தாளம் பேசி ’படம்’ எடுத்தாலும் பட்டக்காயமும், வெட்டுக்காயமும் ஆறாது!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சார்ந்த வள்ளியூர் கண்காடியா பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரையும், அவரது சகோதரி சந்திர செல்வியும் சக பள்ளி, சக வகுப்பு மாணவர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகிப் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அந்நிகழ்வை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சின்னதுரை பட்டியல் பிரிவில் உள்ள சாம்பவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். வெட்டியவர்கள் நாங்குநேரி மறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இது முழுக்க சாதி ரீதியான வன்மத்தோடு நடந்த தாக்குதல் ஆகும்.

”பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி, மத, இன ரீதியான எவ்வித அடையாளங்களையும் மாணவர்கள் சுமந்து வரக் கூடாது; அதற்குண்டான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று 2014 ஆம் ஆண்டு முதல் நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலேயே பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தி இருக்கிறோம். எனினும் மாநில அரசு எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்க வில்லை.

நாங்குநேரியில் அரசுப் பள்ளி இருந்தும் 15 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கக்கூடிய வள்ளியூருக்குத் தான் பெரும்பாலான மாணவர்கள் செல்கிறார்கள். நாங்குநேரியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அங்கே மாணவர்கள் படிக்க முடியாத அளவிற்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றனவா? சாதிய அட்டூழியங்கள் தலை விரித்தாடுகின்றனவா??

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மணிப்பூருக்காக தமிழகத்திலிருந்து சென்று நாடாளுமன்றத்தில் கண்ணீர் சிந்திய ஆட்சியாளர்களுக்கு எந்தவித தவறும் செய்யாத பள்ளி மாணவர்கள் சமூகக் கொடுமைக்கு ஆளானது குறித்து அக்கறை இல்லாமல் போனது ஏன்? வெறுமனே நான்கு பேரைக் கைது செய்வதால் மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகுமா?

பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களிலேயே சாதிய நஞ்சுகள் எவ்வாறு விதைக்கப்படுகின்றன? என்பதற்கான காரிய காரணங்களை உடனடியாக கண்டறிந்து நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டாமா? தமிழகத்தில் இது ஏதோ பகுதியில் நிலவுவதாக எண்ணிவிடலாகாது. இளம் பிராயத்திலேயே தன் சாதிய அடையாளங்களை தூக்கிப்பிடிக்கக் கூடிய வகையில் கயிறு கட்டுவது, நெற்றிப் பொட்டு வைப்பது போன்ற அனைத்து விதமான அடையாளங்களுக்கும் பள்ளிகளில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லவா?

’தி – ஸ்டாக்கிஸ்ட்’ ஆட்சியாளர்கள் வாய் கிழியச் சமூகநீதி பேச முற்படுவார்கள்; சிவப்பு பூதங்கள் கருப்பு பேய்களையும், அடிமைகளையும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள்; கரு கிடைத்துவிட்டது; அதைக் கதையாக்கிக் காசாக்க வேண்டியது தான் பாக்கி. இனாமாக வந்த காரை வெயிலிலே நிறுத்த முடியாது; அதைப் பாதுகாக்க வீடு வேண்டும்; பாடலில், கதையில், நடிப்பில் ஒப்பாரி பாடலாம். மனதுக்குள்ளேயும் மண்ணுக்குள்ளேயும் வெடியாய் வெடிக்கும் தீயை அணைப்பதற்குப் பதில் மலையெல்லாம் தீ வைப்பார்கள்; அணைக்க அவர்களும், வேறு எவர்களும் முன்வர மாட்டார்கள்; இதையும் – வேறு எதையும் அணைக்க நாம் தான் செல்ல வேண்டும்; ஆம், புதிய தமிழகம் கட்சியினர் தான் செல்ல வேண்டும்.

இன்று பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னதுரையைத் திருநெல்வேலி மருத்துவமனையில் நேரில் சந்தித்து, புதிய தமிழகம் கட்சியினர் ஆறுதல் கூறினர்; பாதிக்கப்பட்ட சின்னதுரை – சந்திரா செல்வி ஆகியோருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்கும் வரை புதிய தமிழகம் கட்சி துணை நிற்கும்.!

மலையிலும் மண்ணிலும் மனதிலும் தீ.!
தவுலெடுத்து தாளம் அடித்தால் அணையாது.!
எழுத்தால் எகத்தாளம் பேசி ’படம்’ எடுத்தாலும் பட்டக்காயமும், வெட்டுக்காயமும் ஆறாது!
நல்ல பாடம் ’படி’ ராசா.! நல்லவரிடம் நல்ல பாடம் ’படி’ ராசா.!!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.08.2023