புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.!
’நெஞ்சுறுதியோடு துணிந்து நின்றால் புதிய தமிழகம் கட்சிக்காரன் ஆயிரமாயிரம் யானைகளின் பலத்திற்கு சமமானவன்’
’திராவிட ஸ்டாக்கிஸ்டு’களின் அவதூறு பிரச்சாரங்களைத் தவிடு பொடியாக்கிடுங்கள்!
வெற்றிக்கனிகளை பறித்திடுங்கள்!
369 Views
![]()
புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு மாநில, மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய மாவட்ட குழுக்கள் நேற்று அறிவிக்கப்பட்டு விட்டன. வரும் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு நாள் ஆகும். எனவே, இன்று (01.02.2022) மற்றும் நாளைக்குள்ளாக (02.02.2022) நம்முடைய வேட்பாளர் தேர்வுகளைப் போர்க்கால அடிப்படையில் தேர்வு செய்து, நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கால அவகாசம் அதிகமாக இல்லாததால் மாவட்ட குழுக்களே வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்து, பரிந்துரை செய்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். கடந்த 30 வருடத்தில் எவ்வளவோ தேர்தல்களைச் சந்தித்து வந்திருக்கிறோம். இது ஒன்றும் நமக்கு புதிதானது அல்ல. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் காசு கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட கொள்ளை கூட்டங்கள் உள்ளாட்சித் தேர்தலிலும் அதே பணியை மேற்கொள்ள முயற்சி செய்வார்கள். 2019 மற்றும் 2021 தேர்தல்களின் போது செய்த அவதூறு பிரச்சாரங்களை இப்பொழுதும் அப்படியே மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் புதிய தமிழகம் செல்வாக்கு உள்ள பகுதிகளில் நமது வாக்குகளை அபகரிக்கும் பொருட்டு அவநம்பிக்கையை விதைக்கக் கூடிய வகையில் அவதூறு புதிய புதிய பிரசாரங்களை செய்ய முயற்சி செய்வார்கள். அவர்களின் அவதூறு பிரச்சாரங்களைத் தவிடு பொடியாக்குங்கள்.!
சட்டமன்ற தேர்தலின் போது வாக்குகளை தனித்தனியாக விலைக்கு வாங்கிய கழக களவாணி கூட்டம் இப்போது ஊரோடு விலை பேச முயற்சி செய்வார்கள். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ’திராவிட ஸ்டாக்கிஸ்டுகள்’ செய்த பிரச்சாரங்கள், பித்தலாட்டங்கள் இப்போது அனைத்தும் அம்பலப்பட்டு விட்டன. அந்த மோசடி ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்கள்’ எந்த பொய்யை வேண்டுமென்றாலும் சொல்லி ஓட்டுகளை அபகரிக்க வருவார்கள். ஒருமுறை ஏமாறலாம், இருமுறை ஏமாறலாம். ஆனால், ஏமாறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுவிட்டால் இந்த சமுதாயத்திற்கு விடிவு காலமே இல்லாமல் போய்விடும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு நடந்திட வேண்டும்; மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
தேர்தலும் யுத்தமும் வேறு வேறல்ல. கூத்தாடி கூட்டத்திற்கும், கொள்ளை கூட்டத்திற்கும் இரையாகி விடாமல் நெஞ்சுறுதியோடு துணிந்து நின்றால் புதிய தமிழகம் கட்சிக்காரன் ஆயிரமாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானவன். அசாதாரணமான போர் வீரர்களான புதிய தமிழகம் கட்சியினரை எதிர்த்து புதிய தமிழகத்தின் வாக்கு வங்கி கோட்டைகளை யாராலும் தகர்க்க முடியாது.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது கட்சியாகவும், சமுதாயமாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் உள்ள உறுதியோடும், நேர்மையோடும் எந்த சூழ்நிலையிலும் எவருக்கும் சிறிதும் விலை போகாமல் தேர்தல் நேரத்தில் உட்பகைகளை முற்றாக அகற்றி விட்டு, நம்மை முற்றாக அழித்து ஒழித்திட எண்ணுகின்ற ’திராவிட ஸ்டாக்கிஸ்ட்’ கயவர் கூட்டத்தைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்ய புலியெனப் புறப்படுங்கள்! வெற்றிக்கனிகளைப் பறித்திடுங்கள்.!!
தேர்தல் களத்திலே யார் நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்று எண்ணக்கூடாது; அவர் சிவப்பு, பச்சைக் கொடி தாங்கிய புதிய தமிழகம் கட்சியின் தொண்டர் என்பதை மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும். கட்சியின் வெற்றியே சமூகத்தின் வெற்றி, நமது வெற்றி. அடுத்த பதினைந்து தினங்களுக்கும் மாநிலச் செயலாளர் சொல்லட்டும், மாவட்டச் செயலாளர் சொல்லட்டும் என்று யாருடைய உத்தரவையும் எதிர்பார்த்து இருக்காமல் உள்ள சுத்தியோடு ஒவ்வொரு புதிய தமிழகம் கட்சியின் தொண்டரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியை அறுவடை செய்யக் களத்திற்கு இன்றே புறப்படுங்கள்.
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! என்ற நல்ல செய்தியை மட்டுமே உங்களிடம் இருந்து கேட்க எதிர்பார்த்து இருக்கிறேன்.
நன்றி வணக்கம்..!
– டாக்டர் கிருஷ்ணசாமி. எம்.டி
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.02.2022






