சங்கரன்கோவில் வேன் டிரைவர் முருகன் படுகொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நாளை ( 12.03.2024) புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்.!

அறிக்கைகள்
s2 483 Views
  • Dr Krishnasamy Md
  • Dr Krishnasamy Md
Published: 11 Mar 2024

Loading

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதுரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது புதல்வர் 37 வயது நிரம்பிய முருகன் வாடகை வாகன ஓட்டுநரும், உரிமையாளரும் ஆவார். அவர் கடந்த 8 ஆம் தேதி மாலை 7 மணி அளவில் சங்கரன்கோவில் நகரில் அவர் ஓட்டி வந்த வேனுக்குள்ளயே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மகா சிவராத்திரி விழாவுக்காக சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனி அச்சம் பட்டியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு ஆட்டோ மீது மோதியதாகவும், ஆனால் ஆட்டோவிற்கு எவ்விதமான சேதமும் இல்லாத நிலையிலும் அங்கு நின்று கொண்டிருந்த மூன்று காவலர்கள் முருகன் ஒட்டி வந்த வாகனத்துக்குள் நுழைந்து அவரது கழுத்துப் பகுதியில் காலால் அடித்தும் உதைத்தும் மிதித்ததில் அவர் வாகனத்திற்கு உள்ளேயே இறந்து போய் உள்ளார்.

கடந்த 8 ஆம் தேதி மாலை 07.00 மணியிலிருந்து 9 ஆம் தேதி 04.30 மணி வரையிலும் முருகனை அடித்துக் கொன்ற மூன்று காவலர்கள் மீது கொலைக் குற்றம் பதிவு செய்யவும்; கைது செய்யப்படவும் வேண்டுமென வலியுறுத்தி குடும்பத்தாரும், உறவினர்களும், கிராமத்தாரும் போராடி வருகிறார்கள். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் முருகனுடைய உடல் திருநெல்வேலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. எனினும், இன்றுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவே, முருகனின் உடலைப் பெற்றுக் கொள்ளாமல், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை நேரங்களில் கூடக் கூடிய சங்கரன்கோவிலில் சிவராத்திரி அன்று, அங்கிருக்கக்கூடிய வியாபாரிகள், பொதுமக்கள் கண்ணெதிரே அந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. முருகனை அடித்துக் கொன்ற சம்பவத்தின் காட்சிகளும் பல தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன. ஒரு வேனை சொந்தமாக வைத்து, அதை ஓட்டி பிழைப்பு நடத்திக் கொண்டு வந்த முருகனின் மரணத்தால் அக்குடும்பம் இப்பொழுது நிர்க்கதியாக நிற்கிறது.

முருகன் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் படுகொலையும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மூன்று தினங்கள் ஆகியும் இன்னும் கூட அந்தக் கொடிய குற்றத்தைப் புரிந்த மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. இது போன்ற கொடிய குற்றம் செய்யக்கூடியவர்கள் காவல்துறையில் பணியாற்றினாலும் கூட, அவர்கள் நடவடிக்கைகளுக்கு ஆட்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் காவல்துறையோ, அரசின் நிர்வாகமோ அவர்களைப் பாதுகாக்கக் கூடாது. அம்மக்கள் ஏழை, எளிய மக்கள்; அரசியல், அதிகார பின்புலமோ; பொருளாதார பின்புலமோ அற்றவர்கள் என்பதற்காக, நாட்களைக் கடத்தி ஏமாற்றி விடலாம் என்று தப்புக் கணக்குப் போடக்கூடாது.

இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலைக் கண்டித்தும், முருகனை அடித்துக் கொன்ற காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவரது குடும்பத்தாருக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக முதற்கட்டமாக சங்கரன்கோவிலில் நாளை 12-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:
முருகன் படுகொலை சம்பவத்தில் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதப்பட்டுள்ளது.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.03.2024.