2025 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
ஆண்டு மாறினால் போதாது!
மாறிய புத்தாண்டு முழுவதும் நமது செயலில் மாற்றம் ஏற்பட வேண்டும்.!

உலகெங்கும் உள்ள மக்கள் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடு வரவேற்று ஆரவாரமாகக் கொண்டாடுகிறார்கள். 2024 நிறைவுற்று, 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய ஆண்டுகளில் நிலவிய துன்பங்கள், துயரங்கள் நீங்கி ஒவ்வொருவரது வாழ்விலும் இன்பம் பொங்க வேண்டும் என்ற உணர்வோடு 2025 ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டுப் பிறப்பை வரவேற்கிறோம்.
இயற்கையின் போக்கில் அது போன்று ஒன்றும் பிறப்பதில்லை. பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி நட்சத்திரங்களில் சூரியனைச் சுற்றியுள்ள ஒன்பது கோள்களில் உயிர்கள் வாழும் கோளாக பூமி உள்ளது. பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோமீட்டர் வேகத்திலும்; சூரியனை வினாடிக்கு 30 கிமீ வேகத்திலும் அதாவது மணிக்கு 1,07,000 கிமீ வேகத்திலும் சுற்றி வருகிறது.
சூரியனும் பால்வெளியில் நொடிக்கு 250 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இவை அனைத்தும் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவரும் 365 1/4 நாட்களையே ஒரு வருடம் என்கிறோம். ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்று துவங்கும் அந்த வினாடியையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.!
சூரிய குடும்பத்தில் உள்ள நமது பூமி புதிய சுற்றில் நுழைகிறது. இந்திய அரிய நேரத்தில் மட்டுமல்ல; ஆண்டு முழுவதும் நம்முடைய எண்ணங்களில் செயல்களில் ஏதாவது புதிய மாற்றம் ஏற்பட்டாலொழிய கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறுமனே கடந்து போய் விடும்.!
எனவே, 2024 முடிவுற்று 2025 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகும் நாம் புதிய புதிய எண்ண ஓட்டங்களோடு புத்தாண்டை வரவேற்க வேண்டும். பழையன தானாக கடந்து விடாது. நம்மிடம் உள்ளூர மாற்றம் ஏற்படாமல் வெளி உலகில் வேறு எந்த மாற்றத்தையும் காண இயலாது.
2025 புத்தாண்டில் இருள் நீங்கி நமது சிந்தனையில் செயல்பாட்டில் இலட்சியத்தில் கொள்கையில் ஆண்டு முழுவதும் புதுமை இருந்திட வேண்டும்! 2025 ஆம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்; ஆனால், சாதிக்க முடியாததாக இருக்காது.
இந்த தேசத்தில் வாழும் நமக்கான இந்த மண்ணின் மீதான உரிமையை நிலைநாட்டவும்; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட மனித உரிமைகளையும் வாழ்வுரிமைகளையும் மீட்டெடுக்கவும் ’ஆட்சி – அதிகாரத்தில் அமர வேண்டும்’ என்ற லட்சியத்தை நிறைவேற்ற நாம் சபதமேற்பதே புத்தாண்டு கொண்டாட்டத்தின் அர்த்தமாகும்.
ஓராண்டு என்பது மிகக் குறுகியதும் அல்ல; நீண்டதும் அல்ல. ஒரு நாளை வீணடித்தால் அது திரும்பி வராது. எனவே 2025 ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நொடியும் நம்மை ஆட்சி – அதிகாரத்தில் அமர்த்துவதற்காக ஆத்மார்த்தமான உழைப்பை நல்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த உறக்கத்தைக் குறைத்து, உழைப்பை அதிகப் படுத்த வேண்டும்; உணவைக் குறைத்து உடலைத் திடகாத்திரமாக்க வேண்டும். ஆசைகளை அகற்றி அர்ப்பணிப்பு உணர்வுகளை உரமாக்கி விட வேண்டும். மக்களோடு மக்களாக ஒன்றி நின்று நல்வழிப்படுத்திட வேண்டும்.!
ஆண்டு மாறினால் போதாது.! ஆட்சியும் மாற வேண்டும்.!
மாறிய புத்தாண்டு முழுவதும்
நமது செயலில் மாற்றம் ஏற்பட வேண்டும்.!
அதுவே புத்தாண்டின் நோக்கமாக இருக்க வேண்டும்!
உலகெங்கும் வாழும் அனைத்து மாந்தர்களுக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.01.2025