அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்தநாளன்று புதிய தமிழகம் கட்சியினர் தமிழ்நாடெங்குமுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துக!
373 Views
![]()
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்தநாளன்று புதிய தமிழகம் கட்சியினர் தமிழ்நாடெங்குமுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துக!
விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காம் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய 131-வது பிறந்தநாளில், உலகெங்கும் சமஉரிமை, சமநீதி, சமபங்கிற்காகப் போராடும் இலட்சோபலட்சம் ஆர்வலர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இடித்துத் தள்ளப்பட்டு, விளிம்புநிலைக்குச் சென்ற கோடான கோடி மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். மண்ணின் மைந்தர்கள் – விளிம்புநிலை மக்களின் உயர்விற்காகப் போராடியதற்காக, அவர் தனது வாழ்நாட்களில் பட்ட அவலங்களும், அவமானங்களும் சொல்லி மாளா. அவருடைய விசாலமான அறிவுக்கும், பரந்துபட்ட நோக்கத்திற்கும் பாரத தேசத்தின் பிரதமராகவே அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் தன்னுடைய சொந்த மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டது. காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் ஒன்றாக இணைந்து முளையிலேயே அவரைத் தோற்கடித்தார்கள். எனினும், அவர் தான் பிறந்த சமுதாயத்திற்காகவோ பாரத தேசத்தின் ஒட்டுமொத்த மக்களுக்காகவோ சிந்திப்பதையோ செயல்படுவதையோ ஒருகாலமும் நிறுத்திக் கொண்டதில்லை. அரசியல் நிர்ணய சபையில் முதலில் பத்தோடு பதினொன்றாகச் சேர்த்தார்கள். பின் அவருடைய அபரிமிதமான திறமையைக் கண்டு அரசியல் சாசனத்தை வடிவமைக்கக் கூடிய அனைத்துப் பணிகளையும் அவருடைய தலையிலே சுமத்தினார்கள். எனினும் அவருக்கு வரையறுக்கப்பட்ட நாட்களுக்குள் அப்பணிகளை நிறைவு செய்து இந்திய தேசத்திற்கான அரசியல் சாசனத்தை அர்ப்பணித்தார். அவரிடமிருந்த தகுதிகளும் திறமைகளுமே அவருக்கு எதிரிகளாகின. ஐந்தாறு ஆண்டுகள் சட்ட அமைச்சராக இருந்ததைத் தவிர வேறு எந்த உச்சத்தையும் தொடுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனினும் அவரைக் காட்டிலும் பெரிய பெரிய பதவி வகித்தவர்களின் பெயர்களெல்லாம் மறந்து போயின; ஆனால் அவருடைய உண்மையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உணர்ந்த கோடான கோடி மக்கள் அவருக்கு என்றென்றும் புகழ் வணக்கம் செலுத்துகிறார்கள்.
1995 வரையிலும் தமிழகத்தில் அவருடைய சிலைக்குக் கூட சில ஒடுக்கப்பட்ட அமைப்புகளைத் தவிர வேறு யாரும் மாலை அணிவிக்கவில்லை. 1995 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உருவான பிறகு, நாம் சட்டமன்றத்திற்குச் சென்ற பின்பு, அண்ணல் அம்பேத்கருடைய பிறந்தநாளையே குருபூஜையாக அனுசரிப்போம் என சென்னை கடற்கரையில் உள்ள சிலைக்கு ஆயிரக்கணக்கானோரோடு சென்று மாலை அணிவித்து, அவருடைய பிறந்தநாளை ஒருக் குறிப்பிட்ட பகுதி, பிரிவினருக்கு மட்டுமே அவர் சொந்தமானவர் என்ற வளையத்தை உடைத்தெறிந்து, “இன்று பலரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராவதற்கும் சட்டரீதியான உரிமையை வழங்கிய வள்ளல் அண்ணல் அம்பேத்கர்” என்பதை எடுத்துரைத்ததன் விளைவாக, பெரிய பெரிய கட்சிகளின் தலைவர்கள் கூட ஏப்ரல்-14 மற்றும் டிசம்பர்-6 ஆகிய நாட்களில் அவருடைய சிலைகளுக்கு மரியாதை செலுத்தக் கூடிய சூழல் உருவாயிற்று.
அவரை ஒருக் குறிப்பிட்ட சமுதாயத்தினுடைய தலைவராக மட்டுமே சிலர் பார்த்ததினுடைய விளைவாக, அவருடைய புகழ் வேறெங்கும் பரவாமல் போய்விட்டது. அவர் பரந்துபட்ட மனித சமுதாயத்தின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்காகக் குரல் கொடுத்தவர். இந்திய நாட்டில் உருவான ரூபாய்க்கு மதிப்பை எப்படி உருவாக்குவது என்ற அடிப்படை சித்தாந்தத்தைக் கூட அவர்தான் உருவாக்கி தந்தார். தொழிலாளர் விடுதலை, பெண் விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை என அவர் பேசாத பொருளோ, அவர் குரல்கொடுக்காத நிகழ்வோ ஏதும் கிடையாது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்ட சாதி, மாதம், மொழி, இனம் என்ற எல்லைகளைக் கடந்து மனிதகுல சமத்துவத்தை வென்றெடுக்கப் பிறந்தவர்; அதற்காகவே வளர்ந்தவர்; அதற்காகவே வாழ்ந்தவர்; அன்னாரின் 131-வது பிறந்தநாளன்று புதிய தமிழகம் கட்சியினர் தமிழ்நாடெங்குமுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.04.2022






