வயநாடு நிலச்சரிவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்!
வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மூணாறு பகுதியில் இதே போன்ற ஒரு நிகழ்வில் தமிழகத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் உயர்நீத்தார்கள். ஒப்பிட்டளவில் கேரளா அதிக மழைப்பொழிவு உள்ள மாநிலம் என்பதால் அடிக்கடி வெள்ளப்பெருக்குகளும், இது போன்ற நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளின் போது மட்டும் வருத்தப்படுவது அல்லது ஆதங்கப்படுவது, சில நிவாரண பணிகளை மேற்கொள்வது தீர்வாகாது.
அண்மைக்காலமாக ஆற்று படுகைகளிலும் மலைச்சரிவுகளிலும் வீடுகளை கட்டுகின்ற போக்கு இது போன்ற காலகட்டங்களில் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, கேரளா அரசும் மத்திய அரசும் கேரளாவில் உள்ள பூகோள அமைப்பை முழுமையாக ஆய்வு செய்து ஆபத்தான பகுதிகள் என்று கருதக்கூடிய இடங்களில் ரிச்சர்டுகள், ஹோட்டல்கள், குடியிருப்புகள் உருவாக்கப்படுவதை முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
பல கிராமங்கள் முற்றாக நிலச்சரிவில் மூழ்கி விட்டதாகவும்; அதனால் பெருமளவு உயிர் சேதங்கள் இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. மத்திய அரசு பேரிடர் மீட்பு குழுக்களை எவ்வளவு விரைவாக அனுப்பி வைக்க முடியுமோ, அவ்வளவு விரைந்து அனுப்பி வைத்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து வயநாடு மக்களை மீட்க வேண்டும். எவ்வித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் கேரள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளையும், வயநாடை மீண்டும் நிர்மாணிக்கவும் தாராளமாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.07.2024