தினமலர் நாளிதழுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த சிறப்பு பேட்டி
பொதுத் தொகுதியில் போட்டியிடுவது, ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒட்டப்பிடாரம் தொகுதி, என்னை அடையாளப்படுத்தியது. நான் ஒட்டப்பிடாரம் தொகுதியை, உலக அளவில் அடையாளப்படுத்தி இருக்கிறேன். ஒட்டப்பிடாரம் தொகுதியும், அந்த மக்களும் என் உள்ளத்திலும், உணர்விலும் பின்னிப் பிணைந்தவர்கள்.அது பொதுத் தொகுதியாக இருந்தாலும், நான் போட்டியிடுவேன். எங்களை பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்; ஒட்டப்பிடாரம் தொகுதியில், அனைத்து சமூகங்களும் களம் காணலாம்.
430 Views
![]()
துாத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தில், ஜாதி கலவரம் வெடித்த போது, பாதிக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்களுக்கு, நீதி கிடைக்க போராடியவர்; மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விடுதலை மற்றும் ஊதிய உயர்வுக்காக வாதாடியவர். விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என, அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கைகளுக்காக, குரல் கொடுத்து வருபவர், டாக்டர் கிருஷ்ணசாமி. கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்றவர். தற்போதைய தேர்தலிலும், தனித்து களம் காணும் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த சிறப்பு பேட்டி:
‘தேவேந்திர குல வேளாளர்’ என, பொதுப் பெயரிட்டு அழைக்கும் விஷயத்தில், நீங்கள் வைத்த கோரிக்கையை செய்து கொடுத்தபின்னும், அ.தி.மு.க., — பா.ஜ., கூட்டணியை ஆதரிக்காதது ஏன்?
தேவேந்திர குல வேளாளர் என, பொதுப் பெயரிடுவது, குதிரையில்லாமல் சாட்டை வாங்குவதைப் போல. பட்டியல் வெளியேற்றமே, தேவேந்திர குல வேளாளர் மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் பிரதான கோரிக்கை. தேவேந்திர குல வேளாளர் என்பது, ஆயிரமாண்டு காலமாக, புழக்கத்தில் இருக்கக்கூடிய பூர்வீக பெயர். குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர், பள்ளர் என்பவை, எந்த விதத்திலும் மதிப்பு குறைவான பெயர்கள் அல்ல.
இப்பிரிவினர் அனைவரும், வேளாண்மையை மட்டுமே தொன்று தொட்டு செய்து வருவதால், அவர்களை, தேவேந்திர குல வேளாளர் என, ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற, கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அம்மக்களை பட்டியல் பிரிவில் சேர்த்ததால் தான், அவர்களுக்கு தாழ்வு வந்து சேர்ந்தது. பட்டியல் பிரிவிலிருந்து நீக்காமல், வெறும் பொதுப் பெயரிடுவதால், எந்தவிதமான பலனும், இந்த சமுதாயத்திற்கு ஏற்படப் போவதில்லை. இடிந்த கட்டடத்தை புதுப்பித்த பிறகே, புது வண்ணம் பூச வேண்டும்.
பட்டியல் இனத்தில் இருந்து, தேவேந்திர குல வேளாளரை வெளியே எடுக்க வேண்டும் என்பது, அவ்வளவு சுலபமாக நடக்கக்கூடிய காரியம் இல்லை என்பது, உங்களுக்கு தெரியாதா?
இந்திய அரசியல் சாசனம், இந்த நிமிடம் வரையிலும், 102 முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சமுதாயத்தை, ஒரு பட்டியலிலிருந்து, இன்னொரு பட்டியலுக்கு மாற்றுவது என்பது, இந்திய அரசியல் சாசனத்தை மாற்றுவதை விட, பெரிய காரியமல்ல.
நீங்கள் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்ததால், பட்டியல் இன ஓட்டுக்கள் பிரிந்து, அது, அ.தி.மு.க., கூட்டணிக்கு பலவீனமாகி விடாதா?
தேவேந்திர குல வேளாளர்களின் ஓட்டுக்கள் பிரியும் என்று யார் சொன்னார்கள்; அவர்கள் முழுமையாக, புதிய தமிழகத்தின் பின்னால் இருக்கின்றனர். அ.தி.மு.க.,வே வலிந்து, தங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டால், நாங்கள் என்ன செய்வது?இன்னொரு அணி, ௧௦க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி அமைக்கும் போது, லோக்சபா தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளை கூட, தக்கவைத்து கொள்ளாதது யார் தவறு; அ.தி.மு.க., வலுவான கூட்டணியை அமைத்திருந்தால், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் அல்லது பிரதான எதிர்க்கட்சியாகலாம். அதை தவறவிட்டு விட்டனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்டிருந்தால், ஒட்டப்பிடாரத்திலாவது வென்றிருக்கலாம். அதுவும் இல்லாத சூழல் உருவாகி விட்டதா?
இப்போதும் ஒன்றும், குறைந்து போய் விடவில்லை. நான் மகத்தான வெற்றி பெறுவேன். 2016 சட்டசபை தேர்தலில், என் வெற்றி தட்டிப் பறிக்கப்பட்டதாகவே மக்கள் கருதுகின்றனர். நான், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த காலகட்டத்தில், எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.
கடந்த, 2016-ல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவரும், 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவரும், தொகுதிக்கு, 5 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. எனவே, ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள், நான் வெற்றி பெற வேண்டும் என, விரும்புகின்றனர்.
பட்டியல் இனத்தில் இருந்து, எங்களை வெளியே எடுங்கள் என்று சொல்லும் நீங்கள், தனி தொகுதியிலேயே போட்டியிடுவது ஏன்? பொதுத் தொகுதி ஒன்றில் போட்டியிட்டிருக்கலாமே?
பொதுத் தொகுதியில் போட்டியிடுவது, ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஒட்டப்பிடாரம் தொகுதி, என்னை அடையாளப்படுத்தியது. நான் ஒட்டப்பிடாரம் தொகுதியை, உலக அளவில் அடையாளப்படுத்தி இருக்கிறேன். ஒட்டப்பிடாரம் தொகுதியும், அந்த மக்களும் என் உள்ளத்திலும், உணர்விலும் பின்னிப் பிணைந்தவர்கள்.அது பொதுத் தொகுதியாக இருந்தாலும், நான் போட்டியிடுவேன். எங்களை பட்டியலிலிருந்து வெளியேற்றுங்கள்; ஒட்டப்பிடாரம் தொகுதியில், அனைத்து சமூகங்களும் களம் காணலாம்.
திராவிட கட்சிகளின் செயல்பாட்டை, மிகக் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். அதே திராவிட இயக்க பாணியிலேயே, உங்கள் மகனையும் அரசியலுக்கு கொண்டு வந்திருக்கிறீர்களே?
என் மகன் டாக்டர் ஷியாம், சமூக விடுதலைக்காக, அரசியலில் கால் எடுத்து வைப்பதில், எவ்விதமான திராவிட பாணியும் இல்லை. விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சமுதாயத்தை தட்டி எழுப்பவும், நிலை நிறுத்தவும், எண்ணற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்.நான் ஒன்றும் அவரை, அரசியலுக்கு வலிந்து கொண்டு வரவில்லை. அவர் தன்னை தானே, சுயமாக வளர்த்தெடுத்திருக்கிறார். ஒருவேளை எனது, 30 ஆண்டு கால போராட்டம்,அவருக்கு துாண்டுகோலாக இருந்திருக்கும்.அவருக்கு துணை முதல்வர், துணைப் பிரதமர் பதவி கொடுத்து வளர்ப்பதற்கு, நான் ஒன்றும், தமிழகத்தின் முதல்வராகவோ, நாட்டின் பிரதமராகவோ இல்லை. ‘மண்ணாளும் வித்தை சொன்னாலும் புரியாது’ என்பதற்கு இலக்கணமாக, அவர் தன்னுடைய சொந்த முயற்சியில், தன்னை அரசியல் ஆளுமையாகச் செதுக்கி வருகிறார்.
தேவேந்திர குல வேளாளர் என, பொதுப் பெயரிட்டு அழைக்கும் கோரிக்கையை செய்து கொடுத்த, பா.ஜ.,வுக்கு நன்றி கடனாக, அவர்கள் போட்டியிடும், 20 தொகுதிகளில், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாமே?
‘நீட்’ தேர்வு, குடியுரிமை சட்டம் உள்ளிட்ட, மத்திய அரசின் பல திட்டங்களுக்கு எதிராக, தமிழகமே கொந்தளித்த போது, நாங்கள் மட்டுமே ஆதரித்தோம். அதற்கு நன்றிக் கடனாக, புதிய தமிழகம் போட்டியிடும், 60 தொகுதிகளில், அவர்கள் ஆதரவு கொடுக்க முன்வருவரா?
தகுதி வாய்ந்த மருத்துவரை உருவாக்கும் நோக்கோடு நடத்தப்படும்,’நீட்’ தேர்வை, தி.மு.க., – – அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றனவே?
அரசியலுக்காக நல்லதையும் எதிர்த்தால் என்ன செய்வது.
இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டு, இலவசங்களை அறிவித்திருப்பது, சரியான அணுகுமுறையா?
அர்த்தமற்ற இலவச திட்டங்களால், தமிழக அரசின் நிதி ஆதாரம் வீணடிக்கப்படுகிறது; கடன் சுமை அதிகரிக்கிறது. தமிழக மக்களை நிரந்தரமாக கையேந்துபவர்களாக வைத்திருப்பது நியாயமல்ல. இந்தத் தேர்தலோடு, இலவச திட்ட அறிவிப்புகள் காலாவதியாகி விடும்.
இரு திராவிட இயக்கங்களோடு, கூட்டணி அமைக்க முடியாதவர்கள், கமல் கட்சி அல்லது அ.ம.மு.க.,வோடு கூட்டணி அமைத்து விட்டனர். நீங்கள் அப்படி முயற்சி எடுக்காதது ஏன்?
இந்திய இறையாண்மை, சமூக நல்லிணக்கம், சமத்துவம், சம உரிமை போன்ற, உயரிய லட்சியங்களை முன்னிறுத்தியும், தனித்துவத்துடனும் மாற்று அணியாகவே, நாங்கள் இந்தத் தேர்தலில் களம் காண்கிறோம்.
தனித்துப் போட்டியிட்டு என்ன சாதிக்க முடியும்?
புதிய தமிழகம் கட்சியின் தனித்துவத்தைக் காட்ட முடியும். இன்றைய அரசியல் சூழலில், தனித்து போட்டியிடுவதே, ஒரு சாதனை தான்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற ஜாதியினரை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு சலுகை வழங்கும் திட்டத்தை செம்மைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கும், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, பிற ஜாதியினர் எதிர்க்கின்றனரே?
இது, தி.மு.க., போன்ற திராவிட கட்சிகளால், 60 ஆண்டுகளாக பேசி வரக்கூடியது தான். இத்திட்டத்தை, ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருப்பதாக கூறும், தி.மு.க., நடைமுறைப்படுத்தினாலே, வெளியிலிருந்து எந்த எதிர்ப்பும் வராது.’ஊருக்கல்ல உபதேசம், தனக்குத் தான்’ என்ற நோக்கத்தோடு, தி.மு.க., சொல்லும் கலப்பு திருமணத் திட்டத்தை, அவர்கள் முதலில், தங்கள் கட்சி உறுப்பினர்களில் இருந்து தொடங்குவதே, சரியாக இருக்கும்.
வன்னியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும், 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, வன்னியர் அல்லாத பிற ஜாதியினர் எதிர்க்கின்றனரே?
இட ஒதுக்கீடுகள் மிகப் பெரிய அளவிற்கு அரசியலாக்கப்பட்டு விட்டன. மொத்தமாக இட ஒதுக்கீடுகள் குறித்து மறுசிந்தனை வேண்டும் என்று தொடர்ந்து, நான் வலியுறுத்தி வருகிறேன். சமத்துவமும், சம உரிமையும் என்ற, உயரிய கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படுமேயானால், இட ஒதுக்கீடுகள் என்ற பேச்சுகள், நாளடைவில் எழாமல் போய் விடும்.
இப்பொழுது இந்தியாவில், எஸ்.சி., – பி.சி., என்று, மக்களை பிளவுபடுத்துவதற்கு பதிலாக, ‘Affirmative Action’ என்பதன் வாயிலாக, பல சமுதாயங்களை கைதுாக்கிவிட முடியும். அதைப் பற்றிய புதிய சிந்தனை, புதிய கருத்தையே, புதிய தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் விஷயத்தில், வெள்ளாளர், கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்த்து, போராட்டம் நடத்தினரே?
எந்த சமுதாய மக்களும், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. சில அரசியல் கட்சிகளின் துாண்டுதலுக்கு இரையாகி, சில தனி மனிதர்களும், சில தனி நபர் இயக்கங்களும் தான் போராட்டம் நடத்தினர். மற்றபடி, அந்த சமுதாய மக்களுக்கும், அப்போராட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தென் மாவட்டங்களை கடந்து, உங்கள் கட்சி வளராதது ஏன்?
தமிழகத்தில், 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், நாங்கள் வலுவாக இருக்கிறோம். பிற மாவட்டங்களில், நாங்கள் நன்கு வளர்ந்து வருகிறோம்.
உங்கள் கட்சி சார்பில், தேர்தல் அறிக்கை வெளியிடுவீர்களா?
ஓரிரு நாட்களில் வெளியிடுவேன்.
இரு திராவிட இயக்கங்களின் தேர்தல் அறிக்கையை, எப்படி விமர்சிப்பீர்கள்?
அதிகாரப் பசியின் வெளிப்பாடு அது.
சிறு கட்சிகளாக இருந்தாலும், தலைவரை தவிர, இரண்டாம் கட்டத் தலைவர்கள் உள்ளனர். அப்படி யாரையும், உங்கள் கட்சியில் உருவாக்காதது ஏன்?
இரண்டாம் கட்ட தலைவர்கள், நிறைய பேர் இருக்கின்றனர்.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ.,வாக இருந்த ராமசாமி, அ.தி.மு.க., நிலைப்பாடு எடுத்துச் சென்ற பின்,யாரையும் வளர்த்து விடுவதில்லை என்ற, முடிவுக்கு வந்து விட்டீர்களா?
மயிலின் ஒரு சில சிறகுகள் விழுந்து விட்டால், அதற்காக மயிலுக்கு சிறகுகளே இல்லையென்றோ, புதிதாக முளைக்காதென்றோ சொல்ல முடியாது.
கூட்டணி விஷயத்தில், பா.ஜ.,வும் உங்களை கண்டு கொள்ளாதது ஏன்?
பா.ஜ.,வின் உண்மை தொண்டர்கள் என்றும், எங்களை கண்டுகொள்வர்.
உங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற இடங்களில் யாருக்கு வெற்றி இருக்கும் ?
பணம் பிரயோகிக்கப்படாமல் இருந்தால், நல்ல தொண்டுள்ளம் கொண்டவர்கள் பலர் வெற்றி பெற வாய்ப்பிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்







