புதிய தமிழகம் கட்சியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி.!

புதிய தமிழகம் கட்சியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி.!
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. எனினும் நமக்கான இந்திய அரசியல் சாசனம் உருவாகும் வரையிலும் அவர்களின் ஆட்சி – அதிகாரத்திற்கே கட்டுப்பட்டு இருந்தோம். 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நமக்கான அரசியல் சாசனம் உருவாக்கிய பின்னரே நாம் பரிபூரண ஜனநாயகக் குடியரசாகப் பரிணமித்தோம்; இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு எனும் முழுமையை அடைந்தோம்.
இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து இந்திய மக்களுக்குமான நீதி, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மிக உயரிய விழுமங்களையும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளையும் அனைவரும் சமமாக அடைவதே தலையாய லட்சியம்; அதை நினைவு கூறுவதே ஜனவரி 26 – குடியரசு தினமாகும்.
ஜனவரி 26-ல் கொடியேற்றி வீர உரையாற்றுவதோடு நமது ஆட்சியாளர்களின் கடமை முடிந்து போவதில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை அமலாக்குவதில் தான் அவர்கள் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவில் எம்மொழி பேசக் கூடியவராக இருப்பினும் ’இந்தியர்’ என்ற நாட்டுப்பற்று உணர்வோடு இருந்திட வேண்டும் என்பதே குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஆகும்.!
டாக்டர்.க.கிருஷ்ணசாமி,MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
26.01.2024.