2023-2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள் இன்று (21.03.2023) சென்னை தலைமை அலுவலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், அச்சந்திப்பின் போது அவர் கூறியதாவது:
549 Views
![]()
அனைவருக்கும் காலை வணக்கம்.!
2023-2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (20.03.2023) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது மிக முக்கியமான நிதி சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை இந்த அரசு தமிழக மக்களுக்கு அளித்திருந்தது.
அதில், தமிழகத்தில் உள்ள இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகள் ’அனைவருக்கும்’ உரிமை தொகையாக மாதம் ரூ 1000 வழங்கப்படும்;
தமிழகத்தில் இருக்கக்கூடிய 55-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் பணியாற்றக்கூடிய 12 லட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர அரசு ஊழியர்கள், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் என 18 லட்சம் ஊழியர்களுக்கும்; தமிழகத்தினுடைய அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றக்கூடிய போக்குவரத்து ஊழியர்களுக்கும் ”பழைய ஓய்வு திட்டம்” அமலாக்கப்படும் போன்ற பல மிக முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகளை மக்களுக்கு கொடுத்திருந்தார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக நாமும், தமிழகத்தினுடைய பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகவும் இப்பொழுது ”குடும்ப பெண்களுக்கு உரிமை தொகை ரூ 1000 வழங்கப்படும்; அந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அமலாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்திற்காக ரூபாய் 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
ஓராண்டுக்கு 7,000 கோடியை பிரித்தால் அதை 58 லட்சம் குடும்ப பெண்களுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். மேலும், இரண்டரை வருடம் கழித்து அமலாக்கப்படக்கூடிய இந்த திட்டம் ஐந்தில் ஒரு பகுதி (5:1) குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் போய் சேரும் என்று சொல்லுகின்ற போது, திமுக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறிவிட்டார்கள் என்றே பொருளாகிறது. இது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. குடும்ப அட்டை வைத்திருக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் – குடும்பத் தலைவிகளுக்கும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றக்கூடிய வகையில் செப்டம்பர் 15 அல்ல, உடனடியாக அத்திட்டம் அமலுக்கு வர வேண்டும்.
ஒரு திட்டத்தை ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் அமலாக்கினால் அதனால் யாருக்கு என்ன பயன்? இது அப்பட்டமாக மக்களை ஏமாற்றுவதும், பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்குகளை பெற்றதற்கும் சமம். இது ரம்மி மோசடி, சீட்டு மோசடி செய்வற்கு ஒப்பானது.
நேர்மையாக மக்களிடத்தில் சென்று வாக்கு வாங்க கூடிய ஒரு அரசியல் கட்சிக்கு வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு மாதம் கால தாமதம் ஆகலாம்; இரண்டு மாதம் ஆகலாம்; அதிகபட்சம் ஆறு மாதம் ஆகலாம். ஆனால், அந்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் அமலாக்கினால் மட்டும்தான் மக்களுக்கு அது சென்றடையும்; பயன்பெறுவார்கள்.
இரண்டாவது, முந்தைய 2006 முதல் 2011 வரையிலும் திமுக ஆட்சியில் வரி வருவாய் 8 சதவீதமாக இருந்தது. அது மெல்ல மெல்ல குறைந்து, 2021-ல் 5.8 சதவீதமாக குறைந்து விட்டதாக ஒரு புள்ளி விவரத்தை நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.
இப்பொழுது, திமுக இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மொத்த உற்பத்தி 6.11% அதாவது, 0.31% உற்பத்தியை உயர்த்தி இருப்பதாக கூறுகிறார். கடந்த இரண்டு வருடமாக சர்வதேச நோபல் பரிசு பெற்ற ஆலோசகர்கள், திட்ட துணை கமிஷன்கள், நிதி அமைச்சர், பல்வேறு துணைக் குழுக்கள் அனைத்தும் இணைந்து வெறும் 0.31% வருவாயை மட்டும் தான் உயர்த்த முடிந்திருக்கிறதா?
கொரோனாவுக்கு பின் எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்தது. குறிப்பாக, சிமெண்ட் உட்பட அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; அதேபோல பதிவு கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது; டாஸ்மாக்கின் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது; பல பொருட்கள் விலைகளும் உயர்ந்திருக்கிறது. இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் வருவாய் பன்மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 0.31%யை மட்டும் உயர்த்திவிட்டு, நாங்கள் கடந்த ஆட்சியை விட சாதனை செய்துவிட்டோம் என்று சொல்லும் அளவிற்கு சாதனை எதுவும் இல்லை.
இந்த பட்ஜெட்டில் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திட்டங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள் அல்லது இனிமேல் அறிவிக்க போகிறோம் என்று சிலவற்றை கூறுகிறார்கள். ஆனால் அதற்கான நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அடையாறு, கூவம் ஆறுகளை சுத்தம் செய்வதாக கடந்த 50 ஆண்டுகளாக திமுக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான திட்டங்கள் இதுவரை ஒரு இன்ச் கூட நகரவில்லை. அடையாறு ஆற்றை 1,500 கோடியில் சுத்தப்படுத்தப் போவதாகச் சொல்லப்படுகிறது. அதற்காக நிதி குறித்தும் எதுவும் கூறவில்லை.
2021 ஆம் ஆண்டிற்கு பிறகு, மிகப்பெரிய குற்றச்சாட்டை இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ”எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை கடனில் தள்ளி விட்டார்” என்று தெரிவித்தார். இன்றைய பட்ஜெட்டுக்கு 1,46,000 கோடி ரூபாய் கடன் பெற போவதாக கூறி இருக்கிறார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் வரி வருவாய் அதிகரித்த பிறகும், ஏன் மீண்டும் 1,46,000 கோடி கடன் பெற போகிறீர்கள்? அப்பொழுது முந்தைய ஆட்சிக்கும், உங்களுடைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இதிலிருந்து திமுக ஆட்சியில் முன்னேற்றம் எதுவுமே இல்லை என்பது தெளிவாகிறது. கடன் வாங்கியே இந்த ஆட்சியை நடத்த வேண்டியதாக இருக்கிறது. சொந்த வருவாயை உருவாக்குவதற்கு எவ்விதமான ஆக்கபூர்வமான திட்டமும் திமுக அரசிடம் இல்லை மீண்டும் ஊர்ஜிதம் ஆகிறது.
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. தமிழக பட்ஜெட் என்பது எப்படி காகிதம் அல்லாத பட்ஜெட்டோ, அதேபோன்று ”காரியமில்லாத; லட்சியம் இல்லாத; நோக்கமில்லாத; குறிக்கோள் இல்லாத பட்ஜெட்”
அடுத்ததாக, தமிழகத்தில் ஆதி திராவிடர் பள்ளி, பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, மிக மிக பிற்பட்டோர் பள்ளி என பல்வேறு விதமான பள்ளிகள் இருக்கின்றன. அவை அனைத்தயும் அந்த பேரில் அழைக்கப்படக்கூடாது. வருவாய்த்துறை அதிகாரிகளின் கீழ் கவனிக்கப்படுவதால் தான் அந்த பள்ளிகளின் தரம் குறைபட்டு விடுகிறது. எனவே, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அனைத்து பள்ளிகளையும் கொண்டு வர வேண்டும் என்று நான் சட்டமன்ற உறுப்பினர் இருந்த காலகட்டத்திலிருந்தே குரல் கொடுத்து வருகிறேன். ”இப்பொழுது பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அனைத்து பள்ளிகளும் கொண்டு வரப்படும்” என அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இருப்பினும் அந்த பள்ளிகள் அனைத்தும் பழைய பெயரிலேயே அழைக்கப்படுமா? அல்லது அரசினர் பள்ளி என்று பொதுவான பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படுமா? என்பதையும் தமிழக அரசு விளக்க வேண்டும்.
தமிழகத்தில் ”சாதி வேறுபாடுகள் ஒழிய வேண்டும்; சாதியை ஒழிக்க வேண்டும்” என்று கடந்த 50 ஆண்டுகளாக சொல்லக்கூடிய ’திராவிட அரசு’ ஒன்றை சரி செய்துவிட்டு, மற்றொன்றில் மீண்டும் தவறிழைக்கிறார்கள். அதாவது பள்ளிகளை ஒருங்கிணைத்து விட்டு, மீண்டும் ஆதி திராவிடர் மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, மிக மிக பிற்பட்டோர் மாணவர் விடுதி என பிரித்து வைப்பது தவறு.
சமூக நீதி, திராவிட மாடல் பேசிக்கொண்டு மாணவ பருவத்திலே எஸ்.சி, பி.சி என்று பிரிக்க கூடாது. எல்லா மாணவர்களும் ஒரே பள்ளியில் – கல்லூரியில் படிக்கிறார்கள்; அங்கு எவ்வித பேதங்களும் கிடையாது. பள்ளிகளில், கலை கல்லூரி விடுதிகளில் மட்டும் ஏன் இந்த பிரிவினை?
எஸ்.சி, பி.சி என தனித்தனி விடுதிகள் வைத்து பள்ளி மாணவர்களையும், கலைக் கல்லூரி மாணவர்களையும் பிரிக்கக் கூடாது. தமிழக மாணவர்களை, தமிழக மக்களை ’திராவிட மாடல்’ என்ற பெயரில் பிரித்தாளக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். எனவே ”அனைத்தும் அரசு மாணவர் விடுதிகளாக இருக்க வேண்டும், அதில் அனைவரும் இடம் பெற வேண்டும்” என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, ஆட்சி மாற்றம் நடந்தவுடன் இரண்டு முக்கிய வாக்குறுதிகளுக்கு கையெழுத்து போடுவதாக கூறினார்கள். ஒன்று நீட் தேர்வு; மற்றொன்று பூரண மதுவிலக்கு. இப்பொழுது இந்த அரசிற்கு 50,000 கோடிக்கு மேலான வருவாய் டாஸ்மாக்கில் இருந்து தான் வருகிறது. அரசு என்ன திட்டம் போட்டாலும் அத்திட்டங்கள் பலனற்று போவதற்கு காரணமே டாஸ்மாக் தான். எனவே, டாஸ்மாக்கை அடியோடு நிறுத்த வேண்டும். அதுதான் புதிய தமிழகம் கட்சி வைக்க கூடிய வேண்டுகோள்.
அதேபோல, தமிழகத்திலே சட்டபூர்வமாக ஏறக்குறைய 6,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. 10-15க்கும் மேற்பட்ட சாராய உற்பத்தியாளர்களால் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்கள் செல்கின்றன. இது நேரடியாக அரசு கஜானாவுக்கு வரக்கூடிய வருமானம். ஆனால், அரசினுடைய கஜானாவுக்கு வராமலேயே ஒரு பெரிய பங்கு ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு செல்கிறது.
தவறான மதுபான கொள்கைக்காக டெல்லியில் ஒரு துணை முதல்வரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பார்கள் என்ற பெயரில் 3000க்கும் மேற்பட்ட பார்கள் இருக்கின்றன. அவற்றில் 500 லிருந்து 1000 பார்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு பணம் செலுத்துகிறார்களே தவிர, 2000 முதல் 2500க்கு மேற்பட்ட சட்டவிரோத பார்கள் இருக்கின்றன. அவற்றிற்கு டாஸ்மாக்கில் இருந்து நேரடியாக மதுபானம் செல்கிறது. குறைந்தது ஒரு நாளில் மட்டும் ஒவ்வொரு பாரிலும் ஒன்றரை லட்சம் முதல் 10 லட்சத்துக்கு மேலாக சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுகிறது.
இளைஞர்கள் என்றுமில்லாத அளவிற்கு மது, சூது, கஞ்சா, போதை அனைத்து வஸ்துகளுக்கும் ஆளாகி அவர்களுடைய வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். இவற்றிற்கு அடிப்படையான காரணமாக மதுவே இருக்கிறது. இந்த மது விறபனையை ஒரு பக்கம் சட்டபூர்வமாக நடத்திக்கொண்டு, அதற்கு இணையாக சட்ட விரோதமாக 50,000 கோடி சிலருடைய பாக்கெட்டுகளுக்கு போய் சேருகிறது. எனவே, இது மிகப்பெரிய அளவில் ஆபத்தானதும், தமிழக மக்களை சுரண்டக்கூடியதுமாகும்.
இந்த மதுபான கொள்கையால் தமிழகத்தினுடைய பொருளாதாரம், தமிழக இளைஞர்களுடைய பொருளாதாரம், தமிழக மக்களுடைய பொருளாதாரம் மிக பெரிய அளவில் சுரண்டப்படுகிறது; இளைஞர்களுடைய வாழ்வாதாரம் மிக பெரிய அளவிற்கு பாதிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய ஊழல்; மோசடி. அது குறித்து மத்திய அரசு விசாரித்தால் மட்டும் தான் உண்மை வெளிவரும். எனவே, தமிழகத்தில் நடைபெறும் மதுபான ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நான் சொல்லக்கூடிய மிக முக்கியமான அம்சம்.
நன்றி.! வணக்கம்.!!







