புதிய தமிழகம் கட்சியின் ‘கிறிஸ்துமஸ்’ நன்னாள் வாழ்த்துச் செய்தி.!

சமூக கொடுமைகளிலிருந்து உலக மாந்தர்களை விடுவிக்க இயேசுநாதர் பூமியில் அவதரித்த நாளையே ‘கிறிஸ்துமஸ்’ விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு நாதர் ஓர் அவதாரப் புருஷர் / இறைத்தூதர் என கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் கூறினாலும், ரோமாபுரி ராஜ்ஜியத்தில் ஆளும் வர்க்கங்களின் கொடுமைகளை தட்டிக் கேட்ட மாபெரும் புரட்சியாளர்; ஏழை, எளிய மக்களின் துயரங்களைப் போக்க பாடுபட்டவர்; மக்களின் விடுதலைக்காக தன்னுயிர் நீர்த்தவர் எனவும் வரலாறுகள் கூறுகின்றன.
அவர் தனது இளம் பருவத்திலேயே இந்தியாவிற்கு வந்து சென்றுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. வரலாறுகள் வேறு வேறு விதத்தில் இருந்தாலும் அவர் ஒரு மகத்தான அவதாரப் புருஷர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
’அன்பு, அமைதி, பிரதிபலன் எதிர்பாரா சேவை’ என்ற உன்னத லட்சியத்தை இயேசு நாதர் உலகிற்கு விட்டுச் சென்றுள்ளார். அம்மகானின் பிறந்தநாளில் அவர் வழி போற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ’கிறிஸ்துமஸ்’ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூக கொடுமைகளை களைய தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயேசு பிரான் பிறந்த நாளை கொண்டாடும் அதே வேளையில், இன்றும் இம்மண்ணில் எளிய மக்களுக்கு தொடரும் சமூக அவலங்களை துடைத்தெறியக் கிறித்தவ மக்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முன்வர வேண்டும்; அதன்மூலமே அமைதியான உலகத்தை உருவாக்க முடியும்.!
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.12.2024