பொதுவுடைமைக் பாவலர் இன்குலாப் – சமநீதி காவலர் டாக்டர் கிருஷ்ணசாமியும்

செய்திகள்
s2 271 Views
  • பொதுவுடைமைக் பாவலர் - சமநீதி காவலர்

    பொதுவுடைமைக் பாவலர் - சமநீதி காவலர்

  • பொதுவுடைமைக் பாவலர் - சமநீதி காவலர்
Published: 20 Jan 2021

Loading

பொதுவுடைமைப் பாவலர் அய்யா இன்குலாப் அவர்களுக்கு வீரவணக்கம்!
யார் இந்த இன்குலாப்?
# கீழக்கரையில் பிறந்த சாகுல் அமீது என்ற இயற்பெயருடைய மார்க்சிய-லெனினிய புரட்சிகர பாவலர்…
# பிறரைப் போன்று பணத்திற்க்காக பாட்டெழுதும் வணிகக் கவிஞர் அல்ல இவர், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் கொள்கையோடு வாழ்ந்த மக்கள் கவிஞர் இவர்…
# கவிஞர், பாவலர், எழுத்தாளர், போராளி, நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், பயிற்சியாளர், பேராசிரியர் என பன்முகம் கொண்டவர்…
# அடிப்படையில் திராவிட சிந்தனையாளராக, அவ்வியக்கங்களில் பணியாற்றியவர்…
# 1968-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கீழவெண்மணியில் 44 விவசாயிகள் பண்ணையாட்களால் உயிரோடு கொளுத்தப்பட்ட நிகழ்விற்குப் பிறகு திராவிட இயக்கங்களில் இருந்து வெளியேறி, தன்னை ஒரு முழுமையான மார்க்சிய-லெனினிய சிந்தனையாளராக மாற்றிக் கொண்டவர்…
# “செருப்பணிந்து நடக்கக் கூடாதென்பவனின் தோலை உரித்து செருப்பாய் தைத்து நட” என்று உணர்ச்சியூட்டியவர்…
# மார்க்சிய லெனினிய மாணவர் இயக்கத்தின் தலைவராக டாக்டர் அய்யா அவர்கள் இருந்தபோது அவர்களுக்கு பயிற்சி ஆசிரியராக இருந்தவர் அய்யா இன்குலாப்…
# விடுதலைப் புலிகள் பிரபாகரனோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர் மட்டுமின்றி, அவர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அய்யா இன்குலாப்…
# ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை போருக்கு தட்டி எழுப்பிய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ எனும் எழுச்சிப்பாடலை எழுதிக் கொடுத்தவர் இவர்…
# டாக்டர் அய்யா அவர்கள் மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்தபோதிலிருந்து, இன்றுவரை சிறந்த நண்பராக இருந்து வந்தவர்…
# 1990-களில் தென்தமிழகத்தில் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக தேவேந்திரகுல வேளாளர்கள் வெகுண்டெழுந்து வன்முறைக்கு வன்முறையை தீர்ப்பளித்தது கண்டு, “தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை தவிர்த்து தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை எழுத முடியாது” என்று கவிதை வடிவில் வரலாறு தந்தவர்…
# தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சட்டமன்ற உறுப்பினராக டாக்டர் அய்யா அவர்கள் இருந்தபோது, 1997-ல் தென்தமிழகத்தில் ஏற்பட்ட சாதிக் கலவரச் சூழலில் டாக்டர் அய்யா அவர்களின் அழைப்பை ஏற்று உண்மையறியும் குழுவாக கவிஞர் கவிதாச்சரண், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோரோடு தென்தமிழகம் முழுக்க ஆய்வு செய்தவர் இவர்.
# தென்தமிழகத்தில் மிகப்பெரிய சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்ட டாக்டர் அய்யா அவர்களின் போர்க்குணம் கண்டு வியந்து, அவருக்கு “தெற்கே உதித்த சூரியன்” என பட்டம் சூட்டிய பாவலர் இவர்…
# 1998-ல் புதிய தமிழகம் கட்சி புளியங்குடியில் நடத்திய முதல் மாநில மாநாட்டில் மாபெரும் எழுச்சி ஊட்டியதோடு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான பயிற்சியும் அளித்தார்…
# 2006-ஆம் ஆண்டு அய்யா இன்குலாப் அவர்களின் கவித்திறமையை பாராட்டி மிக உயரிய விருதான கலைமாமணி விருதினை தமிழக அரசு அளித்தபோது ஈழத்தமிழர்களை இந்த அரசு காக்க தவிறிவிட்டதாகக் கூறி கலைமாமணி விருதினை வாங்க மறுத்த தமிழ் தேசிய போராளி அய்யா இன்குலாப்…
# மேலும் அதே 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் அய்யா அவர்கள் போட்டியிட்ட போது, தனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையும் பொருட்படுத்தாமல், தற்போது அவருடைய உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரின் மகள் மருத்துவர் அமீனா அவர்களின் திருமணப் பணிகள் தன் முன்னே இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் தலைமையின் கைக்கு அரசியல் அதிகாரம் சென்றாக வேண்டும் என்ற நோக்கில் தனது உடல்நலனையும், குடும்ப சூழலையும் பொருட்படுத்தாது டாக்டர் அய்யா அவர்களுக்காக தினந்தோறும் வீடுவீடாக தேர்தல் களப்பணி ஆற்றிய போராளி தான் அய்யா இன்குலாப்…
# மேலும் 2008-ல் புதிய தமிழகம் கட்சி மதுரையில் கடைசியாக நடத்திய மாநில மாநாட்டிலும் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார்.
# 2010-ல் கோவையில் புதிய தமிழகம் ஒருங்கிணைத்த பன்னாட்டு தமிழ் பிரதிநிதிகள் பங்கெடுத்த உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கு துவக்கம் முதல் முடிவு வரை டாக்டர் அய்யா அவர்களுக்கு துணை நின்றவர்…
# தருமபுரி இளவரசன் ஆணவக்கொலை செய்யப்பட்டபோது, அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவை டாக்டர் அய்யா அவர்கள் ஒருங்கிணைத்த போது, உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர், குறிப்பாக சர்க்கரை நோய் ஊசியை போட்டுக் கொண்டே அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த அர்ப்பணிப்பாளர்…
# 2014-ஆம் ஆண்டு இலொயோலா கல்லூரி மாணவர்கள் சார்பாக இம்மானுவேல் சேகரர் நினைவேந்தல் கூட்டம் நடத்த அய்யா இன்குலாப் அவர்களிடம் நான் பேசியபோது “உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால், முடிந்தால் கண்டிப்பாக கலந்துகொள்கிறேன் தம்பி, முடியாவிட்டால் அடுத்தாண்டு கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் தம்பி” என்று கூறியவர், அதற்கடுத்த ஆண்டுகளிலும் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு உடல்நிலை மிக மோசமடைந்தது. தற்போது அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாற்றில், குறிப்பாக தென்தமிழக தேவேந்திரகுல வேளாளர் விடுதலை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த அய்யா இன்குலாப் அவர்களைப் பற்றி இன்றைய தேவேந்திரர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் அவருக்கு நன்றி செலுத்த இச்சமூகம் கடமைப்பட்டுள்ளது.
அவர்-
வரலாறு தந்த வரலாறு,
எமக்கு-
வரலாறு தந்த வரலாறு,
அவர் வாழும் வரலாறு-ஆம்
அவர் வாழும் வரலாறு.
உடலுறுப்பு தானம் செய்து உலகம் உள்ள காலம் முழுதும் அவர் வாழும் வரலாறு…
இன்குலாப் என்ற உருது வார்த்தைக்கு தமிழில் புரட்சி என்று பொருள். பெயருக்கு ஏற்றாற்போல் வாழ்ந்து, பிறரையும் அதே பாதையில் வாழ்வித்து மறைந்த அய்யா இன்குலாப் அவர்களுக்கு புதிய தமிழகம் மாணவரணியின் செம்மாந்த வீரவணக்கம்…
இன்குலாப் ஓங்குக!
– க.பாலாஜி.
(2016 க.பாலாஜி முகநூல் பதிவிலிருந்து!)