தென்மாவட்டங்களில் ஓராண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் சாதிய வன்கொடுமைகள், படுகொலைச் சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கோரிக்கை

செய்திகள்
s2 116 Views
  • Dr Krishnasamy 3
  • Dr Krishnasamy 3
Published: 28 Nov 2023

Loading

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் சாதிய வன்கொடுமைகள், படுகொலைச் சம்பவங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக கவனம் செலுத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், தமிழக ஆளுநர் அவர்களுக்கும், National Human Rights Commission (NHRC), National Commission for Scheduled Castes (NCSC), National Commission for Women (NCW), National Commission for Protection of Child Rights (NCPCR) ஆகிய ஆணையங்களின் தலைவர்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர், டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA அவர்கள் 27.11.2023 அன்று அனுப்பிய கடிதத்தின் சாராம்சம்…
பேரன்புடையீர், வணக்கம்!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 1920-க்குப் பிறகு, கடந்த நூறாண்டு காலமாக தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் மற்றும் பல்வேறு இடைநிலைச் சாதி மக்கள் மீது, கள்ளர், மறவர், அகமுடையார் என்ற பிரிவினரால் ஏவப்பட்ட பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளும், அதனால் நிகழ்ந்தக் கலவரங்களும், அந்தக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சொந்த வீடு, நிலபுலங்களை விட்டுவிட்டு இடம்பெயரக்கூடிய சூழல்களும் ஏற்பட்டன. அதன் உச்சகட்டமாக, 1995-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் என்ற கிராமம் தமிழகக் காவல்துறையினராலேயே சூறையாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஏறக்குறைய பத்தாண்டுகாலம் தென்தமிழகத்தில் தொடர் கலவரங்கள் நடைபெற்றன. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த பத்தாண்டுகளாகப் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தென்தமிழகத்தில் அமைதி நிலவியது. ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் அதேபோன்ற வன்முறைகள் திட்டமிட்டுத் தூண்டப்பட்டு, நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தென்மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டக் கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. இதுபோன்ற சமூகக் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் தேவேந்திரகுல வேளாளர் மற்றும் யாதவர், நாடார் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். குற்றத்தில் ஈடுபடக்கூடியவர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் எனும் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

கடந்த 13.11.2023 அன்று வல்லநாடு அருகே மணக்கரையில், தனது சொந்த நிலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த 60 வயதான விவசாயி மணி, 13.08.2023 அன்று நெல்லை – கீழநத்தம் வடக்கூரில் ஊராட்சிமன்ற உறுப்பினர், பட்டதாரி இளைஞர் இராஜாமணி, 10.10.2023 அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காந்திராஜன், 27.06.2023 அன்று காரியாப்பட்டி அருகே முருகன்வெற்றிலைப்பட்டியில் மாயக்கிருஷ்ணன், 14.06.2023 அன்று செங்கோட்டை – விஸ்வநாதபுரத்தில் இராஜேஷ் என்ற இளைஞர், 02.06.2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் ஆறுமுகம், 23.11.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – ஆலம்பட்டியைச் சார்ந்த அருண்பாரதி, 25.04.2023 அன்று வல்லநாடு அருகே முறப்பநாடு VAO லூர்து பிரான்சிஸ், 22.02.2023 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முத்துக்குமார் என்ற வழக்கறிஞர், 23.12.2022 அன்று இராமநாதபுரம் பரமக்குடி அருகே எமனேஷ்வரத்தில் கனகராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் 30.10.2023 அன்று திருநெல்வேலி – மணிமூர்த்தீஸ்வரத்தைச் சார்ந்த 2 தேவேந்திரகுல இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச்சென்றபோது, அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு மட்டுமின்றி, அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, 26.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது போன்ற மனிதநேயமற்றச் சம்பவங்களும், 09.08.2023 அன்று நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை, 17.08.2023 அன்று கழுகுமலை இலட்சுமியாபுரத்தில் பள்ளி மாணவர் ஹரிபிரசாத், 08.11.2023 அன்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அருணாச்சலப்பேரி கிராமத்தில் அன்பழகன், தர்மராஜ், 14.07.2023 அன்று கடையம் அருகே துப்பாக்குடி கிராமத்தில் பாபநாசம், மாரியம்மாள், நாயகன், மூர்த்தி ஆகியோர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அண்மைக்காலங்களில் மறவர் சமூகத்தவரால் நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாதாரண ஏழை, எளிய மக்கள் ஆடுமாடு மேய்த்தும், தனது சொந்த நிலைத்தில் உழைத்துப் பிழைக்கவும் வழியில்லாமல் அஞ்சிஅஞ்சி வாழ வேண்டியிருக்கிறது அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை கிராமத்தில் நிலபுலங்களோடு வாழ்ந்து வந்த தேவேந்திரகுல மக்கள் மீது தொடர்ந்து வன்முறைகள் ஏவப்பட்டதால், 13.11.2023 அன்று நடந்த மணி என்பவரது கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அக்கிராமத்தின் ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்களும் தங்களுடைய சொந்த நிலபுலங்களை விட்டுவிட்டு, அக்கிராமத்தை விட்டே வெளியேறிவிட்டார்கள். இதேபோன்று மறவர்களின் அச்சுறுத்தலால் நாடார், யாதவர் சமூக மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மணக்கரை கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக எங்கெல்லாம் மறவர், கள்ளர் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சொந்த நிலபுலங்களோடு வாழக்கூடிய பட்டியல் பிரிவு மற்றும் இடைநிலைச்சாதி மக்கள் மீது வன்முறைகளை ஏவி, அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டு, அவர்களின் நிலங்களை அற்பசொற்ப விலைக்கு அபகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், கச்சநத்தத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டது கூட அவர்களுடைய நிலங்களை பறிக்கும் நோக்கத்தில் தான்.

இதற்கு முக்கிய காரணம், தென்தமிழகத்தின் பல காவல்நிலையங்களில் மறவர்/பிறமலைக்கள்ளர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே 90% பேர் காவலர்களாகவும் உளவுப்பிரிவிலும் இருப்பது தான். இராமநாதபுரம் மாவட்டம் – பெருநாழி, கோவிலாங்குளம், கமுதி, அபிராமம், கடலாடி, சாயல்குடி, உச்சப்புளி, சிவகங்கை மாவட்டம் – தேவகோட்டை, திருப்பாச்சேத்தி, பழையனூர், மானாமதுரை, வேலாயுதபட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் – ஆவுடையார்கோவில், மீமிசல், தூத்துக்குடி மாவட்டம் – முறப்பநாடு, திருவைகுண்டம், புளியம்பட்டி, கடம்பூர், திருநெல்வேலி மாவட்டம் – மானூர், தச்சநல்லூர், தாழையூத்து, சீவலப்பேரி, சிவந்திப்பட்டி, நாங்குநேரி, சீதபற்பநல்லூர், தென்காசி மாவட்டம் – சொக்கம்பட்டி, சின்னக்கோவிலாங்குளம், ஊத்துமலை, பனவடலிச்சத்திரம், விருதுநகர் மாவட்டம் – வத்ராப், திருச்சுழி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செக்கானூரணி, எழுமலை, சாப்டூர், எம்.கல்லுப்பட்டி, டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, மேலூர், கீழவளவு உள்ளிட்ட பல காவல்நிலையங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

இக்காவல் நிலையங்களில் சாதாரண ஏழை, எளிய மக்களால் புகார் கொடுக்கச் செல்லமுடியவில்லை. அப்படிச் சென்று புகார் கொடுத்தாலும், புகார் கொடுத்த சில நிமிடங்களில், யாருக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கே அப்புகாரின் சாராம்சம் தெரிவிக்கப்பட்டுவிடுகிறது; வழக்குகள் பதிவு செய்யப்படாமலேயே தடுத்துவிடுகின்றனர்.

மறவர் சமுதாயத்தைச் சார்ந்தக் கிரிமினல்கள், உள்ளூர்க் காவல்நிலையக் காவலர்கள், புரோக்கர்கள், மாநில மற்றும் தேசிய கட்சிகளுடைய முக்கிய பிரமுகர்கள் என அவர்களிடத்தில் ஒரு மிகப்பெரிய கூட்டு நிலவுவதால், சாதாரண மக்கள் காக்கை, குருவிகளைப் போல வேட்டையாடப்படுகிறார்கள்.

வேலியே பயிரை மேய்வது போல, ஏழை, எளிய மக்கள் மீது வன்முறையை ஏவும் கும்பல்களிடத்தில் இன்றைய அரசு மென்மையான போக்கையே கையாளுகிறது. நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவன் நன்றாகப் படிக்கிறான் என்ற காரணத்தினாலேயே அவனும் அவனது தங்கையும் மறவர் சமூக மாணவர்களால் தாக்கப்பட்டு இருவரும் நூலிழையில் உயிர்தப்பினர்; அவர்கள் சிகிச்சை பெற்று முடிந்தபின்பு கூட அதே பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படாமல், அங்கிருந்து 50 கி.மீ. அப்பால் திருநெல்வேலியில் உள்ள பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். அதுவும் ’வேறு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம்’ என்று மாநில அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரே பேசுகிறார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை கிராமத்தில் மட்டும் மறவர் சமூகத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கூலிப்படைகளாக செயல்படுகிறார்கள். மாவட்டங்கள், மாநிலங்கள் கடந்து கொலை செய்வது, ஆள்கடத்தல் செய்வது, போதைப் பொருட்கள் விற்பது, மணல் திருடுவது, கனிமவளங்களைக் கடத்துவது போன்ற சமூகவிரோதச் செயல்கள் மட்டுமே இவர்களது பிரதானத் தொழிலாக உள்ளது. அக்கிராமத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது 20 முதல் 30 கொலை வழக்குகள் உள்ளன. எனினும் எவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை; அவர்கள் எந்த நீதிமன்றங்களுக்கும் செல்வதில்லை. நேர்மையான காவல்துறை உயர்அதிகாரிகள் பெயரளவிற்கு மட்டுமே அந்தப்பதவில் நீடிக்க அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, காவல்நிலையங்கள் எல்லாம் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால், காவல்துறையின் துணையின்றியோ அல்லது அரசினுடைய உதவியின்றியோ எவ்வாறு இவர்களால் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட முடியும்?.

மேலும் தென்மாவட்டங்களில் மணக்கரை உள்ளிட்ட பல கிராமங்களில் அரசு நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்கச் செல்லும் தேவேந்திரகுல வேளாளர் பெண்கள் காலை 8 மணிக்குச் சென்றாலும் மாலை 4 – 5 மணி வரை வேண்டுமென்றே பொருட்கள் வாங்கவிடாமல் மறவர்களால் அடாவடியாகத் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்; நீர்நிலைகளில் குளிக்க, துணி துவைக்கச் செல்லும் பெண்களும் சிறுவர்களும் அங்கும் அடாவடியாக தடுக்கப்படுகின்றனர். வல்லநாடு, திருவைகுண்டம், சேரன்மாதேவி பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய குழந்தைகளும், சிறுவர்களும், மாணவர்களும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அங்கும் சாதிரீதியாகத் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; தேவேந்திரகுல வேளாளர்களின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்களை அறுவடை செய்வதற்குக் கூட தடை செய்தல் மற்றும் விளைநிலங்களில் வேண்டுமென்றே ஆடுமாடுகளை விட்டு அழித்தொழித்தல்; திருமண விழாக்களில் ஒலிப்பெருக்கிக்குத் தடை செய்தல்; அரசு சாலை வழியாக இறந்த சடலத்தை எடுத்துச் செல்வதற்குக் கூட இடையூறு செய்தல் போன்ற எண்ணற்ற அடக்குமுறைகள் தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பட்டியலின, விளிம்புநிலை மக்கள் மீதும், குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவர் மீதும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இவையெல்லாம் அப்பட்டமான இனப்படுகொலைக்கு இணையான சம்பவங்கள் ஆகும்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சூலப்புரம்-உலைப்பட்டி செல்லாண்டியம்மன் கோவிலில் தேவேந்திரகுல வேளாளர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காக, தங்கள் சாதியைச் சார்ந்த ஒருவரை அவர்களே கொலை செய்துவிட்டு, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் மீது வீண்பழி சுமத்திக் கொலைவழக்குப் பதியச் செய்தார்கள். பின் சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகே உண்மை வெளிவந்தது.
மேலும், உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களுக்குக் கூட வர அனுமதிக்கப்படுவதில்லை. துணைத் தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினப் பிரிவைச் சார்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள் கூட அவர்களது பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த 2021-க்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 2000-க்கும் மேற்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2024 – நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவர்கள் இந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு அரசியல் இலாபமும், கூட்டணிக் கணக்குகளும், வாக்குவங்கியுமே முக்கியக் காரணங்களாக உள்ளன.
தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பிற பட்டியலின, இடைநிலைச் சாதி மக்கள் மீது வன்முறைகளையும், படுகொலைகளையும் நிகழ்த்தும் கூலிப்படைக் கும்பல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பது தெரிந்தும், அவர்களை மகிழ்வித்து அரசியல் இலாபம் அடையும் நோக்கத்தில், திமுக அரசு இதுபோன்ற சமூகவிரோத வன்முறைச் சம்பவங்களை வேண்டுமென்றே வலிந்து அனுமதிக்கிறது.
”இது பெரும் கலவரமாக வெடித்தால் கூட, அதன் மூலம் பெரும் அரசியல் இலாபம் தேடலாம்” என்றே திமுக அரசு நினைக்கிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சித்தரித்தது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு சோதனையிடச் சென்ற பெண் அதிகாரிகளைத் தாக்கியது, ஆளுநர் மாளிகையில் கிரிமினல்களைத் தூண்டிவிட்டு பெட்ரோல் குண்டு வீசியது என அனைத்துமே அரசியல் கணக்கோடு நிகழ்த்தப்படுபவை தான்.

எனவே இந்த அரசிடமிருந்து எந்தவிதமான நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது; தென்மாவட்டங்களில் நிகழக்கூடிய வன்கொடுமைகளை திமுக அரசு தடுத்து நிறுத்தி, அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கைத் தகர்ந்துபோய்விட்டது; ஒட்டுமொத்தத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டது; 15 மவட்டங்களில் சாதாரண மக்கள் மத்தியில் அச்சமும் பீதியுமே நிலவுகின்றன. மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றத் தவறும்பட்சத்தில், 356-வது விதியைப் பயன்படுத்தி, அந்தக் குறிப்பிட்ட மாநில அரசை கலைத்துவிட்டு, மத்திய அரசே நேரடியாக அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாநிலத்தின் ஒருபகுதி பயங்கரவாதத்திற்கோ, தீவிரவாதத்திற்கோ ஆட்பட்டிருப்பின், அந்தப்பகுதிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்.

எனவே மத்திய அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
1. மத்திய உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் சிறப்புக்குழு ஒன்றை அனுப்பி, மேற்குறிப்பிட்ட தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிரீதியான வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள், பெண்கள்-குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் சமூகக் கொடுமைகள் என அனைத்தையும் முறையாக விசாரித்திடவும், National Investigation Agency (NIA), Central Bureau of Investigation (CBI), Intelligence Bureau (IB), National Human Rights Commission (NHRC), National Commission for Scheduled Castes (NCSC), National Commission for Women (NCW), National Commission for Protection of Child Rights (NCPCR) உள்ளிட்ட அமைப்புகளையும் தனித்தனியே அனுப்பி, தென்தமிழகத்தில் நடைபெறும் சமூகக் கொடுமைகளை முழுமையாக ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

2. தினம் ஒரு கொலை அல்லது தாக்குதல் என்ற நிலை நீடிப்பதால், தென்தமிழக மக்களுக்கு அச்சத்தைப் போக்கக்கூடிய வகையிலும், நம்பிக்கையூட்டக்கூடிய வகையிலும், சிறிதுகாலத்திற்காவது துணை இராணுவப்படை தென்தமிழகத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

3. 2024 – நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட, இடைநிலைச் சாதி மக்கள் அச்சமின்றி தேர்தல் பணிகளைச் செய்திடும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
4. 1960-களில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, தென்மாவட்டங்களில் அனைத்துக் காவல்நிலையங்களிலும் பணியாற்றக்கூடிய கள்ளர், மறவர், அகமுடையார் சமுதாயங்களைச் சார்ந்த அனைத்து காவலர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக இடமாற்றம் செய்திட வேண்டும்.

5. உடனடியாக மத்திய உள்துறை இராஜாங்க அமைச்சரையாவது தென்தமிழகத்திற்கு அனுப்பி, உண்மை நிலையைக் கண்டறியவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டவும் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.