ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்குகளும் அல்ல.! வெற்று சம்பிரதாயங்களும் அல்ல.!!
610 Views
![]()
ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சடங்குகளும் அல்ல.! வெற்று சம்பிரதாயங்களும் அல்ல.!!
கல்வியின் மேன்மையையும், தொழில் – தொழில் கருவிகள் – செல்வம் சேர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் உணர்த்தும் கலங்கரை விளக்கங்கள் அவை.!
அக்டோபர் 4-5-6 ஆகிய தேதிகளில் ‘வாழ்க்கை திறன் கல்வி‘ (Life Skill Education) பயன் மற்றும் தொழில், கருவிகள்குறித்து பள்ளி குழந்தைகளிடத்திலே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள புதிய தமிழகம் கட்சியினருக்கு வேண்டுகோள்.!
முதற்கண் பாரத மக்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.!
பாரத தேசத்தில் பல நல்ல அம்சங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்காக நடத்தப்படும் நினைவூட்டல் நிகழ்ச்சிகள் அனைத்தையும் வெறும் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும், விழாக்களாகவும் பார்க்கும் மனோபாவங்கள் திராவிட சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டு விட்டன. சரஸ்வதி பூஜையையும், ஆயுத பூஜையையும் கூட சிலர் அவ்வாறே வலிந்து கற்பிதம் செய்கிறார்கள்.
கல்வியே பல தடைகளில் சிக்கித் தவிக்கும் மனிதனை விடுதலை செய்கிறது; கல்வியே மனிதர்களின் மேம்பாட்டிற்கு வழிவகை செய்கிறது; கல்வியே ஒழுக்கம் மற்றும் உயர்விற்கு வழிவகுக்கிறது; கல்வியே செல்வமும் ஆகிறது; கல்வியே மனிதனை மகிழ்விக்கிறது, அதிகாரம் மிக்கவனாகவும் மாற்றுகிறது. எனவே, கல்வியின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும். அதற்கான விழாக்களை வெறும் சடங்காகவோ, சம்பிரதாயமாகவோ மட்டும் கருதி விடக்கூடாது. அவ்வாறு கருதினால் அதில் எவ்வித அர்த்தமும் இல்லை. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது‘ என்பதற்கு இணங்க பிஞ்சு உள்ளங்களிலேயே நல்ல கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்தி விட வேண்டும். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் படிக்கக் கூடியது அல்ல, காலமெல்லாம் படித்துக் கொண்டே (Lifelong Education) இருக்க வேண்டியது. அவை வெறும் ஏட்டுக்கல்வியாக மட்டும் இருந்து விடக்கூடாது; வாழ்க்கை திறன் கல்வியுடன் (Life Skills) இணைந்ததாக இருக்க வேண்டும். அதுவே, இன்றைய காலகட்டத்திற்கு மிக மிக அவசியம். எனவே ஒவ்வொருவரும் வாழ்க்கை திறன் கல்விகளில் மேம்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதுவே ‘விஜயதசமி – சரஸ்வதி பூஜை‘யின் நோக்கம்.
‘ஆயுத பூஜை‘ என்பது ஆயுதங்களுக்கு பூஜை செய்வது என்று பொருள் அல்ல. செய்யும் தொழிலின் – அதற்கு பயன்படுத்தும் கருவிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், செல்வத்தை ஈட்டுவதும் அதன் நோக்கம். கல்வி எப்படி ஒரு மனிதனுடைய கண்ணைத் திறக்கிறதோ, அதேபோல தான் தொழிலும் மனிதனின் வாழ்வை சரியாக கட்டியமைக்கிறது. அதிகமான, விரைவான, இலகுவான உற்பத்திக்கு தொழில் உபகரணங்கள் மிக மிக அவசியம். விவசாயியாகவே இருந்தாலும் ‘கலப்பை‘ எனும் கருவி அவசியம்; கடப்பாரையும், மண்வெட்டியும் அவசியம்; பொருட்களை சுமந்து செல்ல வண்டி அவசியம். நூல் நூற்க, பாத்திரம் செய்ய, வீடு கட்ட என அனைத்திற்கும் கருவிகள் மிக மிக இன்றியமையாதவை. அதுவும் நவீன காலத்தில் உயர் ரக கருவிகளின் மூலமாக மனித உழைப்பு இலகுவாக்கப்படுகிறது. ஆண்டு கணக்கில், மாதக் கணக்கில், வாரக் கணக்கிலான பயணங்கள் மணி நேரங்களுக்குக் குறைக்கப்பட்டது கருவிகளால் தான். இந்த பூமியைத் தாண்டி விண்ணையும் அளக்கிறோம்; ஆள்கிறோம். எனவே, மனித குலத்தை வாழ்விக்கும் ‘தொழில் கருவிகளைப் போற்றுவதே ஆயுத பூஜையின் நோக்கம்.
உலகில் வேறு எங்கும் கல்விக்கும், தொழிலுக்கும் ஆண்டுதோறும் நினைவூட்டல் நிகழ்ச்சி நடப்பதில்லை. ஆனால், பாரதத்தில் அது உண்டு. தமிழகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவற்றை இரண்டு தினங்கள் கொண்டாடினாலும், அதற்கு முன்பாக 10 தினங்கள் கொலு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வட இந்தியாவில் ‘துர்கா பூஜை‘ என சிறப்பாக ஒரு மாதத்திற்கு மேல் கொண்டாடப்படுகிறது. எனவே இவ்விழாவை இந்திய மக்களின் பாரம்பரியங்கள், பண்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளாகவும்; இந்த ஒரு மாத காலத்தில் இவ்விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொருவர் இல்லங்களிலும் நடைபெறுவதால் வணிகமும், தொழிலும் பெருகி வளம் சேர்கிறது. வெறும் வளம் மட்டுமல்ல; மக்களுக்கு மனம் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் உண்டாக்குகிறது. தீபாவளிக்கு அடுத்தபடியாக ஏக இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படக்கூடிய விழா இவை. இது 140 கோடி மக்களையும் ஒற்றுமைப்படுத்தக் கூடிய விழா என்றாலும் கூட மிகையாகாது.
எனவே, இத்திருநாளில் நல்ல வாழ்க்கைத் திறன் மற்றும் கல்வி – தொழில் – செல்வம் அனைவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் 4-5-6 (சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை) ஆகிய தேதிகளில் புதிய தமிழகம் கட்சியினர் அனைவரும் கிராமந்தோறும், நகரந்தோறும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின் உண்மையான அர்த்தத்தை விளக்கக் கூடிய வகையில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை சிறிய சிறிய ஊர்வலங்களாகவும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.10.2022






