வ.உ.சி அவர்களின் இந்திய சுதந்திரப் போராட்டம்! திராவிடம் மறைக்கலாம்! தேசியம் (காங்கிரஸ்) மறக்கலாமா?
1998 Views
![]()
வ.உ.சி அவர்களின் இந்திய சுதந்திரப் போராட்டம்!
திராவிடம் மறைக்கலாம்!
தேசியம் (காங்கிரஸ்) மறக்கலாமா?
ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மண்ணிலிருந்து அகற்ற நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் நுழைந்து காலூன்றி, வரிவசூல் அதிகாரத்தை விரிவாக்கம் செய்தபோது ஆங்காங்கே எட்டுப்பட்டி, பத்துப்பட்டி கிராம அளவில் அதிகாரம் செலுத்தி வந்த ஜமீன்கள்; பாளையக்காரர்கள்; குறு நில மன்னர்கள் ஆகியோருடன் நடந்த மோதல்கள் ஒருவகை. இந்தியச் சிப்பாய்கள் ஏற்படுத்திய புரட்சிகள் இன்னொரு வகை. இந்தியத் தேசத்தை ’இந்திய மக்கள் மட்டுமே ஆள வேண்டும்; ஜனநாயக ரீதியாக மக்களரசு உருவாக்கப்பட வேண்டும்; ஏற்றத்தாழ்வு, சுரண்டலற்ற, சமத்துவ, சமதர்ம சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்’ என்ற ’தேச விடுதலை’ எனும் ஒற்றைக் குறிக்கோளோடு மட்டுமே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பது மூன்றாவது வகை.
இந்தியத் தேசத்தின் விடுதலைக்காக எத்தனையோ பேர் சிறை சென்று இருக்கிறார்கள்; தன்னுடைய சொத்து, சுகபோகங்களை எல்லாம் இழந்திருக்கிறார்கள். அவர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய அர்ப்பணிப்பும், ஈடுபாடும், தியாகமும் அளவிடற்கரியது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு வண்டாளம் எனும் கிராமத்தில் பிறந்த வ.உ.சி அவர்கள் திருச்சியில் சட்டப் படிப்பை முடித்து ஒட்டப்பிடாரத்தில் தனது சட்டப் பணிகளை மேற்கொண்டார். அன்றைய காலகட்டங்களில் வழக்கறிஞர் தொழில் என்பது அதிகமான பொருள் சேர்க்கும் தொழிலாகும். எனினும் அவரது நாட்டம் முழுவதும் இந்திய மண்ணை ஆங்கிலேயரின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதிலும், சுதேசி இயக்கத்தை முன்னெடுப்பதிலுமே இருந்தது.
அன்றைய காலகட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த காரணத்தினாலும்; கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வணிகம் செய்யப் பலரும் அங்குக் குடியேறியதாலும் அவர்கள் வந்து சேர தூத்துக்குடி-கொழும்பு மார்க்கமான கப்பல் போக்குவரத்து ’பிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன்’ என்ற ஆங்கிலேய கம்பெனி பயணிகள் கப்பல் மூலமாக இருந்தது.
ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட வேண்டும். தனது சுதேசி உணர்வை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்ற தீராத பற்று கொண்ட வ.உ.சி அவர்கள் 1906-ல் ஆங்கிலேய நீராவிக் கப்பலுக்கு எதிராக ’சுதேசி கப்பல்’ கம்பெனியை 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் அதாவது இன்றைய மதிப்பின் படி அது ஒரு லட்சம் கோடிக்குச் சமமாக இருக்கும் – தலா ஒரு பங்குக்கு 25 ரூபாய் வீதமாக 40,000 பங்குதாரர்களைச் சேர்க்க இந்தியா முழுவதுக்கும் பயணித்தார். அப்பெருந்தொகையைத் திரட்ட சில காலம் தாமதமாகும் என்பதால் ’சாலைன் – shaline’ என்ற கம்பெனியிடமிருந்து ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்தி இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஆங்கிலேயருக்கு எதிராக ’சுதேசி’ என்ற பெயரிலேயே தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பலை இயக்கினார். அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த ஆங்கிலேய அரசு சாலைன் நீராவிக் கப்பல் கம்பெனிக்கு அழுத்தம் கொடுத்து வ.உ.சி அவர்களுக்குக் குத்தகைக்கு கொடுத்த கப்பலை ரத்து செய்ய வலியுறுத்தியது.
எனவே, தன்னிடம் சொந்தமாகக் கப்பல் இருந்தால் மட்டுமே ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட முடியும் என்று கருதி ”I will comeback with ship otherwise I will perish in this sea” என்ற என்ற சபதத்தோடு இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, ஓரளவு நிதி திரட்டி முதன்முதலில் S.S.GALLIA என்ற கப்பலையும், இரண்டாவதாக S.S.LAVO என்ற கப்பலையும் வாங்கி இயக்கினார்.
வ.உ.சி அவர்களின் கப்பல் கம்பெனியை எப்படியாவது முடக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேய கப்பல் கம்பெனி தூத்துக்குடி-கொழும்பு கட்டணத்தை வெறும் ஒரு ரூபாய் அதாவது 16 அணா எனக் குறைத்தார்கள்; வ.உ.சி மனம் தளரவில்லை. ஆங்கிலேய கம்பெனி ஒரு ரூபாய் என்றால், நாங்கள் அரை ரூபாய் கட்டணம் அதாவது எட்டணா என வ.உ.சியின் சுதேசி கப்பல் கம்பெனி அறிவித்தது. அதன் எதிரொலியாக ஆங்கிலேய கப்பல் கம்பெனி தூத்துக்குடி-கொழும்பு பயண கட்டணத்தை இலவசம் எனவும், அத்துடன் ஒரு குடையும் இலவசமாக அளிப்பதாக அறிவித்தது.
இன்றைய கால கட்டங்களில் தான் மக்கள் வாக்குகளை இலவசமாக வாங்குவதற்கு போட்டா போட்டி என்று நினைத்து விடக் கூடாது. ஆங்கிலேயர்கள் நமது ஓட்டுக்களை அல்ல, நமது சுதந்திர உணர்வுகளை இலவசங்களைக் காட்டி வாங்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இன்று போல் அன்று மக்கள் விலை போய் விட வில்லை. ஆங்கிலேயர்களின் இலவச பயணத் திட்டத்திற்கோ, குடைக்கோ மயங்கியும் போய் விடவில்லை. மாறாகச் சுயமரியாதையுடன், சுயராஜ்ஜியத்தை லட்சியமாகக் கொண்ட வ.உ.சியின் சுதேசி கப்பலிலேயே கட்டணம் செலுத்தி மக்கள் பயணம் செய்தார்கள். சுதந்திர உணர்வு, சுய மரியாதை எல்லாம் சொல்லிக் கொடுத்து மட்டும் வருவதல்ல. அது ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருந்திடல் வேண்டும். இன்று ரூபாய் 500-க்கும், ரூ 1000-க்கும் அரசியல்வாதிகளிடத்தில் தங்களை எப்படி விற்கலாம் என்று உள்ளாட்சித் தேர்தல், , சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் எப்பொழுது வரும்? என எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கக்கூடியவர்கள் 120 வருடங்களுக்கு முன்பே, நம்முடைய மக்கள் காட்டிய சுயராஜ்ஜிய, சுதந்திர உணர்வுகளை எண்ணி பார்த்திடுவார்களா? இந்த சுதந்திர உணர்வை கொண்டு வர வ.உ.சி போன்றவர்கள் அன்று பட்ட இன்னல்களை ஒருபொழுதேனும் சிந்தித்துப் பார்ப்பார்களா? என்பதே நமது ஆதங்கம்
வ.உ.சியின் சுதேசி கப்பல் வெற்றியை ஆங்கிலேயர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதை ஒழித்துக் கட்ட எதாவது ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய காலகட்டங்களில் ‘வங்காள சிங்கம்’ என்று போற்றப்படக்கூடிய அளவிற்குச் சுதந்திர போராட்டத்தில் முன்னின்ற பிபின் சந்திரபால் என்பவர் சிறையிலிருந்து விடுதலையான தினத்தைக் கொண்டாடும் வகையில் திருநெல்வேலியில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பேசுவதாக இருந்தது. அதை அறிந்த ஆங்கிலேய ஆட்சியர் ’விஞ்ச்’ என்பவர் இருவரையும் அழைத்துப் பேசி கூட்டத்தில் பங்கு பெறக்கூடாது என அறிவுறுத்தினார். ஆனால் கூட்டத்தில் பங்கு பெற்ற வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிபின் சந்திரபால் தியாகத்தைப் பாராட்டியும், ஆங்கிலேய அரசைக் கண்டித்தும் பேசிய ஒரே ஒரு காரணத்திற்காக வ.உ.சி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறையில் இருக்கும்போது அரசியல் கைதியாக நடத்தப்படாமல் சாதாரண கைதியாக நடத்தப்பட்டுக் கொளுத்தும் வெயிலில் மாடுகள் இழுக்கவேண்டிய செக்கிழுக்கும் பணியை வ.உ.சி அவர்களைச் செய்ய வைத்துக் கொடுமைப்படுத்தினார்கள். நான்காண்டு சிறை வாசத்திற்குப் பிறகு, வெளியே வந்த வ.உ.சி அவர்களை வரவேற்க அவரது உயரிய நண்பர்கள் ஒரு சிலரைத் தவிர, அவர் சார்ந்த கட்சியினர் எவரும் வரவில்லை.
அவரது நான்காண்டு சிறை வாசத்தால் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கருதித் துவக்கப்பட்ட சுதேசி கம்பெனியும் முடங்கி கப்பல்களும் இயங்காமல் பெரும் நஷ்டத்திற்குச் சென்றன; சிறைப்பட்டதால் வழக்கறிஞர் பணியும் பறிக்கப்பட்டிருந்தது. வ.உ.சி அவர்கள் சிறைப்பட்டதாலும், சுதேசி நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாலும் உலகெங்கும் வாழ்ந்த இந்திய மக்களும்; குறிப்பாகத் தென் ஆப்பிரிக்க மக்களும் அவர் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கவும், சுதேசி கம்பெனியை மீண்டும் இயக்கவும் திரட்டிய நிதி அவருக்கு முறையாவும், உரிய தேரத்திலும் வந்து சேரவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு 347 ரூபாயும், 12 அணாவும் மட்டுமே காந்தியாரிடமிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரின் எல்லா சொத்துக்களையும் இழந்து விட்டு, தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், உற்ற துணையாகவும் யாரும் இல்லாத நிலையில் கோவையில் ஒரு வங்கியில் பணியாற்றி அதற்குப் பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்து இறுதியாகக் கோவில்பட்டியில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டு 1936 -ல் அவர் மரணம் எய்தினார்.
வ.உ.சி அவர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் இந்தியத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்; அவருடைய அர்ப்பணிப்பு எவருடனும் ஒப்பிட முடியாதது. அவரின் சுதந்திர உணர்வு என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் தூய்மையானது. அவர் ஒரு சாதி, மதம், இனம், மொழி, மாநிலம் என குறுகிய அளவில் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் தேசத்தின் விடுதலைக்காக போராடியவர். அவர் பட்ட துன்பங்கள், தொல்லைகள் அனைத்துமே ’இந்தியத் தேசம் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்; நம்மை நாமே ஆளவேண்டும்; இந்தியத் தேசத்தில் சமத்துவம் நிலை பெற வேண்டும்’ என்பதை வலியுறுத்தியே இருந்தது. அவருடைய 150வது பிறந்த நாளை நினைவு கூறும் போது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் அவருடைய தியாகம் என்ன என்பதை 140 கோடி இந்திய மக்களும் நினைவு கூற வேண்டும்.
ஆனால், அந்த மகத்தான சுதந்திரப் போராட்ட தியாகியின் பெயர் சில வீதிகளுக்கும், கட்டிடங்களுக்கும் சூட்டப்படும் என்றும்; அவருடைய பிறந்தநாளை ’தியாகத் திருநாளாக’ கொண்டாடப்படும் எனவும் சட்டமன்றத்தில் அறிவித்து இருக்கிறார்கள். தியாகிகளை பற்றிப் பேசும்போது, அவர்களுடைய தியாகம் எதற்கானது என்பது பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் சட்டமன்றத்தில் வ.உ.சி அவர்களைப் பற்றிப் பேசும்போது அவரின் தேசப்பற்று குறித்தோ, இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அவரின் அர்ப்பணிப்பு குறித்தோ; ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்தது குறித்தோ; பொதுக்கூட்டத்தில் இந்தியச் சுதந்திரத்திற்காக பேசி நான்காண்டு சிறைப்பட்டது குறித்தோ; சிறையில் அல்லல்பட்டது குறித்தோ அல்லது இவை அனைத்தும் இந்தியத் தேச விடுதலைக்கான ஒற்றை குறிக்கோள் என்பது குறித்தோ பதிவு செய்யப்படாமல் போகிற போக்கில் ’தியாகி’ என்று மட்டும் சுருக்கி கூறுவது அவரது தியாகத்தையும், தேசப்பற்றையும் மூடி மறைப்பதற்கு சமம்.
எல்லாவற்றையும் திராவிடத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இந்தியச் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகத்தைக் கூட பதிவு செய்ய மனம் வராமல் போகலாம். ஆனால், சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி மௌனம் சாதிக்கலாமா? அந்த நேரத்தில் எழுந்து வ.உ.சி அவர்களின் இந்திய தேசப்பற்றும், அர்ப்பணிப்பும் முறையாகப் பதிவு செய்யப்பாடாதது குறித்து வினாத் தொடுத்திருக்க வேண்டுமல்லவா? இதுவா இந்தியத் தேசத்திற்காக தங்களை அர்ப்பணித்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் மரியாதை?
வ. உ.சி அவர்கள் தன்னுடைய மதிப்புக்காக, மரியாதைக்காக வாழாமல் இந்த தேசத்தின் மதிப்புக்காகவும், மரியாதைக்காகவும் வாழ்ந்தவர். அவரின் தியாகத்தை யார் மறைத்தாலும் அவர் என்றென்றும் வாழ்வார்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.09.2021






