அன்னையர்களை போற்றுவோம்..! இரத்த சோகை நோயை அறவே விரட்ட மக்கள் இயக்கம் தொடங்குவோம்.!
364 Views
![]()
கோயம்புத்தூர் மாவட்டம் (இன்றைய திருப்பூர்) மசக்கவுண்டன் புதூர் எனும் சிற்றூரில் என்னை ஈன்றெடுத்த தாய் – தாமரை அம்மாள்; தந்தையர் – கருப்பசாமி குடும்பனார் ஆவர். எனது அருமைத் தாய் என்னைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தவர் மட்டுமல்ல, அன்றைய நாட்களில் ஆரம்பப் பள்ளியைத் தாண்டி ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதிக்காத சாதி ஆதிக்க வெறி கொண்ட கிராம சூழலிலும் மேல்நிலைப் பள்ளிப் படிப்பைப் பெறவும், மருத்துவ படிப்பை பயிலவும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தவர். நான் நான்காம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே ’கோவை மாவட்ட வரலாறு’ என்ற புத்தகத்தை வாங்கி வந்து எனக்கு அளித்து, பிற்காலத்தில் உலக வரலாற்றையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியவர். அடையாளம் அழிக்கப்பட்ட மக்களின் அடையாளங்களை மீட்டெடுக்கவும்; சமூக மற்றும் பொருளாதார தளங்களில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கவும் கோடான கோடி மக்களின் சம உரிமை மீட்பு போராளியாக இன்று வரையிலும் களத்தில் நின்றிட நெஞ்சில் ஈரத்தையும், வீரத்தையும் வார்த்தெடுத்து உலகறியச் செய்த உத்தமத் தாய் தாமரை அம்மாள் அவர்களுக்கு அன்னையர் தின நன்னாளில் நன்றி கூறுகிறேன்.
பசியோடும், பட்டினியோடும், பிணியோடும் கிடக்கும் கோடான கோடி இந்தியத் தாய்மார்களின் துயர் துடைக்க அன்னையர் தின நன்னாளில் சபதம் ஏற்போம்.
வெளிப்படையாக கண்டிராத இரத்த சோகை எனும் நோயால் அவதியுறும் தமிழக கிராமப்புற மற்றும் நகர்புற தாய்மார்கள் பெரும்பாலானோரிடத்தில் உள்ள அந்த ஆட்கொல்லி நோயை அறவே விரட்ட ”புதிய தமிழகம் கட்சி இரத்தசோகை விழிப்புணர்வு மகளிர் இயக்கத்தை” இன்று முதல் ஓராண்டுக் காலத்திற்கு நடத்திடச் சூளுரைக்கிறோம்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.05.2021






