ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் தட்டுப்பாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் கரோனா பதற்றம் ஒவ்வொரு குடிமகனையும் தொற்றி வருகிறது. முறையாகத் திட்டமிடல் இல்லாமலும், கட்டுப்பாடுகள் இல்லாமலும், நிதானத்தை இழந்து செயல்பட்டால் மூன்றாவது, நான்காவது அலையாகக் கூட விரிவு பெற்று, தமிழக மக்களை மேலும் வாட்டி வதைக்கக் கூடும்.

அறிக்கைகள்
s2 352 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 06 May 2021

Loading

மாநில அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் படுக்கை வசதிகள், தட்டுப்பாடற்ற ஆக்ஸிஜன், உரிய மருந்துகள் மற்றும் பிற உதவிகளையும் வழங்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் தட்டுப்பாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

கடமை தவறிய இந்தியத் தேர்தல் ஆணையம், பொறுப்பற்ற இந்திய அரசியல்வாதிகள், பொருத்தமற்ற காலத்தில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் ஆகியன ஒன்றிணைந்து கட்டுப்பாடுடன் இருந்த கரோனா பெருந்தொற்றை இப்போது இரண்டாவது அலையாக நாடெங்கும் பரவச் செய்ததால் கரோனா மக்களை அல்லல் படுத்துகிறது, தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகிறார்கள். இந்த வேதனையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை? தமிழகத்தில் கடந்த 6 மாதமாக அரசு இயந்திரம் முழு வீச்சுடன் செயல்படாததாலும், முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பணிகளில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தியதாலும், தேர்தல் நேரத்தில் எவ்வித கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கததாலும், தேர்தல் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒற்றை அதிகாரி செயல்பட்டதாலும் இன்று தமிழகமும் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

மிகச் சிரமப்பட்டு அறிவியல் துறையால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை உலகெங்கும் முன்னேறிய நாடுகள் அனைத்தும் தங்களுடைய குடிமக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளையும் விரைந்து செலுத்தினர். ஆனால் இந்தியாவிலேயே எதற்கு தான் மத்திய அரசை எதிர்ப்பது என்ற அடிப்படை அம்சம் கூட இல்லாமல், மிகச் சிறிய பின் விளைவுகளை எல்லாம் பெரிதாக்கி தடுப்பூசிக்கு எதிராகவும்; மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் கிளப்பினார்கள். அதன் விளைவாகத் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் உருவாகவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியில் 40 சதவீதத்திற்கு மேல் வீணாகியது. கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் அலட்சியப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வெகுவாக குறைந்திருந்த கரோனா முழு வேகம் எடுத்து இப்போது தினமும் 20,000 முதல் 30,000 பேர் வரை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையை நாடும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்திலும் பெரும்பாலான பெரும் நகரங்களில் உள்ள பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதாக செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளிலும் கரோனா படுக்கை வசதிகள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அச்சமும், பீதியும் உண்டாகி வருகிறது. டெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் வடக்கு மாநிலங்களை பார்த்து ஒப்பிட்டு பெருமை கொண்டிருந்த தமிழகமும் கரோனா வலியை உணர ஆரம்பித்து விட்டது. செங்கல்பட்டில் ஆக்ஸிஜன் இல்லாமல் 13 பேர் இறந்திருக்கின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் உண்மை நிலை என்ன? என்பது தெரியவில்லை. உதாரணத்திற்கு கோவையில் உள்ள பல பெரிய மருத்துவமனைகளில் கூட ஓரிரு நாட்களுக்கு மேல் ஆக்ஸிஜன் இருப்பு தாக்குப் பிடிக்காது என்று சொல்கிறார்கள். நோய்வாய்ப்பட்டோரும், உற்றார் உறவினரும், மக்களும், மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகிகளும் முறையான வழிக்காட்டுதல் இல்லாமல் தத்தளிக்கிறார்கள். எனவே, சிறிதும் கூட காலம் தாழ்த்தாமல் மாநில, மாவட்ட, தாலுகா அளவில் அவசர உதவிக் குழுக்களை உருவாக்கி கரோனா அவசரத் தகவல்களை உடனுக்குடன் பரிமாற வேண்டும். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கை வசதிகள் எத்தனை? எத்தனை நாட்களுக்கு உண்டான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது? என்பது குறித்து உடனுக்குடன் தகவல்களை சேகரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலோ 24 மணி நேரமும் தகவல்களைப் பரிமாறி, நோயாளிகளுக்கு எந்த மருத்துவமனைகளில் இடவசதி இருக்கிறதோ? அங்கு அனுப்பிட முறையாக வழிகாட்ட வேண்டும். இதை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் அனைத்து வசதிகளையும் கொண்ட 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகக்கூடிய வகையிலும்; அன்றாட நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து கட்சிகள் அடங்கிய குழுவை அமைத்திட மீண்டும் வலியுறுத்துகிறேன். மேலும் தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது? அது எப்படியெல்லாம் விநியோகிக்கப்படுகிறது? என்பது குறித்து வெள்ளை அறிக்கையை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெளியிட வேண்டும்.

இந்தியா கரோனா இரண்டாவது அலை என்ற எரிமலையின் உச்சியில் இருப்பதாகவே கருதுகிறேன். எனவே, எல்லாவிதமான கொண்டாட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் விட்டுவிட்டு ஆளும் கட்சி, ஆளாத கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் மக்கள் சேவை செய்ய வந்திருக்கிறோம் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட அறைகூவல் விட்டால் போதாது, ஒருங்கிணைந்து செயல்பட உரிய களமும், தளமும் உண்டாக்கப்பட வேண்டும்.

அதேபோல கடந்த ஒரு வார காலமாக ரெம்டெசிவர் என்ற மருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனியாக மையம் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்க ஒவ்வொருவரும் 4-5 நாட்கள் காத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்த மருந்து ஏன் இப்படி சந்தைப்படுத்தப்பட்டது எனத் தெரியவில்லை? அது ஒரு பட்டியலிடப்பட்ட மருந்து. எல்லோராலும் எல்லா இடத்திலும் விற்பனை செய்யக்கூடிய மருந்து அல்ல, போகிற போக்கில் எல்லா மருத்துவர்களும் பரிந்துரை செய்யக் கூடிய மருந்தும் அல்ல! எப்படிப்பட்ட நோயாளிக்கு, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இதை உரியக் காலத்தில் செலுத்தினால் மட்டுமே அது பயன் தரும். முதல் நாள் செலுத்த வேண்டிய மருந்தை ஒருவாரம் கழித்துச் செலுத்தினால் அது எவ்வித பலனும் கிடைக்காது, பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். ரெம்டெசிவர் ஒன்றும் கரோனாவிற்கு சர்வரோக நிவாரணி அல்ல. எனவே, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து மட்டுமே வழங்குவதை நிறுத்தி, தமிழக கரோனா சிகிச்சை மையங்கள் அனைத்திலும் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா பதற்றம் ஒவ்வொரு குடிமகனையும் தொற்றி வருகிறது. முறையாகத் திட்டமிடல் இல்லாமலும், கட்டுப்பாடுகள் இல்லாமலும், நிதானத்தை இழந்து செயல்பட்டால் மூன்றாவது, நான்காவது அலையாகக் கூட விரிவு பெற்று, தமிழக மக்களை மேலும் வாட்டி வதைக்கக் கூடும். கரோனா தடுப்பு மக்கள் இயக்கம் தொடங்குவதற்கு உண்டான சூழல் இப்போது இல்லை. அது கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பாக தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது மாநில அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் படுக்கை வசதிகள், தட்டுப்பாடற்ற ஆக்ஸிஜன், உரிய மருந்துகள் மற்றும் பிற உதவிகளையும் வழங்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி.
06.05.2021