அக்டோபர் 06 – சமூக ஜனநாயக உரிமை மீட்புப் போராளிகள் தினம்!

அக்டோபர் 06 – சமூக ஜனநாயக உரிமை மீட்புப் போராளிகள் தினம்!

அறிக்கைகள்
s2 5 Views
839936636 1416654979823324 5332923443322056403 N
Published: 06 Oct 2026

Loading

அக்டோபர் 06 – சமூக ஜனநாயக உரிமை மீட்புப் போராளிகள் தினம்!

கொடியங்குளம் அரச பயங்கரவாதத்திற்கு நீதிகேட்டு
மெரினாவில் புதிய தமிழகம் பேரணி – பொதுக்கூட்டம்!

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த
திருசூலம் சிவஞானம் சுப்பிரமணியம் நினைவாக,
தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியளவில்
மெழுகுவத்தி ஏந்தி புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி!
………………………………………………………..

1995, ஜூலை 27 அன்று திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணியில் தொடங்கிய ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாக, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம், ஆலந்தா, காசிலிங்காபுரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள் கிராமங்கள் அன்றைய காவல்துறையால் குறிவைத்துத் தாக்கப்பட்டது. கொடியங்குளம் சம்பவம், இந்த நூற்றாண்டில் நடந்த அரச பயங்கரவாதத்தின் கோர முகமாகும்.

கொடியங்குளத்தில் நடந்த அத்துமீறல்கள் இன்றைய காலகட்டமாக இருந்திருந்தால், வெறும் ஐந்து நிமிடத்தில் உலகச் செய்தியாகியிருக்கும். ஆனால், அன்று தொழில்நுட்பம் வளராத காலகட்டம். கொடியங்குளம் உட்பட பல கிராமங்களுடைய ஒட்டுமொத்த வீடுகளும் உடைமைகளும் சூறையாடப்பட்டபோதும் கூட, அதை வெளி உலகத்திற்குக் கொண்டுவர நாம் பல மாதங்கள் போராட வேண்டியிருந்தது.

இன்றுபோல அன்றும் எத்தனையோ வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்தன. ஆனால், தேவேந்திரகுல வேளாளர்களின் பக்கம் நின்று, அரசின் பகையை சம்பாதித்துக்கொள்ளவோ, இன்னொரு சமுதாயத்தின் கோபத்திற்கும் ஆளாகவோ அவர்கள் தயாராக இல்லை. அந்தச் சம்பவம் இரண்டு சமூகங்களுக்கிடையேயான மோதலின் விளைவாக நடந்ததல்ல. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முதல் காவல்துறை வரையிலும், தாங்களே ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக – அடியாட்களாக மாறி நடத்திய சட்டவிரோதச் செயல்.

அன்று புதிய தமிழகம் கட்சி உதயமாகவில்லை. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு கூட முழுமை பெறவில்லை. அதில் பல அமைப்புகள் பெயரளவில் இருந்தார்களே தவிர, சமூகத்திற்கு ஒரு பிரச்சனை என்று வருகின்ற பொழுது, அரசை எதிர்கொண்டு துணை நிற்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை.

கொடியங்குளம் செய்தி கேள்விப்பட்டவுடன், கோவையிலிருந்து அன்று இரவோடு இரவாக ஏறக்குறைய 400 கிலோமீட்டர் பயணம் செய்து, முதன்முதலில் அந்தக் கிராமத்தில் அடியெடுத்து வைத்தது ’நாம்’தான்.

அடித்து நிர்மூலமாக்கப்பட்ட வீடுகள், கோடரிகளால் வெட்டி எறியப்பட்ட பண்ட பாத்திரங்கள், அரிசி மூட்டைகள், சுத்தியல் மற்றும் கோடரிகளால் உடைக்கப்பட்ட தொலைக்காட்சிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், டேப் ரிக்கார்டர்கள், பெட்ரோலும் பாலீடாலும் (பூச்சிக்கொல்லி) ஊற்றப்பட்டு விஷமாக்கப்பட்ட குடிநீர்க் கிணறு, ஆசையோடு வளர்க்கப்பட்ட நாய்களும் சுடப்பட்ட கோலம், மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையம் கூட தப்ப முடியாத நிலைமை—இத்தனை கொடுமைகளையும் இழைத்தது அன்றைய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை என்று சொன்னால், இன்று பல பேருக்குப் புரியுமோ புரியாதோ தெரியவில்லை.

தங்களது தந்தைமார்களுக்கும் தாத்தாமார்களுக்கும் ஏற்பட்ட அவலங்களையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மூடி மறைத்துகொண்டு இன்று நடிகர்கள் – நடிகைகள் பின்னால் ஓடி அலைகின்ற இன்றைய ஜென்-ஜி (Gen-Z) இளைஞர்களை வரலாறு மன்னிக்காது.

இந்தக் கொடூர நிகழ்ச்சிக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியதும் நாம்தான். 1995 செப்டம்பர் 3-ஆம் தேதி வழக்கு தொடுக்கப்பட்டு, செப்டம்பர் 6-ஆம் தேதி கொடியங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், உணவு வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் கொடியங்குளம் கொடுமை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே, நீதியை நிலைநாட்ட சி.பி.ஐ. விசாரணையை வலியுறுத்தி, முதற்கட்டமாக அக்டோபர் 6-ஆம் தேதியன்று நமது தலைமையில், சென்னை மன்றோ சிலையிலிருந்து சென்னை மெரினா கடற்கரையில் அன்று இருந்த சீரணி அரங்கம் வரையிலும் ”பேரணியும் பொதுக்கூட்டமும்” நடத்த அறிவிக்கப்பட்டது.

அன்று நாம் அச்சடித்ததோ வெறும் 2,000 போஸ்டர்கள் தான். ஒரு ஊருக்கு ஒரு போஸ்டர் கொடுப்பதே அரிதான காரியமாக இருந்தது. ஆனால் அணிவகுத்த வாகனங்களோ 4,000-க்கும் மேல்! தென் தமிழகத்தினுடைய தேவேந்திரகுல வேளாளர்கள் முதல்முறையாக ஒரு சமூகமாகத் திரண்ட நாள் அந்த நாள் – ஒரு சமூகம் ஒரு தலைமையின்கீழ் ஒன்றுபட்டால் என்னெனவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்திய நாள் ’அந்த நாள்’!

அக்டோபர் 6-ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும், சென்னைக்கு அணிவகுத்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களின் கட்டுப்பாட்டில்தான் ’தலைநகரம் சென்னை’ இருந்தது. அந்தப் பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்களின் கண் முன்னால் அன்றைய ஆட்சியாளர்கள் – அவர்களை இயக்கியவர்களின் புகைப்பட்டம் கொண்ட எந்தப் பதாகைகளும் முன் நிற்க முடியவில்லை. பிரதான எதிர்க்கட்சி கூட ஆட்சியாளர்களின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. யாரை அசைக்க முடியாது என்று எண்ணிக்கொண்டிருந்தார்களோ, அவர்களது ஆட்சியை அகற்றுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது அன்றுதான்.

பேரணி நடந்தது தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்ல; மாறாகத் தலைநகரில்! சிதறிக் கிடந்தவர்கள் தங்களுடைய வலிமையைப் புரிந்துகொண்டு ஒன்றுதிரளுகின்ற பொழுது, பல காலம் அடக்கி வைத்து ’ருசி கண்டவர்களால்’ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பேரணியின் முடிவில் நாமெல்லாம் பொதுக்கூட்ட மேடையில் இருக்கின்ற பொழுதே, கண்முன்னே பேரணிக்கு வந்தவர்களின் பேருந்துகள் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையாலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

‘மீனவர்களோடு மோதல்’ என்ற பெயரில், நமது பேரணி – பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோர் தங்களுடைய இன்னுயிரை நீத்தார்கள். ஏறக்குறைய சீரணி அரங்கத்திற்கும் அவர்கள் சுடப்பட்டதற்கும் இரண்டு ஃபர்லாங் தூரம் இருக்கும். இரண்டு திடகாத்திரமான வீரர்கள், இப்பொழுது வெறும் சடலங்களாக சீரணி அரங்கின் மேடையிலே கொண்டுவந்து போடப்பட்டார்கள். பலமுறை திருப்பிப் பார்த்தோம்; எந்தவிதமான அசைவும் இல்லை. அவர்கள் உயிர் பிரிந்து போய்விட்டதைக் கண்டறிந்தோம்.

நம்மோடு பயணித்த வாகனத்திலேயே அவர்களது உடல்களை ஏற்றிச் சென்று, அரசு பொது மருத்துவமனையில் முறைப்படிச் சேர்த்தோம்; அடுத்த நாள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அரசின் உத்தரவுப்படி அவர்களுடைய மரணத்திற்கு வேறு காரணம் சொல்லப்பட்டது. ஏறக்குறைய ஆறு நாட்கள் மறுபிரேதப் பரிசோதனை செய்யக்கோரி போராடி, தலைமை தடயவியல் நிபுணர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளால்தான் உயிரிழந்தார்கள் என்ற சான்றிதழ் பெறப்பட்ட பிறகே, அக்டோபர் 11-ஆம் தேதி அவர்களுடைய உடலைப் பெற்று திரிசூலத்தில் அடக்கம் செய்தோம்.

புதிய தமிழகம் கட்சியின் தோற்றுவாய் – தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் முதல் போராட்டத்தில் சமூக ஜனநாயக உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் தங்களுடைய இன்னுயிரை நீத்த மாவீரர்களான ’சிவஞானம், சுப்பிரமணியம்’ ஆகியோரின் தியாகத்தை மறந்துவிட முடியாது.

இன்றைய தலைமுறை, தாங்கள் இப்பொழுது அனுபவிக்கக்கூடிய சுதந்திரமும் சமத்துவமும் தானாக வந்துவிட்டது என்று கருதினால், அதைவிட ’அறிவீனம்’ எதுவும் இருக்க முடியாது. தாங்கள் அனுபவிக்கக்கூடிய சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும், புதிய தமிழகம் கட்சியும், தலைமையும், அதன் தொண்டர்களும் செய்திருக்கக்கூடிய அர்ப்பணிப்புகள் அளவுகடந்தவை; இழப்புகள் ஏராளமானவை. எல்லாம் அடைந்துவிட்டதைப் போன்ற ஒரு மமதையில், எல்லாம் தானாக வந்துவிட்டது போன்ற ஒரு தற்குறித்தனத்தில் எவரும் இருந்துவிடக் கூடாது.

ஏறக்குறைய 100 ஆண்டுகாலம் கலவர பூமியாக இருந்த தென் தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால், அதற்கு புதிய தமிழகம் கட்சியினுடைய தோற்றுவாயும் வளர்ச்சியும்தான் காரணம். புதிய தமிழகம் கட்சியின் சமூக ஜனநாயகப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையுமே இந்தச் சமுதாயத்தைப் பல கொடுமைகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் மீட்டெடுத்திருக்கிறது.

31 ஆண்டுகளுக்கு முன்பு, இதே அக்டோபர் 6-ஆம் தேதி சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோர் செய்த தியாகம், அவர்களுக்கானது அல்ல. இந்தச் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரானது; இந்தச் சமுதாயத்தின் விடுதலைக்கானது.

வெறும் ஆரவாரங்களாலும், தற்புகழ்ச்சிகளாலும், தான்தோன்றித் தனமான செயல்களாலும், தனி நபர் சண்டியர் தனங்களாலும் எந்தவொரு சமுதாயமும் தலை நிமிர முடியாது; தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியாது. புதிய தமிழகம் கட்சியின் வலுவான தலைமையின் கீழ் ஒன்றுபடாமல் மதிப்போடும் மரியாதையோடும் வாழ முடியாது; அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும் முடியாது.

மாவீரர்கள் சிவஞானம், சுப்பிரமணியம் நெல்லை மாவட்டத்தின் ஒரு மூலையில் பிறந்திருந்தாலும், கல்லுடைக்கும் தொழிலாளியாக வாழ்ந்திருந்தாலும், தனது சமூகத்திற்கு ஒரு பிரச்சனை என்றவுடன் மக்களோடு மக்களாக தங்களையும் அடையாளப்படுத்தி கொண்டு ’களம்’ கண்டார்கள்; திரிசூலம் மலையைப் போல நெஞ்சுறுதிக் கொண்டு, அன்றைய காவல்துறையின் Delta Force நடத்திய துப்பாக்கிச் சூட்டின் குண்டுகளை நெஞ்சிலே சுமந்தனர்; அது வரலாறு; அது தியாகம்.!
சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோரின் தியாகத்தைப் போற்றுவோம்!

ஊருக்கு ஒரு தலைவன், ஒன்றியத்திற்கு ஒரு சண்டியர் என்ற அவமானங்களை அழித்தொழித்து ’புதிய தமிழகமாக’ ஒன்றுபடுங்கள்!

அதுவே, சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோரின் தியாகத்திற்குச் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்!

குறிப்பு:
இன்று மாலை 6:00 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களிலும் புதிய தமிழகம் கட்சியினர் மாவீரர்கள் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகியோரின் படங்களை அலங்கரித்து, மெழுகுவத்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்துங்கள்.! அவர்களது தியாகம் என்றென்றும் போற்றப்படும்!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.10.2026

839936636 1416654979823324 5332923443322056403 N