காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் நாளை பதிலளிக்க வேண்டிய தருணத்தில், சென்னை அடையாறு தவெக உறுப்பினர் படுகொலை – நல்ல அறிகுறி அல்ல.!

அறிக்கைகள்
s2 5 Views
The murder of a TVK member in Adyar, Chennai—occurring just as Chief Minister Vijay is set to respond to the police department's demand for grants tomorrow—is not a good sign.
Published: 08 Jun 2026

Loading

காவல்துறை மானியக் கோரிக்கைக்கு முதல்வர் விஜய் நாளை பதிலளிக்க வேண்டிய தருணத்தில், சென்னை அடையாறு தவெக உறுப்பினர் படுகொலை – நல்ல அறிகுறி அல்ல.!
நாளை பதிலுரையில் பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவாரா அல்லது எதிர்க்கட்சிகளைக் கிண்டலடிப்பதற்கும், கேலி செய்வதற்கும், ரீல்ஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்துவாரா?
……………………………………………………….

விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ள 4 மாதத்தில், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், ஏடிஎம்களையும் உடைத்துக் கொள்ளையடிக்கப்படும் சூழல், தமிழ்நாடு எங்கும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தேறிய கொலைகள் என ஒட்டுமொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்றத்தில் காவல்துறை மானியத்தின் மீது நாளை பதிலுரை கொடுக்க வேண்டிய இந்த தருணத்தில், இன்று சென்னையில் அடையாற்றில் அவரின் தவெக கட்சியைச் சார்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது, சட்டம் – ஒழுங்கு குறித்து அனைத்துத் தரப்பினராலும் ஏற்கனவே வைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கக் கூடியதாக இருக்கிறது.
பேசாமல் இருப்பது அவருடைய சுபாவமா அல்லது அரசியல் உக்தியா என்று தெரியாது. அது அவருடைய கடந்த கால சினிமா வாழ்க்கைக்கும் தனி வாழ்க்கைக்கும் பொருத்தமாகக்கூட இருந்திருக்கலாம். ஆனால், இந்தியாவிலேயே வலிமை வாய்ந்த தமிழக காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காப்பதும், அரசு நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இல்லாததும், வெறும் அரசியல் வியூகவாதிகளை மட்டும் வைத்து ஆட்சி செய்ய நினைப்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கே குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது.
பிற துறைகளில் ஏதாவது சுணக்கம் ஏற்பட்டால்கூட அதனால் மக்களுக்கு உடனடியாக எந்தப் பாதிப்பும் வந்துவிடாது; வரக்கூடிய சூழல் வந்தால்கூட தடுத்து நிறுத்த முடியும். ஆனால், சட்டம் ஒழுங்கு என்பது வெறும் வார்த்தையல்ல. தமிழ்நாட்டில் வாழ்கின்ற எட்டுக்கோடி மக்களுடைய வாழ்வு சம்பந்தப்பட்ட விஷயம்.
காவல்துறையை தனது கையில் வைத்திருக்கக்கூடிய முதல்வர், 24 மணி நேரமும் அதன் மீது தனது முழுப் பார்வையும் செலுத்தினால்தான், அத்துறை செம்மையாகச் செயல்பட முடியும். கடந்த காலங்களைக் காட்டிலும் அண்மைக்காலமாக நகர்ப்புறங்களிலேயே எந்தவிதமான அச்சமும் இன்றி வன்முறைச் சம்பவங்களும் கொலை, கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருவது ஏதோ ஒரு மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறியாகத் தோன்றுகிறது.
எனவே, விஜய் அவர்கள் தனக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்தப் பொறுப்பை உணர்ந்து, செம்மையாகச் செயலாற்றுவாரா? நாளை காவல்துறை மானியத்திலும் எதிர்கட்சிகளை கிண்டலடிப்பதற்கும், கேலி செய்வதற்கும், ரீல்க்காக ’பஞ்ச்’ டயலாக்கிற்கும் மட்டும் பயன்படுத்துவாரா அல்லது சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைப்பரா என பொறுத்திருந்து பார்ப்போம்!

– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
06.09.2026