நேற்று (07.09.2026) கோவையில் நடைபெற்ற தமிழக முதல்வரின் காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
1 Views

![]()
நேற்று கோவையில் நடைபெற்ற தமிழக முதல்வரின் காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரை குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களின் அரசு சந்தித்த முதல் தொடர் சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவாக, 07.09.2026 அன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தைத் தொடர்ந்து முதலமைச்சரின் பதிலுரை அமைந்திருந்தது. தமிழக மக்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் முதலமைச்சர் என்ன கருத்துகளை முன்வைப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
தமிழ்நாடு காவல்துறை இந்திய மாநிலங்களிலேயே மிகவும் வலுவான கட்டமைப்பைக் கொண்டதாகும். இருப்பினும், த.வெ.க ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் (116 நாட்கள்) நிறைவடையும் நிலையில், மாநிலத்தில் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் எண்ணற்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாகக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைச் சம்பவங்கள், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்தல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதேபோல, இளைஞர்களையும் பெரியோர்களையும் சீரழிக்கும் மது மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது.
இவற்றைத் தடுப்பதற்கு என்ன விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளப் போகிறது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க என்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து முதலமைச்சர் விரிவாக விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒரு குற்றம் நடந்தவுடன் வழக்கைப் பதிவு செய்வதோ அல்லது கைது செய்வதோ மட்டுமே ஒரு அரசின் பணி அல்ல; மாறாக, குற்றங்கள் நிகழாமல் தடுப்பதே சிறந்த ஆட்சியின் அடையாளம். அந்த நம்பிக்கையில்தான் மக்கள் புதிய அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். விஜய் அவர்களிடம் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருடைய சட்டமன்றப் பதிலுரை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை.
சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் மக்களின் ஐயங்களுக்குப் பதிலளிப்பதற்கு மாறாக, கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுகவை மட்டுமே இலக்காக வைத்துத் தாக்குவதற்கு இந்தச் சட்டமன்ற நிகழ்வை அவர் பயன்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துபோயிருப்பது உண்மைதான்; ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஊழல் என்பது திமுகவுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.
அவர் ஊழலை ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தால், நடுநிலையோடு எந்தவிதப் பாரபட்சமுமின்றி, “ஊழலைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; அது திமுக செய்திருந்தாலும் சரி, அதிமுக செய்திருந்தாலும் சரி, வேறு யார் செய்திருந்தாலும் சரி” என்று வாதிட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது கவனம் முழுவதும் திமுக மீது மட்டுமே இருந்தது சரியாகத் தெரியவில்லை.
முந்தைய காலங்களில் அதிமுக ஆட்சிக் காலத்திலும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது டான்சி வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுச் சிறை சென்ற சம்பவங்களும் உண்டு.
தற்போதுள்ள அரசியல் சூழலில், தேர்தலின் போது ஸ்டாலினை முதலமைச்சராக முன்னிறுத்தி அரசியல் செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைந்திருக்கிறது. விஜயை “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பேரப்பிள்ளைகள்” என்று முத்திரை குத்தியவர்களின் ஆதரவை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது முரண்பாடாக உள்ளது. மேலும், விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை அதிமுகவுக்குள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுவிட்டு, ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஊழல் ஒழிப்பில் தெளிவான லட்சியம் இருந்தால், இத்தகைய ஆதரவுகளை நிராகரித்துவிட்டுப் புதிய தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை ஒரு சினிமா பாணியில் அமைந்திருந்ததே தவிர, சட்டமன்ற மரபுகளுக்கு உட்பட்டு இருக்கவில்லை. சட்டமன்ற ஜனநாயகத்தின்படி, முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளைக் குறிப்பெடுத்துக்கொண்டு, அதற்கு முறையான பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து, 1974-இல் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் போன்ற பழைய வரலாறுகளைப் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இன்றைய தலைமுறைக்குத் தேவை தற்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளே ஆகும். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மலிந்துள்ள போதைப் பழக்கத்தைத் தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டமன்றத்தில் ஆத்திரப்படுவதற்கோ அல்லது உணர்ச்சிவசப்படுவதற்கோ அவசியம் இல்லை. உரையில் ஆழமான கருத்துகள் இருக்க வேண்டுமே தவிர, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது Live-க்கு நன்றாக இருக்குமே தவிர, Life-க்கு உதவாது. எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டாலும் அல்லது சீண்டினாலும், எட்டு கோடி மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதலமைச்சர் பதவியில் இருப்பவர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் வாக்களிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள். முதலமைச்சர் அவர்கள் மீது நேரடியாகக் குற்றம் சுமத்தும்போது, அதற்குப் பதிலளிக்க அவர்களுக்கு வாய்ப்பளிப்பதுதான் இயற்கை நீதி. அந்த வாய்ப்பை வழங்காமல் அவர்களை ஆத்திரப்படுத்தி வெளியேற்றிய முறை சரியான ஜனநாயக நடைமுறை அல்ல.
பெண்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் மற்றும் தனிநபர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும் செயல்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போதுமே நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அதற்காகக் கடந்த காலச் சம்பவங்களை மீண்டும் மீண்டும் பேசி விஜய் என்ன ஆதாயத்தைப் பெறப்போகிறார்? தற்போதைய ஆட்சியில் 11, 12 வயதுச் சிறுமிகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் நடக்கும்போதும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார்கள் திரும்பப் பெற வைக்கப்படும்போதும், நியாயம் நிலைநாட்டப்படுவதில்லை.
ED போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் வழங்கும் அறிக்கைகள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்பட்டவை. ஒரு அமைப்பு அளிக்கும் முதற்கட்ட அறிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரைச் சட்டமன்றத்தில் குற்றவாளி என்று சித்தரிப்பது சரியல்ல. ஒரு வழக்கில் இறுதித் தீர்ப்பு வர பல நீதிமன்றப் படிகளைத் தாண்ட வேண்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இளைஞர்களும், 1998-க்குப் பிறகு பிறந்த ‘ஜென்-சி’ (Gen Z) தலைமுறையினரும் விஜயின் பேச்சைக் கொண்டாடுவது சினிமா மோகத்தினாலும் கவர்ச்சியினாலும் மட்டுமே. அவர்கள் தமிழ்நாட்டின் ஆழமான அரசியல், சமூக வரலாற்றுப் பின்னணியை முழுமையாக அறிந்திராதவர்கள். ரசிகர்கள் மகிழ்ச்சியடைவதற்காக மட்டும் சட்டமன்றத்தில் பேசுவது ஆக்கபூர்வமான ஆட்சியாகாது. சட்டமன்றத்திற்கு அப்பாற்பட்ட ‘மக்கள் மன்றமே’ உண்மையானது என்பதை அவர் உணர வேண்டும்.
அரசு அதிகாரமும், ஒன்றரை லட்சம் காவல்துறையும் கையிலிருக்கும்போது, தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசுவதை விடவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுப்பதே உண்மையான ஆட்சியியல் அணுகுமுறையாகும். அதை விடுத்து சட்டமன்றத்தில் வீராப்பு பேசுவதும், பூச்சாண்டி காட்டுவதும் நேர விரயமே தவிர வேறில்லை. தவறுகள் செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயங்குவது அவரது பலவீனத்தையே காட்டுகிறது. அவர் இன்னும் தன்னை ஒரு முதல்வராக உணர்ந்ததாக தெரியவில்லை.
முதலமைச்சருக்கு உளவுத்துறை ஐ.ஜி (IG Intelligence) போன்ற உயர்மட்ட அதிகாரிகளே நேரடியாக அறிக்கைகளை வழங்க வேண்டும். அதை விடுத்து, சம்பளத்திற்கு வேலை செய்யும் தேர்தல் வியூக பொறுப்பாளர்கள் மூலம் தகவல்களைப் பெறுவதால், தகவல்கள் வடிகட்டி மட்டுமே முதல்வருக்கு சென்றடையச் செய்யும். இது ஒரு முதலமைச்சருக்குரிய முழுமையான உணர்வைத் தராது. முதலமைச்சர் என்பவர் தன் சொந்தப் பிரச்சினைகளைத் தள்ளிவைத்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களின் அன்றாட நலன்களில் முழு அக்கறை செலுத்த வேண்டும்.









