நிதி ஆயோக் கூட்டம் – முத்திரைப் பதிக்கத் தவறிய தமிழக முதல்வரின் டெல்லி விஜயம்!

அறிக்கைகள்
s2 6 Views
NITI Aayog Meeting – Tamil Nadu Chief Minister’s Delhi Visit Fails to Make a Mark!
Published: 12 Jun 2026

Loading

நிதி ஆயோக் கூட்டம் – முத்திரைப் பதிக்கத் தவறிய தமிழக முதல்வரின் டெல்லி விஜயம்!
…………………………………………………………………..
முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், முதன்முறையாகப் பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற “நிதி ஆயோக்” கூட்டத்தில் விஜய் அவர்கள் கலந்துகொண்டதால் தமிழக மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெருமளவு நிதியைப் போராடிப் பெற்று, முத்திரைப் பதிப்பார் என்று அதீத நம்பிக்கையும் இருந்தது.
ஆனால், அக்கூட்டத்தில் அவர் முன்வைத்த திட்டங்கள் எதுவுமே ஆழமானதாகவோ, அழுத்தமானதாகவோ அல்லது ஏதாவது ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ இல்லை. பல கோரிக்கைகள் திமுக, அதிமுக முதல்வர்கள் ஏற்கனவே முன்வைத்த அதே ‘பழங்கஞ்சி’க் கதையாகவே உள்ளன.
மாநில அரசுகள் எத்தனை முறை திருப்பித் திருப்பி கோரிக்கை வைத்தாலும் “நீட் தேர்வு” ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிந்த பின்னரும், தமிழகத்திற்கு விலக்குக் கேட்டு மீண்டும் கோரிக்கை வைத்து நேரத்தை வீணடித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் முதல் திருச்சி – மதுரை – திருநெல்வேலி வழியாக, கன்னியாகுமாரி வரை 8 -12 வழிச்சாலையும்; திருச்சி – தஞ்சை – நாகை; திருச்சி – கரூர் -கோவை, கோவை – பழனி – மதுரை – இராஜபாளையம் – குற்றாலம்; கோவை – சேலம் – உளுந்தூர்பேட்டை; கோவை – சேலம் – ஓசூர் போன்ற பகுதிகளுக்கு 6 வழிச்சாலைகளும் அமைக்கப்பட்டால் மட்டுமே, அதிவேகமாக அதிகரித்து வரும் சாலைப் போக்குவரத்து நெரிசல்களை அடுத்த 25 வருடங்களுக்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால், சாலைப் போக்குவரத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத அதிகாரிகள் மேம்போக்காகத் தயாரித்துக் கொடுத்த அறிக்கையைத்தான் முதல்வர் அவர்கள் வாசித்துள்ளார்.
அதேபோல, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) கடந்த காலங்களில் மத்திய அரசு 90%, மாநில அரசு 10% எனப் பங்களிப்பு இருந்தது. அது Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) VB-G RAM G. எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஜூலை மாதம் முதல் மத்திய அரசு 60% மட்டுமே வழங்கும், மாநில அரசு 40% பங்களிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரப்பட்ட்டுள்ளது. அதை முதல்வர் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.
மத்திய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் எனக் கருதி எடுத்த முடிவால் வரும் காலங்களில் மாநிலத்திற்குப் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்; இதன் விளைவால் இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமலும் போகலாம். மேலும், இத்திட்டத்தில் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டிய பெண்களே அதிகளவில் பயன்பெறுகிறார்கள்; அவர்களைக் கட்டிட வேலைக்குப் பயன்படுத்த அனுமதி கேட்பது பெண்களின் உழைப்பைக் கசக்கிப் பிழியவே வழிவகுக்கும்.
புதிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை, அதன் பயன்களை பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், “புதிய தேசிய கல்வி திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” எனக் கூறப்பட்டுள்ளது; ஆனால், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியை மட்டும் கேட்பது எவ்விதத்தில் பொருத்தமாக இருக்க முடியும்? எனத் தெரியவில்லை.
12 வருடங்களாகக் கட்டி முடிக்க முடியாமல் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து முடிக்க போதிய நிதி ஒதுக்க வலியுறுத்தாமல், கோவைக்கு ஒரு புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கேட்பதால் என்ன பயன்?
சமூக வலைதளங்களில் சில நூறு கோடிகளை விதைத்து ஒரு பிம்பத்தை கட்டியமைத்து ஓட்டு வாங்குவது வேறு அதற்கு பயன்படும் நிழல் வியூக அமைப்பாளர்கள், எட்டு கோடி தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கான கட்டுமானங்களை கட்டி அமைக்கவும்; நல்ல திட்டங்களை முன் மொழியவும் உபயோகப்படமாட்டார்கள்; ஆட்சிக்கும் அரசியலுக்கும் நல்ல ஆலோசகர்களின் துணையோடு, நிழல்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நிஜத்தை நோக்கி முதல்வர் விஜய் அவர்கள் பயணிக்க வேண்டிய நேரம் இது!
பாரதப் பிரதமர் கலந்து கொண்ட இந்த முக்கியமான கூட்டத்தில் நறுக்கென்று நான்கு முக்கிய வலுவான புதிய திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, திமுக மற்றும் அதிமுக அரசுகள் முன்மொழிந்த சில கொள்கைகளையும், மத்திய பாஜக அரசின் சில திட்டங்களையும் வழிமொழிந்து, மிக மிக முக்கியமான டெல்லி விஜயம் வீண்டிக்கப்பட்டு விட்டது என்றே கருத வேண்டியுள்ளது.
பாதி திராவிடம், பாதி தேசியம் என மாதொரு பாகனான
தமிழக அரசின் நிதி ஆயோக் கூட்டம்..!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
12.06.2026