வெனிசுலாவின் அதிபர் மதுரோ அமெரிக்க அதிரடிப்படையால் சிறைபிடிப்பு! நல்ல எண்ணத்தோடு அல்ல; வெனிசுலாவின் எண்ணெய் வளத்திற்காகவே!

அறிக்கைகள்
s2 125 Views
1
Published: 04 Jan 2026

Loading

வெனிசுலாவின் அதிபர் மதுரோ அமெரிக்க அதிரடிப்படையால் சிறைபிடிப்பு!
நல்ல எண்ணத்தோடு அல்ல; வெனிசுலாவின் எண்ணெய் வளத்திற்காகவே!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் மதுரோ, அமெரிக்க அதிரடிப்படையால் இன்று சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. மதுரோ மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பெருமளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குத் துணையாக இருப்பதாகப் பல புகார்கள் இருந்தாலும், அந்தப் புகார்களுக்காக அவர் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர, டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் செயல் முழுக்க முழுக்கத் தவறானதும் அடாவடியானதுமாகும். உலகெங்கும் ஜனநாயகம் பேசும் ஒரு அரசு, எண்ணெய் வளத்தை அபகரிக்க இது போன்ற செயலில் ஈடுபடுவது நியாயமற்றது.

ஒபாமா ஆட்சியில் ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவே இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் அமெரிக்கக் கடற்படை ஈடுபட்டது. தற்போது அதற்கு நிகரான நடவடிக்கையில், அனைத்துத் தகவல் தொழில்நுட்பத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டு, மதுரோவும் அவரது துணைவியாரும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் அமெரிக்காவிற்கு மீண்டும் ஒரு கரும்புள்ளியாகவே கருதப்படும்.

உலக அளவில் நல்லதைப் பாராட்டவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தகுதியான தலைவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். பல நாடுகள் வலுவுள்ளவன் பக்கமே அணி சேர வாய்ப்புள்ளதே தவிர, இச்செயலை எத்தனை நாடுகள் கண்டிக்கும் எனத் தெரியவில்லை. டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்காகத் தன்னை பரிந்துரை செய்ய வேண்டும் எனப் பல நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்து வருகிறார். வெனிசுலா அதிபரைக் கடத்தியதற்கும் சேர்த்தா அவர் இந்தப் பரிசைக் கேட்கிறார் என்பதே அனைவரின் கேள்வியாகும்.

தற்போது மதுரோ கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கேள்விக்குறியே! அல்லது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு, அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தற்போது நடப்பவை அனைத்தும் நல்ல எண்ணத்தோடு அல்ல; வெனிசுலாவின் எண்ணெய் வளத்திற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
– நிறுவனர் & தலைவர்,
– புதிய தமிழகம் கட்சி.
– 03.01.2026