மத்திய அரசின் உயர் பதவிக்கான இடைச்செருகல் (Lateral Entry) நியமனப் பணி முறையை உடனே ரத்து செய்க.!
249 Views
![]()
மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறை சார்ந்த முக்கிய பொறுப்புகளில் பணி நியமனம் செய்திடும் பணியை மத்திய தேர்வாணையம் எழுத்து மற்றும் தேர்வு முறைகள் மூலம் தேர்ந்தெடுத்து வருகிறது. மத்திய தேர்வாணையத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 21 பொறுப்புக்கள் இதில் அடங்கும். இந்த பணி அமர்த்தலில் பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு 22.5 சதவிகிதமும், இதர பிற்பட்டோருக்கும் இட ஒதுக்கீடுகள் உண்டு. இந்த நெறிமுறைகளுக்கு மாறாக மத்திய அரசினுடைய துறைகளில் மிக முக்கிய பங்காற்றுகின்ற இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் பல துறைகளின் இயக்குநர்கள் பதவிகளுக்கு எவ்விதமான எழுத்துத் தேர்வுகளும் இல்லாமல், Lateral Entry என்ற இடைச்செருகல் மூலமாக 10 இணைச் செயலாளர் பதவிகளுக்கும், 35-க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர் பதவிகளுக்குமான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கோரும் அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
புத்திசாலியான மற்றும் இந்தியத் தேசத்தை கட்டியமைப்பதற்கான எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றும்; இப்பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்றும்; இது மூன்றாண்டுகளுக்கான ஒப்பந்தம் எனவும் தேவைப்பட்டால் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் எனவும், இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்று 77 வருடங்கள் முடிந்து 78வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். கடந்த 77 வருடங்களுக்கு இந்தியா முழுமைக்கும் உள்ள மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் சட்டமன்ற உறுப்பினர்களாகி அமைச்சர்களாகி இருக்கிறார்கள்; அதே போல ஏராளமானோர் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாகி மத்திய அமைச்சர்களும் ஆகி இருக்கிறார்கள்; மத்திய தேர்வாணையம் மூலமும் தேர்வு பெற்று எண்ணற்றோர் உயர் பதவிகளுக்கும் சென்றிருக்கிறார்கள். எனினும் இந்தியாவினுடைய அடிப்படை பிரச்சனைகள் எதற்கும் இன்று வரை முழுத் தீர்வு எட்டப்படவில்லை. இன்றும் 30-40% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள். ஆட்சி – அதிகாரத்திற்கு வரக்கூடியவர்கள் சுயநலத்தோடு ஊழலில் திளைக்கிறார்கள்.
மாணவப் பருவத்திலிருந்தே சாதி, மத, மொழி வேறுபாடுகளை களைந்து ’இந்தியன்’ என்ற ஒற்றை அடையாளத்தோடு இந்திய மக்கள் அனைவரையும் தயார்ப்படுத்துவதற்குத் தவறி விட்டு, மூன்றாண்டு கால ஒப்பந்தத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்து, அவர்கள் மூலமாகத்தான் இந்த தேசத்தையே கட்டி அமைக்கப் போகிறோம் என இது நாள் வரை இல்லாத நடைமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்க நினைப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. மத்திய தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் உள்நோக்கம் கொண்டதாகவும், திட்டமிட்டு யாரையோ அரசினுடைய முக்கியமான துறைகளில் கொண்டு வந்து அமர்த்துவதற்கான நடவடிக்கையோ என்ற மிகப்பெரிய சந்தேகம் வருகிறது; இதன் மூலம் முழுக்க முழுக்க அரசு இயந்திரம் நடுநிலையோடு இருப்பதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது கட்சி சார்ந்த அமைப்பாக மாறுவதற்கும், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் முற்றாக மறுப்பதற்கான வாய்ப்பாகவும் போய்விடும். இப்பொழுது 45 முக்கியமான பதவிகளுக்கு இடைச்செருகல்கள் மூலமாக இப்படி அனுமதித்து, இதே பாதையில் மாநில அரசுகளும் செயல்பட ஆரம்பித்தால் மிகப்பெரிய ஆபத்தில் இது போய் முடியும்.!
மத்திய அல்லது மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மிக உயர்ந்த பதவிகளில் தன் கட்சி சார்ந்தவர்களையே அமர்த்துகின்ற நிலை உருவானால் இந்த நாடு நடுநிலைமைத் தன்மையை இழப்பது மட்டுமல்ல! ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களையே அது தகர்க்கக் கூடியதாக அமைந்து விடும்.!
எனவே, மத்திய தேர்வாணையத்தின் மூலமாக 45 உயர் பதவிகளுக்கு எவ்வித இட ஒதுக்கீடுகளும் கடைப்பிடிக்கப்படாமல், எவ்வித தேர்வுகளும் நடத்தப்படாமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடைச்செருகல்கள் அல்லது பக்கவாட்டு நுழைவுகள் மூலமாக பணி நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பிற மாநிலங்களுக்கு இது போன்ற பணி நியமனங்களில் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டிய மத்திய அரசே பாதை மாறுவது மிகவும் தவறான செயலாகும். இது ”வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானதாகும்”.
எனவே, பக்கவாட்டு நுழைவு – அதாவது Lateral Entry மூலமான UPSC Indicative Advertisement 54/2024 பணி நியமனத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, ExMLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
20.08.2024






